சென்னை, டிச.18- வரும் 22-ஆம் தேதி திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, இன்று (18-ஆம் தேதி) திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கனமழை எச்சரிக்கை, நாடாளுமன்ற கூட்டத் தொடா் ஆகிய காரணங்களால் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் விடுமுறை நாளை வரும் 22.12.2024 (ஞாயிறு) அன்று கூட்டம் நடைபெறவிருப்பதாக தனது அறிவிப்பில் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில்
தமிழ் பாடம் கட்டாயம் இல்லை என்ற வதந்திக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு
சென்னை, டிச.18- 2024-2025 கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் இல்லை என கல்வித்துறை அறிவித்துள்ளது என்றும், சிறுபான்மை மொழிகளில் தேர்வை எழுதிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வருகிறது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதனை தமிழ்நாடு அரசு மறுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடம் கட்டாயமில்லை என அரசு அறிவித்ததாக பொய் பரப்பப்படுகிறது. தமிழ்நாடு அரசு கடந்த 2006ஆம் ஆண்டு கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தின் மூலம் அனைத்து வகையான பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ் அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பான வழக்கில் மொழிவாரி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாட தேர்வு எழுதுவதில் இருந்து 2020 முதல் 2022ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்றம் விலக்கு அளித்து இருந்தது. இதை உறுதி செய்த உச்சநீதிமன்றம் தேர்வில் விலக்கு என்பது 2023ஆம் ஆண்டுக்கும் பொருந்தும் என தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில், மொழி சிறுபான்மை பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தமிழக மொழி சிறுபான்மை பேரவையினரின் கோரிக்கையை ஏற்று 2023-2024 கல்வியாண்டுக்கு மட்டும் கட்டாய மொழிப்பாடமான தமிழ் தேர்வு எழுதுவதில் விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதை பொதுவாக அனைத்து மாணவர்களுக்கும் அறிவித்ததாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதுபோன்ற தகவல்களை நம்பவேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக அறிவிப்பு
ஈரோடு, டிச.18- 2023-ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கூட்டணி நடைமுறைப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என தி.மு.க. தலைமை அறிவித்தது. அதன்படி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக சட்டமன்றத்தில் நுழைந்தார்.
இந்த நிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. இந்த தகவல் கடிதம் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். ஏற்கெனவே காலியாக உள்ள சட்டப் பேரவை தொகுதிகள் அல்லது பிற மாநில சட்டப் பேரவை தேர்தல்களோடு, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில் ஒரே ஆட்சி காலத்தில் 2 முறை இடைத்தேர்தலை ஈரோடு கிழக்குத் தொகுதி சந்திக்க இருக்கிறது. வாக்காளர்கள் 3ஆவது முறையாக வாக்களிக்கப் போகிறார்கள்.