பழங்குடியின இளைஞரின் கிராமம் எப்படி இருக்கிறது?
மத்தியப் பிரதேசத்தில் கோல் பழங்குடியினத்தைச் சேர்ந்த ராவத் (40), மீது பிரவேஷ் சுக்லா (30) என்பவர் சிறுநீர் கழித்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, அரசியல் சூறாவளிக்கு மத்தியில் அவருடைய கிராமம் கவனம் பெற்றது.
லேப்டாப் மற்றும் வரைபடங்களுடன் அமர்ந்திருக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள், அவருக்கு வீடு கட்டுவதை மேற்பார்வையிடுகின்றனர்; ஒவ்வொரு வருகையாளரையும் உன்னிப்பாகக் கண்காணிக்கும் போலீஸ் குழு; மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் உள்ள கரவுண்டி கிராமத்தில், தஷ்மத் ராவத்தின் வீட்டுக்கு அரசியல்வாதிகளும் நேரில் சென்று வருகின்றனர்.
அப்போதிருந்து, விந்தியப் பிரதேசத்தில் உள்ள கோல் பழங்குடி வாக்காளர்கள் மத்தியில் பா.ஜ.க ஆதரவு கோட்டைகளை அகற்ற காங்கிரஸ் முயற்சி செய்தது. பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த சுக்லா சித்தி பா.ஜ.க எம்.எல்.ஏ கேதார்நாத் சுக்லாவின் கூட்டாளி என்று குற்றம் சாட்டினர். இந்தக் குற்றச்சாட்டை எம்.எல்.ஏ. கேதார்நாத் சுக்லா மறுத்தார். முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஜூலை 6ஆம் தேதி போபாலில் ராவத்தை சந்தித்து, பகிரங்க மன்னிப்பு கேட்டு, அவரது கால்களைக் கழுவினார்.
அப்போதிருந்து, ராவத்தின் வீடு அரசியல் தலைவர்கள், உள்ளூர் சமூக செயற்பாட்டாளர்கள், பழங்குடியின தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் சென்று பார்வையிடும் இடமானது.
இதில் மிக முக்கியமாக, மூன்றே நாட்களில் அவரது வீட்டிற்கு வெளியே ஒரு கை பம்ப் அமைக்கப்பட்டது. அவரது குடியிருப்பை பிரதான சாலையுடன் இணைக்க புல்வெளிகளின் குறுக்கே ஒரு சாலை உருவாக்கப்பட்டது. மேலும், வருவாய் அதிகாரிகள் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு புதிய குடியிருப்பு கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கும்போது புதிய செங்கற்கள் கொண்டுவரப்பட்டன.
வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட, மங்கலான சிவப்பு ஓடுகளால் மூடப்பட்ட தனது பழைய செங்கல் மண் சுவரால் அமைக்கப்பட்ட வீட்டிற்கு வெளியே அமர்ந்து, ராவத் அனைத்து நிகழ்வுகளையும் சோர்வாகக் கூறினார். உள்ளூர் மாவட்ட அதிகாரிகளுடன் அவர் பேசும்போது அவரது தொலைபேசி தொடர்ந்து ஒலிக்கிறது. மேலும், பார்வையாளர்கள் எப்போதாவது செல்ஃபி எடுப்பதற்காக வரும்போது அவர் ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
“இதுக்கெல்லாம் நான் சோர்வாக இருக்கிறேன். என் மனம் கலங்குகிறது. முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மட்டுமே எனக்கு உதவினார். அவர் எனக்கு பணம் கொடுத்து என் வீட்டைக் கட்டினார். மற்ற அனைவரும் போட்டோ எடுத்துக்கொள்ள வந்தனர். அரசியல்வாதிகள் என்னை பயன்படுத்தினர். அவர்கள் எனக்கு எதுவும் கொடுக்கவில்லை அல்லது எனக்கு உதவவில்லை. நான் வேலை விஷயமாக வெளியூர் செல்லவில்லை. எனது புதிய வீட்டைக் கட்டும் பணியை பார்க்கும் வரை எனது வீட்டை விட்டு வெளியேற முடியாது” என்று ராவத் தெரிவித்தார்.
அய்ந்தாம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திய ராவத், கூலித் தொழிலாளியாக வேலை செய்து, சிமென்ட் பாக்கெட்டுகள் மற்றும் இரும்புக் கம்பிகளை எடுத்துச் சென்று ஒரு நாளைக்கு 300 ரூபாய் சம்பாதிக்கிறார். அவர் ராஜஸ்தான் மற்றும் அரியானாவின் குர்கானில் பல ஆண்டுகள் வேலை செய்தார். அதற்கு முன்பு அவரது பெற்றோர் இறந்த பிறகு 3 ஆண்டுகளுக்கு முன்பு கரவுண்டிக்குத் திரும்பினார்.
இந்த நேரத்தில், ராவத்தின் குடும்பத்தினர் வெளியே செல்வதற்கு முன் பாதுகாப்பு அதிகாரிகளிடம் – உள்ளூர் ஊர்க்காவல் படையினர் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக உள்ளூர் ஆட்களை காவல் துறையினர் அனுப்புகிறார்கள். சமீபத்தில்தான் ராவத்துக்கு உள்ளூர் வங்கி மற்றும் கோவிலுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தது.
அவரது மனைவி ஆஷா ராவத் (35), 12, 8 மற்றும் 3 வயதுடைய அவர்களுடைய 3 குழந்தைகளை கவனித்து வருகிறார். “இந்த சம்பவத்தால் என் மனம் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளது. நான் சாதாரண வாழ்க்கை வாழ விரும்புகிறேன். நாங்கள் வேலை செய்து பிழைப்பு நடத்த விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
ராவத்தின் வீடு கட்ட முதலமைச்சரின் 5 லட்சத்துடன் 1.5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்தியப் பிரதேசத்தில் பெரும்பான்மையானவர்கள் தினக்கூலிகளாகவும் விவசாயத் தொழிலாளர்களாகவும் வேலை செய்து வருகிறார்கள்.
“விரைவில் அவரது வீட்டைக் கட்ட முயற்சி செய்கிறோம். நிர்வாகம் மூன்று மாதங்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், பருவமழையால், அது தாமதமாகலாம். வீட்டுக்குப் பக்கத்தில் சாலையும் அமைத்து வருகிறோம், இதன் மூலம் கிராமம் முழுவதும் பயன்பெறும். இந்த திட்டப்பணிகள் அனைத்தும் முடியும் வரை இங்கு அமர்ந்து மேற்பார்வை செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது” என்று வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த கிராமம் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் இருந்து 627 கி.மீ தொலைவில் உள்ளது. பழங்குடியினர் ஆதிக்கம் நிறைந்த சித்தி மாவட்டத்தில் உள்ளது. இந்த மாவட்டம் கைமூர், கெஹஜுவா மற்றும் ராணிமுண்டா மலைகளால் சூழப்பட்டுள்ளது. முகலாய பேரரசர் அக்பரின் ஆலோசகரான பீர்பால் பிறந்த மாவட்டம் இது.
சித்தி மாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின்படி, கரவுண்டி கிராமம் 147 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இதில் 30 சதவீதம் பேர் பட்டியல் பழங்குடியினர். பெரும்பாலும் கோல் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பான்மையான மக்கள் தினக்கூலிகளாகவும் விவசாயக் கூலிகளாகவும் வேலை செய்து வருகிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக, மாநில அரசு கிராமத்திற்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகளை வழங்கியுள்ளது.
பழங்குடியினர் அதிகம் உள்ள பகுதிகளில் 2018 தேர்தலில் பா.ஜ.க மோசமாகப் போராடி, 47 பழங்குடியினர் தொகுதிகளில் 16 இடங்களில் வெற்றி பெற்றாலும், சித்தி உள்ளிட்ட விந்தியப் பிரதேசத்தில் கட்சியின் செல்வாக்கு அப்படியே இருந்தது. கோல் பழங்குடியினரின் அசைக்க முடியாத ஆதரவின் காரணமாக, 2018இல் இப்பகுதியில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் 24 இடங்களை பா.ஜ.க கைப்பற்றியது.
கரவுண்டி கிராமம் பிரதான் கங்கா பிரசாத் சாஹு தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “கடந்த மூன்று ஆண்டுகளில், மாநில அரசு 24 மணி நேரமும் மின்சாரம் மற்றும் ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் வழங்குவதில் வேலை செய்துள்ளது. கோல் பழங்குடியினர் மாநில அரசின் திட்டங்களால் மிகப் பெரிய பயனாளிகளாக உள்ளனர் ஆனால், இந்த சம்பவம் எங்கள் கிராமத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் பிரவேஷ் சுக்லாவும் அவரது அரசியல் ஆசைகளும்தான்.
மற்றொரு வீடு, மற்றொரு வாழ்க்கை
ராவத்துக்கு புதிய வீடு கட்டப்பட்டு வரும் நிலையில், 2 கி.மீ., தொலைவில் உள்ள எதிர் தரப்பு வீடும் கவனம் பெற்றுள்ளது. ராவத் மீது சிறுநீர் கழித்த வீடியோ வைரலானதையடுத்து, பிரவேஷ் சுக்லாவின் வீட்டின் பெரும்பகுதி இடிக்கப்பட்டது – இளஞ்சிவப்பு நிற வீட்டில் இப்போது சுவர்களில் துளைகள் உள்ளன. இது அவரது குடும்பத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது.
சுக்லா முதலமைச்சரின் கோபத்தை சம்பாதித்திருக்கலாம், சிலர் இன்னும் அவர் பக்கம் உள்ளனர். அகில பாரதிய பிராமண சமாஜத்தின் (ஏ.பி.பி.எஸ்) மாநிலத் தலைவர் புஷ்பேந்திர மிஸ்ரா தலைமையிலான உள்ளூர் பிராமண அமைப்புக்கள் அவரது குடும்பத்திற்கு ரூ. 51,000 நிதியுதவியை முன்னதாக அறிவித்தன. சில உள்ளூர் கலைஞர்கள் ‘மாட் டோடோ கர் மேரா’ என்ற தலைப்பில் ஒரு பாடலை எழுதியுள்ளனர். உள்ளூர் நாடகக் கலைஞர் அவினாஷ் திவாரியால் பகிரப்பட்டது. இது பேஸ்புக்கில் 1.2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
வீடு இடிக்கப்பட்ட சேதத்தை ஆய்வு செய்த சுக்லாவின் தந்தை ரமாகாந்த் கூறியதாவது: “எனது வீடு ஏன் இடிக்கப்பட்டது? அரசாங்கம் ஏன் எங்களை வீடற்றவர்களாக ஆக்க வேண்டும்? இது என்ன வகையான நீதி? நான் என் மகனைப் பார்க்கச் செல்லவில்லை; அடுத்த நடவடிக்கைக்கு நாங்கள் அனைவரும் பயப்படுகிறோம்.” என்று கூறினார்.
“அரசியல் சதியால் எங்கள் குடும்பம் குறிவைக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார். எனது மகனை மிரட்டி வீடியோவை வைரலாக்கியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” என்று அவர் கூறினார்.
சுக்லா சித்தி மாவட்டத்தில் பி.பி.ஏ பட்டதாரி ஆவார், அவர் சிற்றுண்டி உணவகம் தொடங்குவதற்கு முன்பு இந்தூரில் இருந்து கம்ப்யூட்டர் கோர்ஸுக்குப் போனார். பின்னர் 2018இல் அரசியலுக்கு வந்தார். 2021இல் ஒரு திருமண விருந்தில் இசை நிகழ்ச்சியில் சண்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கை எதிர்கொண்டார் என்று அவரது குடும்பத்தினர் கூறினர்.
ஜூலை 1 ஆம் தேதி, சுக்லாவின் குடும்பத்தினர் பஹாரி காவல் நிலையத்தில் சுக்லாவைக் காணவில்லை என்று புகார் அளித்தனர். தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டி, ஒரு வீடியோவால் வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறினர்.
அவர்களது புகாரில், சுக்லாவுடன் தொடர்புடைய இருவர், சொத்து தகராறில் பிரிந்தவர்கள் உட்பட மூன்று உள்ளூர்வாசிகள் வீடியோவைப் பரப்பியதாக குற்றம் சாட்டியுள்ளனர். அந்த மூன்று பேரும் தங்கள் தலையீட்டை மறுத்துள்ளனர்.
காவல்துறை கண்காணிப்பாளர் (சித்தி) ரவீந்திர வர்மா கூறுகையில், இந்த வழக்கில் 3 பேர் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டு விசாரணையில் இணைந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த பஞ்சாயத்து தேர்தல்களில் அரசியல் போட்டி நிலவியதால், 2020இல் படம்பிடிக்கப்பட்ட வீடியோவை மூவரும் பரப்பியதாக அவர் கூறினார்.
“இந்த வீடியோ 2020இல் எடுக்கப்பட்டது. பிரவேஷ் மற்றும் மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்தனர். மேலும், மது அருந்திய ராவத் ஒரு கடையின் முன் அமர்ந்திருந்தார். இருவரும் ஒருவரையொருவர் அறிந்திருந்தாலும் முன் விரோதம் இல்லை. பஞ்சாயத்துத் தேர்தலைத் தொடர்ந்து நிலத் தகராறுடன் ஏற்பட்ட போட்டியின் காரணமாக அவரது உறவினர்களால் வீடியோ வைரலாக்கப்பட்டது” என்று வர்மா கூறினார்.
பாதிக்கப்பட்ட ராவத் போபாலில் இருந்து திரும்பிய பிறகு, உள்ளூர் ஊடகங்களிடம் சுக்லாவை மன்னிக்க விரும்புவதாகக் கூறினார். இருப்பினும், அவரது வீட்டினர் மன்னிக்கவில்லை என்று கூறினர். “உள்ளூர் ஊடகங்களால் அதைச் சொல்ல எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. நான் ஏன் இந்த மனிதனை மன்னிக்க வேண்டும்? அவருக்கு மிகக் கடுமையான தண்டனையை அளிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.” என்று கூறினார்.