அமெரிக்காவில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட இணையரின் இந்திய வரவேற்பு நிகழ்ச்சிக்கு ‘‘பிராமண மகாசபா’’ மற்றும் ‘‘பஜ்ரங்தள்’’ எதிர்ப்பு தெரிவித்து இந்த விழாவில் கலந்துகொள்ளும் இளைஞர்கள் ஹிந்து கலாச்சாரத்தை மதிக்க மாட்டார்கள் என்று கூறி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையில் புகார் அளித்ததால் வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் நகரில் இருந்து அமெரிக்கா சென்று பணிபுரியும் ஒருவர் அலிகரைச் சேர்ந்த பார்ப்பனப் பெண் ஒருவரை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். சிறப்பு திருமணச் சட்டத்தின் படி அமெரிக்காவில் உள்ள சான்பிரான்ஸிஸ்கோ நகரின் இந்திய தூதரகத்தில் உள்ள துணைத் தூதர் தலைமையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
பின்னர் இருவரும் இந்தியா வந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தனர். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அழைப்பிதழைக் கொடுத்து, விழாவிற்கு அரங்க ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு விட்டன.
இந்த நிலையில், ‘பிராமண மகாசபா’ அமைப்பினர் இது தொடர்பாக உள்ளூர் பஜ்ரங்தள் மற்றும் கர்ணி சேனா என்ற ஹிந்துத்துவ அமைப்பிடம் கூறி இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
காரணம் மணமகன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவித்தனர்.
இதனை அடுத்து பஜ்ரங்தள் மற்றும் ஹிந்து கர்ணி சேனா அமைப்பினர் மணமகனின் வீட்டிற்குச் சென்று ரகளை செய்தனர். மேலும் அலிகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மணமகன் வீட்டார் மீது புகார் கொடுத்துள்ளனர்.
இது தொடபாக அலிகர் மாவட்ட பஜ்ரங்தள் ஒருங்கிணைப்பாளர் கவுரவ் சர்மா கூறும் போது, ‘‘நாங்கள் வயது வந்த நபர்களின் திருமணத்திற்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் செய்தது தவறு – அமெரிக்கா சென்று நமது கலாச்சாரத்தை மீறி உள்ளனர்.
மேலும் அவர்களின் திருமணத்தாலும், அவர்கள் அலிகரில் நடத்த இருக்கும் வரவேற்பு நிகழ்வாலும் இங்குள்ள இளைஞர்களும் கலாச்சாரத்தை மீறும் வகையில் தூண்டப்படுவார்கள். அதே நேரத்தில் இந்த திருமணத்தால் பார்ப்பனப் பெண்ணின் வீட்டார் தவறான கருத்தை சமூகத்தில் விதைக்கின்றனர். வெளிநாடு சென்றாலும் எங்கு இருந்தாலும் ஹிந்துக் கலாச்சாரம் என்பது ஹிந்து கலாச்சாரம் தான் – இதனை உலகிற்கு உணர்த்தவே நாங்கள் இந்தப் போராட்டத்தில் இறங்கி உள்ளோம்.
காவல்துறையினரும் சமூகத்தில் இருபிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்த முயலுதல் மற்றும் மத உணர்வுகளை புண்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளோம். இவர்களின் வெளிநாட்டு நடவடிக்கையை கணகாணிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளோம்’’ என்று கவுரவ் சர்மா கூறினார்.
பார்ப்பன அமைப்பு மற்றும் பஜ்ரங் தள் குண்டர்களின் மிரட்டலை அடுத்து 21 ஆம் தேதி நடக்க இருந்த வரவேற்பு விழாவை ரத்து செய்துவிட்டு மணமக்கள் உடனடியாக அமெரிக்கா புறப்பட்டனர். இங்கு இருந்தால் வழக்குப் பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஹிந்து அமைப்புகள் முயலலாம் என்று அச்சத்தில் அவர்கள் சென்றுவிட்டதாக மணமக்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பி.ஜே.பி. ஆட்சியில் இந்தியா காட்டு விலங்காண்டித் திசையை நோக்கி, புயல் வேகத்தில் சுழன்றடிக்கிறது என்பதற்கு, இந்த நிகழ்ச்சி ஒன்றே போதாதா!
சட்டப்படியான வயது அடைந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், அதனைத் தடை செய்வதற்கு சட்டத்திற்கோ, மற்றும் எந்த சக்திகளுக்கோ உரிமை கிடையாது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்து, மனு தர்மத்தைக் கொண்டுவர வேண்டும் என்று துடிக்கிற சங்பரிவார்களின் அட்டகாசத்திற்கு அளவேயில்லையா? காவல்துறையும் மாவட்ட ஆட்சியரும் பொது அறிவும், சட்ட அறிவும் இல்லாதவர்களா? ஹிந்துத்துவாவின் சோதனைக் கூடமாக சாமியார் ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி உ.பி.யில் நடந்து கொண்டு இருக்கிறது. இதனை வளர விட்டால் நாட்டில் மனித உரிமை ஒழிந்து விலங்குத்தனமான வல்லாட்சிதான் நடைபெறும் – எச்சரிக்கை!