சென்னை, டிச.10- இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், புதுச்சேரி மகளிர் ஆணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்காதது, அம்மாநில அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் திறனற்ற தன்மையையே காட்டுவதாக கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், புதுச்சேரி அரசுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்தது.
புதுச்சேரி மகளிர் ஆணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப் பினர்களை நியமிக்கும்படி உத்தரவிடக் கோரி, அம்மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.ஜமுனா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இம்மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.சிறீராம், நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய முதல் அமர்பு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘புதுச்சேரி மகளிர் ஆணையம் 2004இல் துவக்கப்பட்டது. தற்போது, தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன’ என, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
‘புதுச்சேரி மகளிர் ஆணைய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பரிந்துரை, மாநில அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அது, தற்போது நிலுவையில் உள்ளது’ என, கடந்த ஏப்ரல் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இழுத்தடிக்கும் முயற்சி
இவ்வழக்கில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவை பார்த்தால், காலிப் பணி யிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைமுறையை இழுத்தடிக்கும் முயற்சி மட்டுமே தெரிகிறது. பதில் மனுவில், ‘தேர்வு குழு அமைக்கும் நடவடிக்கை செயல்பாட்டில் உள்ளது; மாநில அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. தேர்வு குழு அறிவிப்பு வெளியானதும், மாநில மகளிர் ஆணையத்துக்கு தகுதியான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு குழுவின் பதவிக்காலம் ஓராண்டு.
எனவே, தேர்வு குழுவை நிரந்தர மாக அமைக்க, மாநில அரசின் மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு துறை பரிந்துரைத்துள்ளது. இதற்காக, ஆணைய விதிகளில் திருத்தம் செய்து, சட்டத்துறை பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தேர்வு குழு அமைக்கும் செயல்முறை எப்போது துவங்கியது? அரசின் ஒப்புதலுக்கு எப்போது அனுப்பப்பட்டது என்ற விபரம் இல்லை.
கடந்த ஜூன் மாதம் ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்று, தகுதியான உறுப் பினர்கள் ஒரு மாதத்திற்குள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர் என்று குறிப்பிட்டுள்ளனர். அப்படி யிருந்தும், இதுவரை தேர்வு குழுவை அமைக்காதது அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த 2022 பிப்., 6இல், ஆணையத்தின் பதவிக்காலம் முடிந்து விட்டது. ஆனால், ஜூன் மாதம் தான் விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிடப் பட்டது. அதுவும், நீதிமன்றம் உத்தரவுக்கு பிறகு தான். தேர்வு குழு திருத்த வரைவு எப்போது சட்டத் துறை யிடம் சமர்ப்பிக்கப்பட்டது? அதன் நிலை என்ன என்பது குறித்த விபரங்கள், பதில் மனுவில் இல்லை.
ஒழுங்கு நடவடிக்கை
ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள் பதவிக்காலம் நிறைவு பெறும் முன்னரே, தேர்வு குழுவை ஏன் அமைக்கவில்லை? இது, புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் திறனற்ற தன்மையையே காட்டுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது, சில ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, இந்த நீதிமன்றம் நம்புகிறது.
பெண்களின் நலனை பாதுகாக்கும் பொறுப்பை உண்மை யிலேயே உணர்ந்திருந்தால், ஆணையத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன், தேர்வு குழு அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், கடந்த ஏப்., 26இல், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு தான், துறை விழித்துள்ளது. விண்ணப்பங்களை ஜூலை 15 அல்லது அதற்கு முன் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதுவரை, 77 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
விண்ணப்பங்களை வரவேற்று நான்கு மாதங்களாகியும், தேர்வு குழு அமைக்கப்படவில்லை. இது, பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதில், மாநில அரசின் அக்கறையின்மையை காட்டுகிறது.
தேர்வு குழுவை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஏன் அமைக்கவில்லை என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்; உரிய விபரங்களுடன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். புதுச்சேரி அரசுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்தத் தொகையை, மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவிடம் செலுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு அளித்த நிறுவனத்திற்கு விருது
சென்னை, டிச.10- மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கும் முன்னுதாரண நிறுவனம் என்ற தகுதியின் கீழ் 2024-ம் ஆண்டுக்கான ஹெலன் கெல்லர் விருது, தமிழ்நாட்டைச் சேர்ந்த சக்தி மசாலா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
விருது வழங்கும் விழா, புதுடில்லி, அரசியலமைப்புச் சட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவில் ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்%A