ஒரு கோடி ரூபாயும் இருபத்தோரு நாள் உண்ணாவிரதமும் முப்பதினாயிரம் பேர் சிறைவாசமும்

2 Min Read

இந்தியாவானது அந்நிய ஆட்சிக்குட்பட்டு அடிமைத் தன்மை அடைந்து அவதிப்பட ஆரம்பித்த காலமுதல் இதுவரையிலும் விடுதலை பெறுவதற்காக மகாத்மாவின் காலத்தில் கொடுத்த விலைபோல் ஒருபொழுதும் கொடுத் திராதென்றே நினைக்கிறோம். ஆனால், நமது தேசத்திற்கு மாத்திரம் இன்னமும் விடுதலை பெறும் காலம் வரவில்லையென்றே சொல்லவேண்டும். மூன்று மாதத்திற்குள் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்தும், மாதம் ஆயிரம், இரண்டாயிரம், ஐயாயிரம், ஐம்பதினாயிரம் ரூபாய் வரும்படி உள்ள வக்கீல்கள் உள்பட சுமார் ஐநூறு பேர் தங்கள் தொழிலை நிறுத்தி, தேசத் தொண்டில் இறங்கியும், ராஜபோகத்தில் இருந்தவர்கள் முதற்கொண்டு ஜமீன் தார்கள், பிரபுக்கள், வியாபாரிகள் உள்பட ஏழைகள் வரை முப்பதினாயிரம் பேர் சிறைக்குச் சென்றும், மகாத்மா இரண்டு வருடம் சிறையில் வதிந்தும் சிறையினின்றும் வெளிப்போந்து இருபத்தொருநாள் உண்ணாவிரதமிருந்தும் இந்தியா சுயராஜ்யம் அடையவில்லை என்று சொன்னால் இனி எப்படி, எப்பொழுது, எவரால் விடுதலை அடையமுடியும்? இனி மறுபடியும் இந்தியா சுயராஜ்யமடைய நாம் பாடுபட வேண்டுமானால் முன் அனுபவங்களை ஆதாரமாக வைத்து அவற்றிலுள்ள பிழைகளைத் திருத்தியும் ஏன் நமக்கு சுயராஜ்யம் கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் கண்டுபிடித்தும் அதற்கு வேண்டிய முறைகளைக் கையாள வேண்டுமே அல்லாமல் வீணாக இடித்த மாவையே இடித்துக் கொண்டிருப்பது பயித்தியக்காரத்தனமேயாகும். மகாத்மா காந்தி “ஸ்டேட்ஸ்மேன்” பத்திரிகைக்கு எழுதிய பதிலில் ஒத் துழையாமை இயக்கம் தோல்வி உற்றதற்குத் தகுந்த காரணத்தைக் காட்டியிருக்கிறார்.

தியாகம்

“படித்த வகுப்பார் நான் சொல்லுகிறபடி கேட்பார்களேயானால் இப்போழுதே ஒத்துழையாமைத் திட்டத்தை அமுலுக்குக் கொண்டுவந்து சித்தி பெறச் செய்துவிடுவேன்” என்று சொல்லியிருக்கிறார். இதிலிருந்தே இவ்வளவு ரூபாயும், இவ்வளவு தியாகமும், இவ்வளவு பேர் சிறை சென்றதும், மகாத்மா சிறையில் வதிந்ததும், உண்ணாவிரதமிருந்ததும் இப்படித்த வகுப்பினராலேயே பாழடைந்து விட்டதென விளங்கவில்லையா? அஃதோடுமாத்திரம் அல்லாமல் எவ்வளவு பெரிய தத்துவத்திற்காக வசூலிக்கப்பட்ட பணமும், செய்யப்பட்ட தியாகங்களும் சிலர் சட்டசபைக்கும், முனிசிபாலிட்டி, தாலுகா போர்டிற்குப் போவதற்கும், சிலர் மேயர் ஆவதற்கும் அது உதவினதோடு அல்லாமல் விபச்சாரத்தன்மை என்று சொல்லத் தகுந்த மாதிரி மேடைகளுக்கு வரும்போது மாத்திரம் கதர் உடுத்தி வந்தால் பெரிய காங்கிரஸ்காரனும் தேசபக்தனும் ஆகிவிடலாம் என்ற தீர்மானத்திற்கு விடுதலைச் சபையாகிய காங்கிரஸில் மகாத்மா காந்தியே இடம் கொடுக்கும்படி வந்து விட்டதென்றால் இனி மறுபடியும் பணம் கொடுப்பதும் மக்கள் தியாகம் செய்வதும் என்பது சுலபத்தில் ஜனங்களிடத்தில் எதிர்பார்க்கக்கூடிய காரியமா? ராவணன், இரண்யன் போன்ற பலாஷ்டியர்கள் அருமையாய்; செய்த தவத்தின் பலனையும், அற்புதமான கல்வி அறிவையும் – சீதையைக் கற்பழிக்கவும், தன்னையே தெய்வமெனக் கொள்ளவும் முறையே உபயோகப்படுத்திக் கொண்டது போல் மக்களின் தியாகமும், அறிவும் உபயோகப்படுத்தப்படாமல் எவ்வகையிலும் சந்தேகமற்றதும், பாமரஜனங்களுக்கு நம்பிக்கை உள்ளதும், யோக்கியமானவர்களுடைய தியாகமே தேவை உள்ளதாகவும் அடிக்கடி மாறுபாடு படக்கூடாததுமான ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்து கொண்டு அத்திட்டத்திற்கு ஒத்தவர்களை மாத்திரம் அதில் சேர்த்துக் கொண்டு படித்த வகுப்பினர் எனப்படுவோரை விலக்கி பலனைப் பற்றி பயப்படாமல் நடத்தக்கூடிய காலம் என்று மகாத் மாவுக்கு வருகிறதோ, அன்றுதான் இந்தியாவின் ஏழை மக்களுக்கு விடுதலை ஏற்படும்.

– குடிஅரசு – தலையங்கம் – 09.08.1925

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *