சென்னை, டிச. 7- மாநில சைபர் க்ரைம் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் சந்தீப் மித்தல் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
வேலை தருவதாக இணையம் மூலமாக விளம்பரம் செய்து, அதை நம்பி வரும் மக்களை, தங்களின் இடத்துக்கோ அல்லது தங்களின் நாட்டுக்கோ வரவழைத்து, அம்மக்களை ‘சைபர் க்ரைம்’ உள்ளிட்ட குற்றச்செயல்களில் சிலர் ஈடுபடுத்து கின்றனர். அப்படி பாதிக்கப்பட் டவர் ‘சைபர் அடிமைகள்’ என்று வகைப்படுத்தப்படுகிறார்கள்.
குறிப்பாக இந்தியாவிலிருந்து, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் டேட்டா என்ட்ரி மற்றும் கால் சென்டர்கள் போன்ற வேலைகளுக்கு அங்கீகரிக்கப்படாத மனித வள ஏஜென்சிகளால் சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. பின்னர் இவர்களை இந்தியாவில் சைபர் குற்றங்களை நடத்த அந்த நாட்டு சைபர் மோசடி பேர்வழிகள் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத ஆட்சேர்ப்பு முகமை களுக்கு எதிராக பல புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனவே, இதுபோன்ற மோசடிகளில் யாரும் சிக்கிக் கொள்ளாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும், இத்தகைய மோசடிகளுக்கு ஆளாகி இருந்தால் அல்லது சந்தேகத்துக்கிடமான செயலை சந்தித்திருந்தால், சைபர் க்ரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930-அய் அழைத்து அதில் புகார் தெரிவிக்கலாம். அல்லது www. cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பதிவுத்துறையில்
ஒரே நாளில் ரூ.238.15 கோடி வருவாய்
அமைச்சர் பி.மூர்த்தி தகவல்
சென்னை, டிச. 7- பதிவுத் துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 5ஆம் தேதி ஒரே நாளில் பத்திரப் பதிவு மூலம் ரூ.238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று (6.12.2024) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் வருவாய் ஈட்டுவதில் முக்கிய துறையாக விளங்குவது பதிவுத் துறை. இந்நிலையில், இத்துறையின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த நவம்பர் மாதத்தில் ரூ.1,984.02 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
வசூலில் புதிய மைல்கல்: அந்த வகையில், கடந்த 2023 நவம்பர் மாதத்தைவிட கூடுதலாக ரூ.301.87 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஆவணங்கள் அதிக அளவில் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் என்பதால் சிறப்பு நிகழ்வாக, மக்கள் பயன் பெறும் வகையில் முன்பதிவு டோக்கன் எண்ணிக்கை 100இல் இருந்து 150 ஆக உயர்த்தப்பட்டது.இந்த டோக்கன்களை பயன்படுத்தி, கடந்த 5ஆம் தேதி ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் ரூ.238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒருநாள் வருவாய் வசூலில் புதிய மைல்கல்லை பதிவுத் துறை எட்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 266 மருந்தகங்களின் உரிமம் தற்காலிக ரத்து
சட்டவிரோத மருந்து விற்பனைக்கு கடும் நடவடிக்கை!
சென்னை, டிச.7- தமிழ்நாட்டில் மருத்துவர்களின் பரிந்துரையின்றி சில முக்கிய மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த காரணமாக 266 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 40,000க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்தால் கண்காணிக்கப்படுகின்றன. மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மொத்தம் 266 மருந்தகங்களின் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர். மேலும், கருத்தடை மற்றும் தூக்க மாத்திரைகளை விற்பனை செய்த 31 மருந்தகங்களின் உரிமம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.56 மொத்த விற்பனை நிறுவனங்களின் உரிமைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
“மருந்துக் கடைகளில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை செய்வது தவறானது. குறிப்பாக, மனநலம் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளின் அத்தகைய விற்பனை, சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். ஜனவரி முதல் இதுவரை பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. கண்டறியப்பட்ட மருந்தகங்களின் உரிமங்கள் கட்டாயமாக தற்காலிக மாக அல்லது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது,” என அவர் தெரிவித்தார்.
மருந்தகங்களில் விதிமுறைகளை மீறி விற்பனை செய்வது சரியான கண்காணிப்பின்றி மக்கள் ஆரோக்கியத்துக்கு ஆபத்தாக இருக்கலாம் என்பதால், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை, மருந்தகங்களில் சட்ட ஒழுங்குகளை உறுதி செய்யும் முயற்சியின் ஒரு முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.