திருவனந்தபுரம், டிச.10- திருச்சி மாவட்டம் முசிறி வாழசிராமணி கிராமத்தை சேர்ந்த 22 அய்யப்ப பக்தர்கள் ஒரு பேருந்தில் சபரிமலை சென்று விட்டு நேற்று (9.12.2024) காலை ஊருக்கு புறப்பட்டனர். நிலக்கல்லில் இருந்து எருமேலி நோக்கி வந்தபோது காலை 6.30 மணியளவில் கானமலா பகுதியில் பேருந்தை நிறுத்திவிட்டு சமையல் செய்து அனைவரும் சாலையோரம் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்த அய்யப்ப பக்தர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 7 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்வு இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்படி சரவணன் (வயது 37), சுரேஷ் (38), சங்கர் (35) ஆகிய 3 பேரை கோட்டயம் மருத்து வக்கல்லூரி மருத்துவமனையிலும், மற்ற 4 பேரை எருமேலி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் சரவணன் என்பவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.