பெரியார் சிறையில் கொடுமையாக நடத்தப்படுவதைக் கண்டித்து ராஜகோபாலாச்சாரியார் வெளியிட்ட அறிக்கை

viduthalai
2 Min Read

‘தற்போது திருவனந்தபுரம் மத்தியச் சிறையில் சத்தியாக்கிரக கைதியாக இருக்கும் இவி. ராமசாமி நாயக்கர் உணவு மற்றும் தங்குமிடம் போன்ற விஷயங்களில் சாதாரண தண்டனைக் கைதியாக நடத்தப்படுவதாக நம்பகமான தகவல்கள் எனக்கு வருகின்றன. சிறை உடையை அவர் அணிகிறார்; இரும்பு விலங்குகள் போடப்பட்டிருக்கிறார். தனிமைச் சிறையில் மற்ற சத்தியாக்கிரக சிறைவாசிகளிலிருந்து ரொம்ப தூரத்தில் வைக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது.

இவ்வளவுக்குப் பிறகும் நாயக்கர் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. அவருடன் நன்றாகப் பழகியிருக்கிறேன்; அவருடன் பல காலம் சேர்ந்து வாழ்ந்திருக்கிறேன்; எனக்கு அவரைத் தெரியும். அவர் ஒரு தளர்வுறாத ஆன்மா. செல்வ வளத்தின் மகிழ்ச்சிகளையும் பதவிகளையும் வெறுத்து ஒதுக்கித்தள்ளிவிட்டு கடினமான இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்து வந்துள்ளார், பெரும்பாலான நம்மைப் போல அல்ல உண்மையிலேயே. தம்மைத் தூய்மைப்படுத்தும் இந்தச் செயல்களை அவர் வரவேற்கிறவர். எனவே பெரிதும் நாம் வருந்தவேண்டியதில்லை.

உயர்ந்த பதவியும் அந்தஸ்தும் கொண்டவர்களை இப்படிக் கடுமையாகத் திருவாங்கூர் அரசாங்கம் நடத்த விரும்பாமல் இருக்கலாம். ஆனால், பதவியும் அந்தஸ்தும் என்பது ஆங்கிலேயர் என்பதாயும், பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் பட்டங்களாலுமே அது கணக்கீடு செய்யப்படுகிறது.

கடைசியாகத் திருவனந்தபுரத்தில் இருக்கும்போது, வைக்கம் சிறைக் கைதிகள் நடத்தப்படும் விதம் குறித்து பார்க்க வாய்ப்பு கிடைத்தது. புகார் சொல்ல எதுவும் இல்லை. உண்மையில் நாகரிகமாக அவர்கள் நடத்தப்படுவதாக நான் பெருமை அடைந்தேன். ஒரு நல்ல உயர்ந்த நோக்கத்திற்காக இந்திய சமஸ்தானத்தில் சிறை செல்ல நேர்ந்தவர்கள் நடத்தப்பட்டமுறை நன்றாக இருந்தது. பிரிட்டிஷ் இந்தியாவில் நேரும் அனுபவங்களுக்கு முற்றிலும் மாறானது அது. ஆனால், நாயக்கர் விஷயத்தில் ஏதோ காரணங்களுக்காக திருவாங்கூர் தவறு செய்துவிட்டதாகவே தோன்றுகிறது. நாயக்கரின் தகுதியைப் பற்றிய அறியாமை அதற்கு ஒரு பகுதி காரணமாக இருக்கலாம். ஆனால், அதற்காக அதை மன்னிக்க முடியாது.

நாயக்கர் அவர்கள் மாவட்டத்தை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். மிகுந்த அமைதியுடன் அவர் அதை மதிக்கவில்லை. இந்தத் தண்டனை முற்றிலும் சட்ட விரோதமானது. வன்முறையைத் தூண்டவோ அதைப் போன்ற எதையும் செய்யாமலோ இருக்கும்போது, கீழ்ப்படியாமை மட்டுமே குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்படும் காரணமாக இருக்க முடியாது. எந்த சட்ட நடைமுறையாக இருந்தாலும் வெளியேற்ற ஆணையின் நோக்கம், குற்றவாளி தன் பாதுகாப்பில் இருக்கும்போது மட்டுமே செயற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன், நான் தவறாகவும் இருக்கலாம்.

அவரைக் கடுங்காவல் சிறைத் தண்டனையில் வைத்திருப்பதும் இரும்பு விலங்கிட்டிருப்பதும் அவருக்குச் சிறை உடை அணிவித்திருப்பதும், மற்ற சத்தியாக்கிரக கைதிகள் சரியாகப் பெற்றுள்ளவைகளை அவருக்கு மறுப்பதும் முழுமையாக நியாயப்படுத்த முடியாதவை. சிறையில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியின் தைரியமிக்க தலைவருக்கு என் பாராட்டுக்கள்.”

– ராஜகோபாலாச்சாரியார்
– ‘தி இந்து’ – 27.8.1924

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *