வராஹம் என்றால் பன்றி என்றுதான் நேரடிப் பொருள் – ஆனால் ஹிந்து அமைப்பினர் குறிப்பாக வட இந்தியாவில் ஒரு கட்டுக்கதையை இப்போது கிளப்பி உள்ளனர்.
அதாவது வராஹ என்பது பூமியைத் தோண்டி தனது மூக்கில் உள்ள கொம்பின் மூலம் நல்ல பொருட்களை (கிழங்கு போன்றவற்றை) வெளியே கொண்டுவந்து அதன் மூலம் மண்ணையும் வளமாக்கி அந்தப் பொருள் மூலம் தனக்கும் இதர உயிரினங்களிற்கும் பயன் தரும் ஒரு உயிரினத்தின் பெயர் தான் வராஹமாம். இது ஈரானிய மொழியில் இருந்து வந்ததாம்!
ஆனால் அந்த உயிரினத்திற்கு ஓவியம் கொடுக்கும் போது பன்றியின் உருவத்தைத் தந்துவிட்டார்களாம்.
வராஹம் என்பது வேறாம் – குட்டைகளில் புரளும் பன்றி வேறாம். இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை காட்டாமலேயே பன்றியோடு சேர்த்து அவதாரத்திற்குப் பெயரும் உருவமும் கொடுத்துவிட்டார்களாம்.
‘‘வராஹம் என்பது அந்நியர்களால் நமது வேதங்கள் அறிவுக்களஞ்சியங்கள் ஒழிக்கப்பட்ட போது அதனை மீளக் கொண்டு வந்து இப்பாரத பூமியை உலகின் அறிவுக் களஞ்சியமாக மாற்றியதுதான் அந்த அவதாரத்தின் மகிமை. ஆனால் நாத்திகர்கள் இதர மதத்தவர்கள் கொடுக்கும் பொருளுக்கும், பொன்னுக்கும் ஆசைப்பட்டு வராஹ அவதாரத்தை பன்றியோடு இணைத்துக் கதைகட்டி வருகின்றனர். உண்மையில் குட்டை, குளங்களில் புரளும் பன்றிகள் வேறு – வேதங்களைக் காப்பாற்ற வந்த வராஹ அவதாரம் என்பது வேறு ஜெய் சிறீராம் – ஜெய் வராஹ’’
இவ்வாறு கட்டுக்கதை விடுகிறார்கள்.
புராணங்களில், வேதங்களில் உள்ளனவற்றை உள்ளதை உள்ளவாறு சொல்லி, அவற்றை நியாயப்படுத்த முடியாத – ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கின் கதைக்கு மதவாதிகள் ஆளானவர்கள் – இப்பொழுது புதுப்புது வியாக்கி யானங்களையும், விளக்கங்களையும் சொல்ல ஆரம்பிக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது பரிதாபமே!
‘தீபாவளி’ பண்டிகைக்கு என்ன விளக்கம் – கதை கட்டுகிறார்கள்? பூமியைப் பாயாக சுருட்டிக் கொண்டு இரண்யாட்சதன் கடலில் ஒளிந்து கொண்டான் என்று எழுதி வைத்துள்ளார்களே, அதை மீட்க விஷ்ணு வராஹ அவதாரம் எடுத்து கடலுக்குள் குதித்துப் பூமியை மீட்டான் – அந்தப் பூமிக்கும் பன்றிக்கும் ஒரு பிள்ளை பிறந்தது அவன்தான் நரகாசுரன் – அவன் பூதேவர்களாகிய பார்ப்பனர்களுக்கு இம்சை செய்தான் – அவனை கிருஷ்ணபரமாத்மாவும், அவனது மனைவி சத்யபாமாவும் சண்டையிட்டுக் கொன்றார்கள் – அவன் இறந்த நாள்தான் தீபாவளி என்கிறார்கள்.
இதற்கெல்லாம் என்ன வெண்டைக்காய் விளக்கெண்ணெய் விளக்கம் சொல்லப் போகிறார்களாம்?
திருவண்ணாமலை அருணாச்சலேஸ் வரரைப் பற்றி எழுதி வைக்கப்பட்டுள்ள அருணாசலப் புராணத்தில் சிவனின் அடியைக் கண்டுபிடிக்க விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்துப் பூமியைத் துளைத்துக் கொண்டு போனதாக எழுதி வைக்கப்பட் டுள்ளதே – அதற்கு என்ன பதில்?
மதவாதிகளை – அதிலும் ஹிந்து மதவாதிகளை நினைத்தால் ஒரு பக்கத்தில் பரிதாபமும், இன்னொரு பக்கத்தில்
தாங்கள் சுரண்டிக் கொழுப்பதற்காகவே எழுதிக் குவித்திருக்கிற யோக்கியமற்ற நிலையும்தான் மிஞ்சுகிறது.
புராணங்களுக்குப் புது விளக்கம் சொல்ல வேண்டிய அளவுக்கு – சுயமரியாதை இயக்கம் வெற்றி பெற்றுள்ளது – என்பது தெளிவாகி விட்டதே!