சென்னை, டிச.13 தமிழ்நாட்டில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதோடு, சில இடங்களில் மிகக் கனமழையும் பெய்து வருகிறது. இதனால், 4 ஆயிரம் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. 2,926 ஏரிகளில் 76 முதல் 99 விழுக்காடு வரை நீர் இருப்பு உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 90 அணைகள், நீர்த்தேக்கங்களில் 82 விழுக்காடு நீர் இருப்பு உள்ளது என்று நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 14,140 பாசன ஏரிகள் உள்ளன. அதிகபட்சமாக கன்னியா குமரி மாவட்டத்தில் 2,040 ஏரிகள் இருக்கின்றன. அதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் 1,459, மதுரை மாவட்டத்தில் 1,340, புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,132 ஏரிகள் உள்ளன.
பாச ஏரிகள்
மேலும், சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 564, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381, திருவள்ளூர் மாவட்டத்தில் 578 ஏரிகள் உள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் 506, திருவண்ணாமலை மாவட்டத்தில் 697, திருநெல்வேலி மாவட்டத்தில் 780, தென்காசி மாவட்டத்தில் 543, ராமநாதபுரம் மாவட்டத்தில் 639 ஏரிகள் இருக்கின்றன. மிக குறைந்தபட்சமாக மயிலாடுதுறையில் 2 ஏரிகளும், நாகப்பட்டினத்தில் 3 ஏரிகளும் உள்ளன.
4 ஆயிரம் ஏரிகள் நிரம்பின
தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்வதுடன், சில இடங்களில் மிகக் கனமழையும் பெய்து வருவதால், 4 ஆயிரம் ஏரிகள் 100 விழுக்காடு நிரம்பின. முதலிடத்தில் கன்னியாகுமரி (580), இரண்டாவது இடத்தில் விழுப்புரம் (469), மூன்றாவது இடத்தில் தஞ்சாவூர் (384) உள்ளன. 2,926 ஏரிகளில் 76 முதல் 99 விழுக்காடு, 2,396 ஏரிகளில் 51 முதல் 75 விழுக்காடு, 2,194 ஏரிகளில் 26 முதல் 50 விழுக்காடு, 2,055 ஏரிகளில் ஒன்று முதல் 25 விழுக்காடு நீர் இருப்பு உள்ளது.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 மண்டலங்களில் மட்டும் மொத்தம் 90 அணைகள், நீர்த்தேக்கங்கள் உள்ளன. இவற்றின் மொத்த கொள்ளளவு 2 லட்சத்து 24 ஆயிரத்து 297 மில்லியன் கனஅடி ஆகும். நேற்றைய (12.12.2024) நிலவரப்படி இவற்றில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 892 மில்லியன் கனஅடி (81.99 விழுக்காடு) நீர் இருப்பு உள்ளது என்று நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.