* கவிஞர் கலி. பூங்குன்றன்
சிறிவில்லிப்புத்தூரில், கோயிலில் ‘இசைஞானி’ இளையராஜாவுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை தனிப்பட்ட இளையராஜா என்பவருக்கு இழைக்கப்பட்ட ஒன்றல்ல.
பார்ப்பனர் அல்லாதவர்களை ‘சூத்திரன்’ என்றும், ‘பஞ்சமன்’ என்றும் இன்றும் இறுமாந்திருக்கக் கூடிய – கருதக் கூடிய பார்ப்பன ஆணவத்தின் வெளிப்பாடு.
மார்கழி மாதத்தில் வைணவக் கோயிலில் நடக்கும் ஆழ்வார்ப் பதிகங்களைப் பாடும் கச்சேரிக்குச் சிறப்பு விருத்தினராக அழைக்கப்பட்ட இளையராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கடந்து போய்விட முடியாது.
சாமியை அர்த்த மண்டபத்தில் ஏறி வழிபடச் சென்றபோது தடுக்கப்பட்டுள்ளார்.
மேள தாளங்களோடு வரவேற்பெல்லாம் கொடுப்பார்கள் – பரிவட்டம் கட்டுவார்கள். ஆனால் ஒரு முக்கியமான இடத்தில் முகத்தில் கரியைத்தடவி விடுவார்கள். அதுதான் பார்ப்பனீயம்.
இப்படித்தான் சிதம்பரம் நடராஜன் கோயிலில் கனகசபை மேடையில் ஓதுவார் – பெரியவர் ஆறுமுகசாமி திருவாசகம் பாடச் சென்றபோது தீட்சத அர்ச்சகப் பார்ப்பனர்கள் முதியவர் என்றும் பாராமல் அடித்து உதைத்து, கையையும் முறித்தனர்.
நீதிமன்றம் வரை சென்று சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் ஏறித் தரிசிக்கலாம் என்று தீர்ப்புப் பெற்ற பிறகும் இவ்வாண்டு ஆனி திருமஞ்சனத்தின்போது கனகசபையில் நின்று தரிசனம் செய்யக் கூடாது என்று போர்டு எழுதி வைத்தனர் கோயில் தீட்சதப் பார்ப்பனர்கள்.
எதிர்த்துப் போர்க் கோலம் பூண்டவர்கள் கருப்புச் சட்டைக்காரர்களல்லர்; பகுத்தறிவுவாதிகளும் அல்லர்; மாறாக பக்த சிரோன்மணிகள்தான்.
கோயில் கட்டியவர்கள் தமிழ் மன்னர்கள் – கோயிலை உருவாக்க உடலுழைப்பு கொட்டியவர்கள் தமிழர்கள்! ஆனால் ஜீரணத் தோரண பூர்ண கும்பாபிஷேகம் என்ற பெயரில் கலசத்தில் பாலையும், ஜலத்தையும் கொட்டி முணு முணுக்கும் மந்திரங்களை ஓதிய மாத்திரத்திலேயே கோயில் பார்ப்பனர்கள் வசம் சென்று விடுகிறது! புரோகிதச் சுரண்டல் தொழில் ஜாம் ஜாம் என்று நடக்கிறது.
மறைந்த மூத்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் ஆத்ம நண்பரும், ஆலோசகருமான காஞ்சிபுரம் அக்னி ேஹாத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் இவ்வாறு கூறுகிறார்.
‘‘பூக்களைப் பறித்து தினமும் பூ+செய், பூசை செய்வது தான் தமிழர் பண்பாடு, இந்தப் பண்பாட்டின் குறுக்கே வந்தார்கள் பிராமணர்கள்.
‘முதலில் நீ பூ போட்டுக் கொண்டே இரு! நான் வேதம் சொல்கிறேன்!’ என்று வெளியே நின்றார்கள்.
காரணம் நீ பகவான் பக்கத்தில் நின்று ஏதாவது சொன்னால் அவன் மேல் எச்சில் தெறிக்கும். அதனால் ‘நீ பூ போட்டபடியே இரு. நான் சத்தம் போட்ட படியே இருக்கிறேன்’ இதற்குப் பெயர் அத்யயன பட்டர்.
கொஞ்ச நாள் ஆனது. அத்யயன பட்டரே உள்ளே வந்து விட்டார். உள்ளே எ்னறால் கர்ப்பக் கிரகத்துக்குள்.
இனி நான் பார்த்துக் கொள்கிறேன். நீ வெளி வேலைகளைப் பார்.
அடுத்து ஆகமக்காரர்களின் ஆதிக்கம் அவர்கள் முழு முதல் சமஸ்கிருதக்காரர்கள் ஆனதால் தமிழன் வெளியே நிறுத்தப்பட்டான். சமஸ்கிருதர்கள் உள்ளே சென்றார்கள். தமிழ்ப் பூக்களைத் தூவி சமஸ்கிருத அர்ச்சனை நடத்தினார்கள்’’ என்கிறார் தாத்தாச்சாரியார்.
(நூல்: ‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’)
இதை எழுதுவது திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அல்ல; சாட்சாத் சங்கராச்சாரியாரின் ஆத்ம நண்பர் அக்னிஹோத்திரம் இராமானுச தாத்தாச்சாரியார்தான்.
தமிழன் மட்டுமல்ல; கர்ப்பக்கிரகத்திலிருந்து தமிழும் வெளியே தள்ளப்பட்டது.
எதற்கெடுத்தாலும் மரபு மரபு என்கிறார்களே – பழனி கோயில் முருகனை நவபாஷாண மூலிகைகளால் உருவாக்கியவர் யார்? சித்தரான போகர்தானே – வாழையடி வாழையாக பழனி முருகனுக்கு பூசை செய்தவர்கள்
அவர் வழி வந்த பண்டாரத்தார்தானே!
இப்போதைய நிலை என்ன? மரபு வழி வந்த பண்டாரத்தார் வெளியேற்றப்பட்டு பார்ப்பனர்கள் பூசை செய்வது எப்படி?
பார்ப்பனர்களுக்கு வசதியைப் பொறுத்ததுதான் மரபும் – ஆகமங்களும்.
ஆகமங்கள்பற்றி அள்ளி விடுகிறார்களே! சைவக் கோயில்களாகட்டும், வைணவக் கோயில்களாகட்டும், அங்கே கர்ப்பக்கிரகத்தில் அர்ச்சகராக ேவலை செய்வோரில் எத்தனைப் பேருக்கு உண்மையாக ஆகமம் பற்றி தெரியும் – முறைப்படி மந்திரங்களை ஓதத் தெரியும்?
தமிழ்நாடு அரசு 2006ஆம் ஆண்டில் இந்து சமய அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், உரிய பயிற்சியும், தகுதியும் உள்ள அனைவரும், ஜாதி வேறுபாடின்றி, அர்ச்சகர் ஆகலாம் என முடிவெடுத்தது. அது தொடர்பான பல அம்சங்கள் குறித்து முடிவெடுக்கத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காக நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் சிவாச்சாரியார்களும், பட்டாச்சாரியார்களும் இடம் பெற்றிருந்தனர் என்பது முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் முக்கிய கோயில்களுக்கெல்லாம் சென்று ஆய்வு செய்தனர்.
அதிர்ச்சியூட்டக் கூடிய தகவல்களைக் கொண்ட அந்த ஆய்வு அறிக்கை தமிழ்நாடு அரசிடம் அளிக்கப்பட்டது.
‘‘கோயில்கள், ஆகமங்கள் மாற்றங்கள்’’ என்ற தலைப்பில் நூலாகவும் வெளிவந்துள்ளது.
இந்நூலின் 67ஆம் பக்கத்தில் சொல்லப்பட்ட புள்ளி விவரம்:
‘‘வைணவ திவ்ய தேசங்கள் 108இல் 106க்கு சென்று வந்துள்ள உ.வே.வாசு நம்பிள்ளை ராமானுஜாச்சாரியார், அந்த 106 திவ்ய தேசங்களில் 30 கோயில்களில் மட்டுமே ஆகமம் தெரிந்தவர்கள் அர்ச்சகர்களாக உள்ளனர் என்றும், பெரும்பாலான கோயில்களில் ஆகமங்கள் தெரியாதவர்களே அர்ச்சகர்களாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
சைவக் கோயில்களில் மட்டும் என்ன வாழ்கிறது? ‘பிரசத்தி பெற்ற’ சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள 41 அர்ச்சகர்களில் 4 அர்ச்சகர்களுக்கு மட்டுமே ஆகம விதிகள் – தெரிந்துள்ளன.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 116 அர்ச்சகர்களுள் ஆகமம் பயின்றவர்கள் 28 நபர்கள் மட்டுமே.
இந்த யோக்கியதையில்தான் அர்ச்சகர்கள் சுரண்டல் தொழிலை நடத்துகின்றனர். அரசிடம் அளிக்கப்பட்ட அதிகாரம் பூர்வ அறிக்கை இந்த உண்மைகளை வெளிச்சமாக வெளியில் கொண்டு வந்துள்ளது.
காஞ்சிபுரம் மச்சேந்திரநாதர் கோயில் அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதன் கோயிலுக்கு வழிபாடு செய்ய வந்த பெண்களிடம் கோயில் கர்ப்பக்கிரகத்தில் வைத்து பாலியல் சல்லாபம் செய்தது ஊர் சிரிக்கவில்லையா?
அதனை வீடியோவில் எடுத்து, அந்தப் பெண்களை அச்சுறுத்தி அடிக்கடி அவர்களைக் கோயிலுக்கு வரவழைத்து பாலியல் தொடர்பு கொள்ளவில்லையா?
இசைஞானி இளையராஜா சென்று வந்த அதே சிறீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் பத்ரிநாத் என்ற அர்ச்சகப் பார்ப்பான் பக்தைகளிடம் சல்லாப லீலை நடத்தியது நாற்றமெடுத்ததே!
இவ்வளவு ஆகம மீறல்களையும், ஒழுக்கக் கேடுகளையும் செய்யும் ஒரு கூட்டம் ஒரு இளையராஜா கோயில் அர்த்த மண்டபத்தில் நின்று சாமி தரிசனம் செய்தால் தோஷமாகி விடுமாம் – மரபு கெட்டுப் போய் விடுமாம்!
இதே இசைஞானி இளையராஜா சீரங்கம் மொட்டைக் கோபுரம் ராஜ கோபுரமாக புதுப்பிக்கப்பட்டபோது ஜீயரிடம் ரூ.8 லட்சம் நன்கொடை கொடுத்ததுண்டே! (ஆறாவது நிலைக் கோபுரம்)
கும்பாபிஷேகத்தின் போது யார் யாரோ சிறப்பிக்கப்பட்டார்கள் – ஆனால் அந்தப் பட்டியலில் இளையராஜா இல்லை. சிறீவில்லிப்புத்தூர் பிரச்சினையோடு இதையும் இணைத்தும் பார்த்தால் தான் உள்ளுக்குள் அழுத்தமாகக் குடியிருக்கும் ‘‘தீண்டாமை’’யின் நஞ்சு புலப்படும். பட்டும்… அவர் உணராததுதான் ஆச்சரியம்!
இசைஞானி இளையராஜா என்ற தனி மனிதருக்காக இவற்றை எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு எழுதவில்லை.
அவர் ஒரு குறியீடுதான். அவர் நடத்தப்பட்ட விதம் நாட்டின் நடப்பை வெளிப்படுத்தவில்லையா?
நாட்டின் பெரும்பான்மையான – இம்மண்ணுக்குரிய மக்களை ‘சூத்திரர்கள்’ என்றும், ‘பஞ்சமர்கள்’ என்றும் காலில் போட்டு மிதிக்கவில்லையா?
இவ்வளவுக்கும் எந்த வகையிலும் சுயமரியாதையை நான் இழக்க மாட்டேன் என்று மார் தட்டுகிறார். நமது இசைஞானி! அந்த உணர்ச்சி இருப்பது நல்லதுதான்!
ஆனால் அந்த உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய இடத்தில் வெளிப்படுத்தவில்லையே என்பதுதான் நமது வேதனை!
நூறு ஆண்டுகளுக்கு முன் வைக்கத்தில் தீண்டாமையை எதிர்த்துப் போராடி வெஞ்சிறை சென்று, இறுதிவெற்றி பெற்ற வைக்கம் வீரர் தந்தை பெரியாருக்கு நூற்றாண்டு விழா வெகு எழுச்சியோடு, இரண்டு மாநில முதலமைச்சர்கள் பங்கு கொண்டு அரசு விழாவாகவே நடத்தப்பட்ட ஒரு கால கட்டத்தில், பல்லாயிரக்கணக்கான மக்கள் வெற்றி விழாவில் பங்கேற்று வீர உணர்ச்சியோடு வைக்கத்திலிருந்து திரும்பியிருக்கும் இந்தத் தருணத்தில் – மூன்று நாள் இடைவெளியில், ஒரு தமிழர்மீது அதுவும் இசை உலகில் கொடி கட்டிப் பறக்கும் ஒரு தமிழர்மீது தீண்டாமை முத்திரையைப் பார்ப்பனீயம் குத்தி அவமதிக்கிறது என்றால் சுயமரியாதை உள்ளவர்கள் கிளர்ந்துதானே எழ வேண்டும்.
கருவறையில் அர்ச்சகர் உரிமை ஓரளவு வெற்றி பெற்ற நிலையில் இப்பொழுது கனகசபை மேடையிலும் அர்த்த மண்டபத்திலும் ஏறப் போராடும் நிலையா?
வைக்கத்தில்கூட வழக்குரைஞர் பி.என். மாதவனுக்கு ஏற்பட்ட அவமதிப்புதான் வைக்கம் போராட்டமாக வெடித்து எழுந்து வரலாற்று வெற்றியாக நங்கூரம் பாய்ச்சியுள்ளது!
தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வைக்கம் போராட்டம் தேவையோ என்ற எரி நெருப்பு சுயமரியாதையுள்ளவர்களி்ன நெஞ்சங்களில் கனன்று கொண்டுள்ளது!
வாழ்க பெரியார்!
வெல்க திராவிடம்!