‘1924ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி வைக்கம் சத்தியாக்கிரகத்தில் பங்குபெற அய்ந்து பெண்கள் வந்தனர். நாகம்மையார், எஸ்.ஆர். கண்ணம்மாள், திருமதி நாயுடு, திருமதி சாணார், திருமதி தாணுமாலயப் பெருமாள் பிள்ளை ஆகியோர் தடையை மீறிச் சத்தியாக்கிரகத்தில் கலந்துகொள்ளப் புறப்பட்டுச் சென்றனர். தடைவிதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றனர். தடையை அகற்ற முயன்ற நேரத்தில் இன்ஸ்பெக்டர் சர்மா, பெரியாரின் துணைவியாரிடம் ‘‘நீங்கள் என்ன ஜாதி?’’ என்று கேட்டார். இந்தப் போராட்ட அணிக்குத் தலைமை தாங்கிய பெரியாரின் துணைவியார், ‘‘எங்களில் யார் எந்த ஜாதி என்று பார்த்து தாழ்த்தப்பட்ட ஜாதியினரை மட்டும் அறிந்து மற்றவர்களை அனுமதிக்கலாம் என்று பார்க்கிறீர்களா? நாங்கள் அதற்காக இங்கு வரவில்லை எல்லோரும் இந்த வீதியில் செல்ல அனுமதிக்க வேண்டும்’’ என்று நாகம்மையார் கூறினார்.
தடையை மீறி வந்த பெண்கள் அந்த இடத்தை விட்டு அகல மறுத்து பல மணிநேரம் அதே இடத்திலேயே இருந்தனர்.
இறுதியாகப் பிச்சு அய்யங்கார் என்ற போலீஸ் கமிஷனர் வந்தார். பெண்கள் என்பதற்காகத் தனிச் சலுகை எதுவும் காட்ட வேண்டாம். ஆண்களை எப்படி நடத்துவீர்களோ அப்படியே இவர்களையும் நடத்துங்கள் என்று இன்ஸ்பெக்டர் சர்மாவுக்கு உத்தரவிட்டார். கிளர்ச்சியில் பங்குகொண்ட பெண்களை எப்படி நடத்துவது என்று இன்ஸ்பெக்டர் கேட்டிருப்பதன் மூலம் இந்த கிளர்ச்சியில் முதலில் பங்குபெற்றவர்கள் பெரியாரின் குடும்பத்து பெண்கள் என்பது விளங்குகிறது’ (தந்தை பெரியார் 100ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரில் வந்ததாக வளர்மதி தன் நூலில் இப்பகுதியை மேற்கோளாகக் காட்டியிருக்கிறார்).
நாகம்மையார் வைக்கத்தில் இருந்தவாறு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தார். பிரச்சாரங்களை நிகழ்த்தி வந்தார். சிங்கோலி, முட்டம், கொல்லம், மய்ய நாடு, நெடுங்கனா, திருவனந்தபுரம், கோட்டாறு முதலிய இடங்களில் பிரச்சாரம் செய்திருக்கிறார். வைக்கம் போராட்டத்தில் நாகம்மையாரின் பங்களிப்பினை அவர் மறைந்தபோது தனது இரங்கல் அறிக்கையில் தந்தை பெரியார் குறிப்பிட்டு இருக்கிறார். நாகம்மையாரின் படத்திறப்பு விழாவில் பேசிய திரு. வி.கல்யாணசுந்தரனார், “வீட்டின் ஒரு மூலையில் பேடெனப் பதுங்கிக் கிடந்த நம் அம்மையார் தீண்டாமை எனும் பேயை வெட்டி வீழ்த்துவான் வேண்டி வைக்கம் சத்தியாக்கிரகப் போரிற் புகுந்து சிறை சென்று அரசாங்கத்தை நடுங்கச் செய்ததுடன் அமையாது வாகை மாலையும் சூட்டினார்” என்று பேசியிருக்கிறார்.
திராவிட இயக்க வேர்கள் நூலில்
க.திருநாவுக்கரசு