சோழங்கநல்லூர் அமுதா
ஒரு கிராமமே, ஒரு பெரியார் தொண்டர் சொன்னபடி இருந்திருக்கிறது என்றால், அது எவ்வளவு பெரிய வியப்பு! மகிழ்ச்சி!!
பொதுவாகப் பெரியார் பெருந்தொண்டர்கள் கொள்கை அடிப்படையில் மட்டுமின்றி, பொதுக் காரியங்களிலும் நிறைய ஈடுபடுவர். பெரியார் கொள்கை என்பதே கடவுளை மற; மறந்துவிட்டு, மனிதனை நினை என்பதுதானே! பல கிராமங்களில் பெரியார் பெருந்தொண்டர்கள் அப்படித்தான் வாழ்ந்துள்ளனர்!
இங்கே நாம் பார்க்க இருப்பது சோழங்கநல்லூர் கிராமம். இது திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது. இங்கு நான்கைந்து பேரிடம் நாம் தனித்தனியாகப் பேசும்போது, அவர்கள் அனைவரும் சொன்ன ஒரே பெயர் அந்தோணிசாமி! நமக்கு ஆச்சர்யமாக இருந்தது. உடலால் மறைந்துவிட்டாலும், உணர்வால் வாழ்கிறார்கள் என்று சொல்வார்களே, அந்த உணர்ச்சி, அந்த நேரத்தில் ஏற்பட்டது.
இயக்க மகளிர் சந்திப்பின் தொடர்ச்சியாக அமுதா என்பவரை அங்கு நாம் சந்தித்தோம். “தங்கள் வயது என்ன என்ற போது 52 என்றார்கள். எத்தனை ஆண்டுகள் இயக்கத்தில் இருக்கிறீர்கள் என்றபோது, அதற்கும் 52 என்றே சொன்னார்கள். பிறந்ததில் இருந்தே பெரியார் கொள்கையில் இருக்கும் பெரும் வாய்ப்பை, குக்கிராம மக்களும் பெற்றுள்ளார்கள் என்பது ஒன்றே இது பெரியார் மண் என்பதற்கான அழுத்தமான சாட்சி!
இப்போது அமுதா அவர்களோடு பேசவோம்!
அம்மா வணக்கம்! உங்களைக் குறித்த விவரங்களைக் கூறுங்கள்?
எனது பெயர் அமுதா. வயது 52. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். பெற்றோர் பெயர் இராக்கம்மாள் – காத்தமுத்து. அப்பா சட்ட எரிப்புப் போரில் 3 மாதம் சிறையிலும், அம்மா காவிரி நீர்ப்பிரச்சினையில் 1 மாதம் சிறையிலும் இருந்தவர்கள். அவர்கள் கொள்கையில் இருந்ததால், நானும் பிறப்பு முதலே நாத்திகராக வளர்ந்துவிட்டேன். சிறு வயது தொடங்கி கூட்டங்கள், மாநாடுகளில் பங்கேற்று வருகிறேன்.
உங்களின் திருமணம் குறித்துக் கூறுங்கள்?
எனது இணையர் பெயர் இராமமூர்த்தி. அவர்களும் இயக்கத்தில் இருந்தவர்தான். மின்சாரத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பின்னர் ஒன்றியப் பொறுப்பில் இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் மறைவுற்றார். எங்களின் திருமணத்தை 1984ஆம் ஆண்டு ஆசிரியர் அவர்கள்தான் நடத்தி வைத்தார்கள். தெருவில் மேடை அமைத்து, பொதுக்கூட்டம் போல் நடந்தது. இந்தத் திருமணத்தை ஏற்பாடு செய்ததுடன், முன்னின்றும் நடத்தியவர் பெரியார்
பெருந்தொண்டர் அந்தோணிசாமி அவர்கள்!
இந்தக் கிராமமே அவரின் சொல் கேட்குமளவு தனித் தன்மையோடும், கம்பீரமாகவும் இருந்தவர். மற்றொரு செய்தி சொன்னால் நீங்கள் அதிர்ச்சி ஆவீர்கள். ஆமாம்! அந்தோணிசாமி அவர்களுக்கு இரண்டு கால்களுமே கிடையாது. மாற்றுத் திறனாளியாக இருந்தவர். சக்கர நாற்காலியில்தான் அவருடைய மொத்த வாழ்க்கையும் இருந்தது.
அப்படியான ஒருவரால் எப்படி இயக்க வேலை பார்க்க முடிந்தது?
எல்லோரும் கேட்கும் கேள்வி இதுதான். ஆனால், அவர் அளவு நம்மால் சுறுசுறுப்பாக இயங்க முடியாது. அந்த நிலையிலும் ஒரு நிகழ்ச்சியையும் விடமாட்டார். சிலநேரம் சக்கர நாற்காலியை அப்படியே லாரியில் தூக்கி வைத்துவிடுவார்கள். அதிலே சென்றுவிட்டு, வேறு வாகனம் மூலம் திரும்பிவிடுவார். இன்றைக்கும் இயக்கத்தவர்கள் ஒற்றுமையாக இருப்பதற்கு அவர்தான் மூலக் காரணம். எந்த ஒன்றிற்கும் அவர்தான் முதலில் கிளம்புவார். அவர் பின்னால் கிராமமே திரண்டு போகும். சோழங்கநல்லூர் மட்டுமின்றி, சுற்று வட்டாரக் கிராமங்களிலும் தொடர்பில் இருப்பார். இயக்க உதவிகள் செய்வது, தோழர்களுக்குச் சுயமரியாதைத் திருமணங்கள் செய்வது என, “வீல்சேர்” அவரின் பணிகளைப் பாதித்ததே இல்லை. அவரின் வாழ்விணையர் வியாகுலமேரி இன்னமும் இந்தக் கிராமத்தில் தான் வசிக்கிறார்.
சோழங்கநல்லூர் கிராமத்தில் பெரியார் மருத்துவமனை இருக்கிறதே? அதன் வரலாறு என்ன?
பெரியார் மருத்துவமனை என்பது எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு! இயக்கக் குடும்பங்களுக்குப் பெருமை சேர்த்த காரணிகளில் அதுவும் ஒன்று! இந்தக் கிராமமே எங்கள் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நினைத்துக் கொண்டே இருக்கும்! அப்போது பேருந்து வசதிகள் அதிகம் இல்லாத காலம். யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் போனால், கட்டிலில் படுக்க வைத்து அருகிலுள்ள நகரங்களுக்கு அழைத்துச் செல்வர். அப்படியான சூழலில்தான் மருத்துவமனை வேண்டும் என்கிற கோரிக்கையை ஆசிரியரிடம் முன்வைத்தோம்.
மருத்துவமனை எழுப்ப இடம் வேண்டும் என்கிறபோது, கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதற்கான பணிகளில் இறங்கினோம். சிறிது, சிறிதாகப் பணம் சேர்த்த நிலையில், சோழங்கநல்லூர் கிராமத்தில் “பொது நடவு நட்டு” அதன்மூலம் குறிப்பிட்ட தொகையைச் சேர்த்து, முதன்மைச் சாலையிலேயே ஒரு இடம் வாங்கினோம். அதன்பிறகு ஆசிரியர் அய்யா ஏற்பாட்டில் மருத்துவமனைக் கிடைக்கப் பெற்று, இன்றளவும் இந்தச் சுற்று வட்டாரக் கிராமங்கள் பயன்பெற்று வருகிறோம்!
கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது! அந்த இடத்தில் பெரியார் சிலை கூட இருக்கிறதே?
ஆமாம்! சோழங்கநல்லூர் பகுதியில் பெரியார் சிலை வைக்க வேண்டும் என இந்தப் பகுதி தோழர்களும், சூரனூர் தோழர்களும் இணைந்து முடிவு செய்தனர். நாளடைவில் இரண்டு இடத்திலுமே வைத்துவிடுவது என முடிவானது. அதிலும் யார் முதலில் வைப்பது என்கிற அளவில் வேலைகள் மும்மரமாகத் தொடங்கின. முதலில் பெரியார் மருத்துவமனை அருகே சிலை எழுப்பப்பட்டது.
பின்னர் சூரனூர் கிராமத்தில் அனைவரும் இணைந்து சிலை எழுப்பினார்கள். ஒரே ஒரு கருங்கல்லில் முழுமையாகச் செய்யப்பட்டு, மயிலாடுதுறையில் இருந்து மாட்டுவண்டியில் எடுத்து வந்தார்கள். வடகுடி, சூரனூர், சோழங்கநல்லூர், ஓடாசேரி ஆகிய நான்கு இடத்திலும் பெரியார் சிலைகள் உள்ளன.
சிறப்பான கிராமமாக இருக்கிறதே?
ஆமாம்! இந்தக் கிராமத்தோடு இணைந்த வாழ்க்கைதான் எங்களுடையது! இன்னும் சொன்னால் இதைச் “சுயமரியாதைக் கிராமம்” என்றே அழைக்கலாம். 18 கிராமங்களை அடக்கிய திருவாதிரை மங்கலம் ஊராட்சியில் இது வரும். அத்தனையும் பெரியார் வழி வந்த கிராமங்கள்! இன்றைக்கு எங்கள் சோழங்கநல்லூர் மக்கள் பல்வேறு கட்சிகளுக்குப் போயிருந்தாலும் திராவிட இயக்கச் சிந்தனையும், பெரியாரின் தாக்கமும் இல்லாமல் எவரும் இருக்க முடியாது.
இயல்பாகத் தலைவர் களின் பிறந்தநாள், நினைவு நாளில் மாலை அணி விப்பார்கள். இங்கே ஒருவருக்கு அரசு வேலை கிடைத்தால் பெரியாருக்கு மாலையிடுவார்கள். தங்களுக்குக் குழந்தைப் பிறந்த மகிழ்ச்சியைக் கூட, மாலையிட்டு கொண்டாடி னார்கள் ஒரு இணையர். அப்படிச் சிறப்புமிக்க, செழுமை வாய்ந்த கிராமம் எங்கள் சோழங்கநல்லூர்!
“கிராமமும், கொள்கையும் பிரிக்க முடியாத ஒன்று”, என்பதாக இருக்கிறதே உங்கள் பேச்சு?
ஆமாம்! 52 ஆண்டு காலமாக இந்தக் கிராமத்தைச் சுவாசிக்கிறேன்! இந்தப் பகுதியில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட தோழர்கள் சட்ட எரிப்புப் போராட்டத்தில் சிறை சென்றுள்ளனர். எழுமுக்கால், குருமனாங்குடி போன்ற கிராமங்களில் வயல்வெளியில் பெரியார் கூட்டங்கள் நடைபெற்றதாகச் சொல்வார்கள். விவசாயப் பெருமக்களும், தோழர்களும் அதிகளவு திரள்வார்களாம்! குழந்தைகளுக்குப் பெரியார் வைத்த பெயர்களே இங்கு ஏராளம் உள்ளன.
இந்தக் கூட்டத்தில், “வரும் காலங்களில் மனிதன் தானாகப் பேசிக் கொண்டே (கைப்பேசி) செல்வான் என்றும், மனிதனுக்கு கண், காது, மூக்கு போன்ற எந்த உறுப்பில் பழுது ஏற்பட்டாலும், அதேபோன்று வேறொன்றைப் பொருத்திவிடுவார்கள்”, எனப் பெரியார் பேசியதாகக் கூறுவார்கள்.
உங்களின் ஆழமான கருத்துச் சேகரிப்பு வியக்க வைக்கிறது! ஆசிரியர் குறித்த உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்?
எங்கள் சுயமரியாதைத் திருமணத்தை ஆசிரியர் அவர்கள் தான் நடத்தி வைத்தார்கள். என் அண்ணனுக்கு ‘கவுதமன்’ எனப் பெரியார்தான் பெயர் சூட்டினார். கவுதமன் அவர்களின் பிள்ளைக்கு, ‘தமிழ்ச்செல்வன்’ என ஆசிரியர் பெயர் சூட்டினார். எங்கள் குடும்பம், இந்தக் கிராமம், இந்த இயக்கம் அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை! அதுமட்டுமின்றி ஆசிரியர் அவர்கள் இந்தக் கிராமத்திற்குப் பலமுறை வந்துள்ளார்கள். அவர்கள் நடத்தி வைத்த சுயமரியாதைத் திருமணங்களும் ஏராளம்! அதேபோல பெரியாரும், ஆசிரியரும் வைத்த தமிழ்ப் பெயர்களும் இங்கு அதிகம்.
இன்னொரு செய்தியையும் குறிப்பிட வேண்டும். இந்தக் கிராமத்தில் ஜாதி வேற்றுமை, தீண்டாமைக் கொடுமைகள் நிறைய இருந்தன. பெரியார் இயக்கம் வந்த பிறகுதான் அவை ஒழிந்தன. குக்கிராமமாக இருந்தாலும், தோழர்கள் வீட்டில் யாராவது இறந்துவிட்டால், மகளிர் இணைந்து உடலை எடுத்துச் சொல்வோம்.
இப்போதும் ஆசிரியர் அவர்கள் எந்தப் போராட்டம் அறிவித்தாலும், வேலைகளை அப்படியே போட்டுவிட்டு, நிகழ்ச்சிக்குத் திரண்டுவிடுவோம். நம் தோழர்களுக்கு மட்டுமல்ல; இந்தக் கிராமத்திற்கே ஆசிரியர் அவர்கள் மிகுந்த மதிப்பிற்குரியவர்கள்”, எனத் தம் எண்ணங்களை அழகிய சொற்களால் வடித்துக் கொடுத்தார் அமுதா அவர்கள்!