மணமேடை மீது சிறீநாயக்கரின் திருவுருவப்படம் மலர் மாலையால் அலங்கரிக்கப்பட்டு மணமக்களை ஆசீர்வதிக்கும் பாவனையாய் மணமேடை மீது தொங்கவிடப்பட்டிருந்தது. மணமக்கள் சுதேச உடையுடன் துலங்கினர். மணப்பந்தல் நிறைய எண்ணிறந்த கனவான்கள் அமர்ந்திருந்தனர். அருத்தமற்ற சடங்குகளெல்லாம் ஒழிக்கப்பட்டு ஈப்போ பேரா இந்து மகாசன சங்க காரியதரிசி திரு.அய்யாறு அவர்களால் திரு. கலியபெருமாள் புதல்வி ஸ்ரீமதி ஜானகியம்மாளுக்கும் கனம் கே. அப்பாவு பண்டிதருக்கும் திருமணமியற்றப்பட்டது. 12 வயதுள்ள மகாலிங்கம் என்னும் சிறுவன் இனிய சாரீரத்துடன்,
வாழ்க வைக்கம் வீரன் வாழ்க வாழ்க வாழ்கவே!
வீழ்க வைதிகம் வீழ்க வீழ்க வீழ்கவே!
எட்டுத்திக்கும் தன்மதிப்புப் பற்றி எழுகவே!
ஏழை மக்களைக் கெடுக்கும் வேதம் ஒழிகவே!
நாட்டுப் பெண்கள் பட்டதுன்பம் ஓட்ட மெடுக்கவே!
நயவஞ்சகக் காரப்பார்ப்பான் நைந்து சாகவே!
என்னும் வாழ்த்துப்பாட்டு பாடி முடிந்த பின் டாக்டர் என்.கே.மேனான் அவர்கள் தலைமையில் திரு. அய்யாறு அவர்களும் கோலாபிறை திரு.ராஜகோபால் நாயுடு அவர்களும் மூடபழக்க வழக்கங்களைப் பற்றியும் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும் சுமார் 2 மணி நேரம் வரையிலும் மூட வைதீகப்பித்தம் கலங்கி ஓடப் பேசினார்கள். பலவிடங்களிலிருந்து சுயமரியாதையைக் குறிப்பிட்டு வாழ்த்துக் கடிதங்களும் தந்திகளும் வந்துகுவிந்தன. வந்திருந்த வர்களெல்லாம் இந்த சுயமரியாதைத் திருமணத்தைப் போல் நடத்த வேண்டுமென உறுதி கொண்டனர்.
‘மருத்துவனுக்கு’ ரூ. 5ம், ‘குடி அரசு’க்கு ரூ. 3ம், ‘திராவிடனு’க்கு ரூ. 3ம் நன்கொடை அளிக்கப்பட்டன.
எ.கே.துரைசாமி.
– குடிஅரசு – 17.02.1929