சென்னை, டிச.18- வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடைபெற உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநில தொழில்நுட்பக்கல்வி ஆணையரும், தொழில்நுட்பத்தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான டி.ஆபிரகாம் வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சுருக்கெழுத்து அதிவேக (ஹை ஸ்பீடு) தேர்வு பிப்ரவரி 15 மற்றும் 16ஆம் தேதிகளிலும், சுருக்கெழுத்து இளநிலை, இடைநிலை முதுநிலை தேர்வுகள் பிப்ரவரி 22 மற்றும் 23ஆம் தேதிகளிலும், கணக்கியல் இளநிலை, முதுநிலை தேர்வுகள் பிப்ரவரி 24ஆம் தேதிகளிலும், தட்டச்சு இளநிலை, முதுநிலை அதிவேக தேர்வுகள் மார்ச் 1 மற்றும் 2ஆம் தேதியும் நடைபெற உள்ளன.
இதற்கான இணைய வழி விண்ணப்ப பதிவு 16.12.2024 அன்று தொடங்கியது. விண்ணப்பதாரர்கள் www.,tndtegteonline.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 17ஆம் தேதி ஆகும். அதன்பிறகு ஜனவரி 19ஆம் தேதி வரை அபராத கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். இணைய வழியில் விண்ணப்பத்தில் ஜனவரி 19 முதல் 21ஆம் தேதிக்குள் திருத்தம் செய்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கீழடி 1,2ஆம் கட்ட அகழாய்வு அறிக்கை வெளியிட தாமதம் ஏன்?
ஒன்றிய அரசு மழுப்பல்
சென்னை, டிச.18- கீழடி 1,2ஆம் கட்ட அகழாய்வு அறிக்கை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கீழடியில் நடந்த முதல், இரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடுவதில் ஏன் தாமதம் என்று மக்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராணிசிறீகுமார் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்; 2015, 2016இல் நடைபெற்ற கீழடி முதல், 2ஆம் கட்ட அகழாய்வு – அறிக்கை கடந்த ஆண்டே ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை வெளியிடுவதற்கு முன் நிபுணர்களை கொண்டு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
முழுமையான ஆய்வுக்கு பிறகே அரசு விதிகளின்படி அகழாய்வு அறிக்கையை வெளியிட முடியும். கீழடியில் 1,2,3ஆம் கட்ட அகழாய்வு பணிகளை ஒன்றிய அரசின் தொல்லியல்துறை மேற்கொண்டது. 4 முதல் 9 கட்ட அகழாய்வுகளை தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை நடத்தியது. தமிழ்நாடு அரசு நடத்திய அகழாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில் முதல் மற்றும் 2ஆம் கட்ட முடிவுகள் வெளியாகவில்லை. முதல் மற்றும் 2ஆம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தபோது 9 மாதத்தில் அறிக்கை வெளியிடப்படும் என ஒன்றிய அரசு கூறியிருந்தது. 9 மாதங்கள் கடந்துவிட்டபோதும் இதுவரை ஒன்றிய அரசு கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிடவில்லை. நேற்று ஒன்றிய அமைச்சரின் பதிலிலும் – அறிக்கை வெளியிடப்படும் என்று உறுதி அளிக்காததால் அறிக்கை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.