இயக்க மகளிர் சந்திப்பின் 42 ஆவது நிகழ்வாக, கும்பகோணம் அருகேயுள்ள கபிஸ்தலத்தில் “பொம்மி” அம்மாவை இந்த வாரம் சந்தித்தோம்!
அம்மா வணக்கம்! உங்களைக் குறித்து அறிமுகம் செய்து கொள்ளுங்கள்?
என் பெயர் வி.பொம்மி. வயது 69 ஆகிறது. அப்பா பெயர் விஸ்வநாதன், அம்மா பெயர் தனம். எங்களின் சொந்த ஊர் சுந்தரபெருமாள் கோயில். நான் பழைய எஸ்.எஸ்.எல்.சி முடித்துள்ளேன். (இப்போது 11 ஆம் வகுப்பு) எனக்கு பாண்டியன், மோகன் என இரண்டு தம்பிகள் உள்ளனர். மோகன் மாநிலப் பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளராக இருக்கிறார். எனக்கு 1975 ஆம் ஆண்டு தில்லை சிகாமணி அவர்கள் தலைமையில், வெள்ளிக்கிழமை கொழுத்த ராகு காலத்தில், தாலி மறுத்த சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. இணையர் பெயர் தி.கணேசன்.
மகிழ்ச்சி அம்மா! இணையர் பெயர் கணேசன் என்கிறீர்கள், ஆனால் முகப்பெழுத்து “வி” என்று சொல்கிறீர்கள்?
ஆமாம்! அது எனது அப்பாவின் முகப்பெழுத்து. அந்தக் காலம் முதலே நான் எனது அப்பாவின் முகப்பெழுத்தையே பயன்படுத்துகிறேன். அப்பாதான் எனக்கு முகவரி! அப்பாதான் எனது பலம்! அப்பா ஆசிரியராகப் பணியாற்றியவர். சிறு வயது முதலே பெரியார் கொள்கையை ஊட்டி வளர்த்தவர். பள்ளி விடுமுறைகளில் அப்பாவின் பின்னாடியே கூட்டங்களுக்குச் செல்வேன்.
1972ஆம் ஆண்டு பெரியாரை அழைத்து, சுந்தரபெருமாள் கோயிலில் அப்பா கூட்டம் நடத்தினார். கீற்றுக் கொட்டகைதான் மேடை. 150 பேர் பங்கேற்று இருப்பார்கள். பெரியார் 2 மணி நேரம் பேசினார். நான் பள்ளி மாணவியாக அங்கும், இங்கும் சுற்றி வந்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது!
அதேபோல நான் பள்ளியில் படிக்கும்போது, கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் நுழைவுப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளேன்.
இந்தக் கொள்கை வழியில், இப்போது 20 உறவுக் குடும்பங்கள் இருக்கிறோம். இது எங்களுக்கு நான்காவது தலைமுறை! இதன் அடிநாதம், ஊற்று எங்கள் அப்பா விஸ்வநாதன் அவர்கள்தான்! 2020ஆம் ஆண்டு, தனது 95 வயதில்தான் அவர்கள் மறைந்தார்கள். இறுதிவரை எனக்கு உதவியாக இருந்ததோடு, இறுதிவரை உடல் ஆரோக்கியத்துடனும் இருந்தார்கள். அவர்களின் கண்கள் கொடையாக வழங்கப்பட்டு, தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு உடலும் அளிக்கப்பட்டது!
நான்கு தலைமுறை என்கிறபோது, கொள்கைச் செயல்பாடுகள் நிறைய இருந்திருக்குமே?
ஆமாம்! இதுவரை சுயமரியாதை, தாலி மறுப்புத் திருமணங்கள் மட்டும் 18 நடந்துள்ளன. இராகு காலத் திருமணங்கள் 3. எனது மாமியார் கைம்பெண். ஆனாலும் அவர் தலைமையில் 3 திருமணங்கள் நடந்துள்ளன. அவர்களைத்தான் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முன்னிலைப்படுத்துவோம்! எங்கள் அம்மா மற்றும் மாமியார் இறந்த நிலையில் கருப்புப் புடவை, வெள்ளை சட்டை அணிவிக்கப்பட்டு, சுயமரியாதையுடன் அடக்கம் செய்தோம்.
எங்கள் வீட்டின் பெயர்கள் பெரியார் செல்வன், வீரமணி, குட்டிமணி, அன்புமணி, அறிவுமணி, அறிவொளி, புவியாற்றல், உண்மை, வாய்மை, தூய்மை, நேர்மை, அறிவன், பரிதி, புலமை, வியன்மகிழ், இனியன், அதியமான், கயல்விழி, வேல்விழி, அன்புவிழி, மாங்கனி, நவில், மிளிரன் என அனைத்தும் இனவுணர்வுப் பெயர்களே!
உங்கள் இணையர் குறித்துச் சொல்லுங்கள்?
இணையர் பெயர் தி.கணேசன் அவர்களும் திருமணத்திற்கு முன்பே பெரியார் கொள்கையில் இருந்தவர்கள்! எனவே எனக்குக் கொள்கையை நடைமுறை செய்வதில் சிக்கல்கள் இருந்ததில்லை. எங்களுக்கு பெரியார் செல்வன், வீரமணி, குட்டிமணி, அன்புமணி, அறிவுமணி என அய்ந்து பிள்ளைகள். இதில் 3 மகன்களுக்கும் சுயமரியாதை, ஜாதி மறுப்பு, தாலி மறுப்புத் திருமணங்களே நடைபெற்றது! இதில் ஒரு திருமணத்தை ஆசிரியர் அவர்கள் நடத்தி வைத்தார்கள்.
இணையர் கணேசன் அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலை செய்தவர். மயிலாடுதுறை, கும்பகோணம் பகுதிகளில் ஊர்க்காவல் படையிலும் பணி புரிந்தார். அதேநேரம் இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளர். சனி, ஞாயிறு வந்துவிட்டால் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு, ஒலிப் பெருக்கியைக் கட்டிக் கொண்டு கிராமம், கிராமமாகச் சென்றுவிடுவார். கூடவே சுந்தரபெருமாள் கோயில் டைலர் மதிவாணன், டேப் சன்னாசி, (இவர்தான் “அய்யய்யோ என்னங்க, அநியாய சாமிங்க” எனும் பாடலை முதலில் எழுதி பாடியவர்). சூரி கோவிந்தன், அர்ச்சுனன், அ.மா.கணபதி, சாக்கனா கணபதி, நாத்திகம் கோவிந்தராஜன் ஆகியோரும் செல்வர்.
தினமும் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பிரச்சினை வரும். எனினும் நயமாகப் பேசி பிரச்சாரத்தை முடித்து விடுவார்கள். தம்பி மோகன் 4 ஆவது படிக்கும் போதே இந்த மிதிவண்டியில் பிரச்சாரத்திற்குச் சென்றுள்ளார். அந்தக் காலத்தில் தில்லை சிகாமணி, மாசிலாமணி, தங்கமணி, வடசேரி தமிழ்மணி, வடசேரி இளங்கோவன் நீடாமங்கலம் அ.ஆறுமுகம் போன்றோரும் சிறப்பாகச் செயல்பட்டவர்கள்.
இதில் உங்களின் பங்களிப்பு என்ன?
சிறு வயது முதலே கூட்டங்களுக்குச் சென்ற நிலையில், திருமணத்திற்குப் பிறகும் அது அதிகரித்தது. அப்பா மற்றும் எனது இணையர் இருவருமே தீவிர செயற்பாட்டாளர் என்கிற வகையில் எங்கள் குடும்பமே இயக்கக் குடும்பம்தான்! 1982 ஆம் ஆண்டு கபிஸ்தலத்தில் மூடநம்பிக்கை ஊர்வலம் ஒன்று நடத்தினோம். ‘கட்டபொம்மன் விளையாட்டு மன்றம்’ சார்பாக அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் ஆசிரியர், மதுரை ஆதீனம் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல ஆசிரியர் அவர்களுக்குப் பாபநாசத்தில் எடைக்கு எடை நாணயம் கொடுத்தோம். என் இணையரோடு நிறைய இளைஞர்கள் கழகத்தில் இருந்தார்கள்.
அந்தக் காலத்தில் விடுதலையில் கட்டுரை போட்டிகள் அறிவிப்பார்கள். ஒருமுறை என் அப்பா, நான், மோகன் இணையர் உமாதேவி ஆகியோர் முதல் மூன்று பரிசை வாங்கினோம். அதேபோல நானும், அப்பாவும் முதல் இரண்டு பரிசுகளை ஒருமுறை பெற்றோம். “உங்கள் குடும்பத்திலேயே எல்லா பரிசுகளையும் வாங்கிவிடுகிறீர்கள்” என ஆசிரியர் வேடிக்கையாகச் சொன்னார்.
உங்கள் குடும்பம் சார்பில் பள்ளிக்கூடம் நடைபெறுவதாக அறிந்தோமே?
ஆமாம்! அதையும் கொள்கை அடிப்படையில் தான் தோற்றுவித்தோம். எனது இணையர் கணேசன் அவர்கள் 10 ஆவது வகுப்பு வரைதான் படித்துள்ளார். எனினும் சுற்று வட்டாரக் கிராமப் பிள்ளைகளுக்கு ஆங்கிலப் படிப்பிற்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. எனவே 1983 ஆம் ஆண்டு கபிஸ்தலத்தில், கீத்துக் கொட்டகை அமைத்து “மணி நர்சரி பள்ளி” என ஒன்றைத் தொடங்கினார். 30 பேர் படித்த நிலையில், இப்போது 1000 மாணவர்கள் படிக்கிறார்கள். பள்ளி தொடங்கி 41 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதேபோல 1989 ஆம் ஆண்டு பாபநாசத்தில் ஒரு பள்ளி தொடங்கப்பட்டது. அதிலும் ஆயிரம் பேர் படிக்கிறார்கள். இரண்டுமே 12 ஆம் வகுப்பு வரையுள்ள மெட்ரிக்குலேசன் பள்ளிகள். அதேபோல அழகிய மணவாளன் என்கிற இடத்தில் ஒரு நர்சரி பள்ளி தொடங்கி, அது அய்ந்தாம் வகுப்பு வரை நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் பள்ளியின் பெயர் “டாக்டர் வீரமணி – மோகனா வீரமணி மெட்ரிக்குலேசன் பள்ளி”.
பரவாயில்லையே, கொள்கை சார்ந்த பணியாக இருக்கிறதே?
அதுமட்டுமல்ல, இது எங்கள் குடும்பம் சார்ந்து இருக்கக் கூடாது என்பதற்காக அறக்கட்டளையாக மாற்றிவிட்டோம். இதில் பலதரப்பட்ட மக்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கபிஸ்தலத்தில் இருப்பது பெரியார் கல்வி சமூகப்பணி அறக்கட்டளை. பாபநாசத்தில் இருப்பது திராவிடர் சமுதாய நலக் கல்வி அறக்கட்டளை. அதேபோல பாபநாசம் பள்ளியின் பெயர் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிகுலேசன் பள்ளி ஆகும்!
பிள்ளைகளுக்கு ஆங்கில அறிவை வளர்க்க வேண்டும் என இணையர் கணேசன் எப்படி தீவிரமாக இருந்தாரோ, அதேபோல பெண்கள் அதிகம் படிக்க வேண்டும் எனவும் பாடுபட்டார். அதற்குப் பல வகையிலும் உதவிகள் செய்தார்.
அதுமட்டுமின்றி “பெரியார் சேவை மய்யம்” எனும் அமைப்பைத் தொடங்கி, அதில் குருதிக்கொடை, விழிக் கொடை, உடற்கொடை தொடர்பான விழ்ப்புணர்வுப் பணிகளும் நடந்தது.
ஆண்டுக்கு ஒருமுறை “சிந்தனைக் களம்” எனும் நிகழ்ச்சியை நடத்துவோம். ஆசிரியர் அவர்கள் பலமுறை அதில் பங்கேற்று உரை நிகழ்த்தியுள்ளார்கள்.
பல்வேறு அமைப்புகள் மூலம், பொது மக்கள் அதிகளவு பங்கேற்கும் பிரச்சாரங்களை உங்கள் குடும்பத்தினர் முன்னெடுத்துள்ளனர், இல்லையா?
ஆமாம்! அதில் மிக முக்கியமானது தமிழ் மக்கள் கலை விழா. இதையும் இணையர் கணேசன் அவர்கள்தான் தொடங்கி வைத்து, 19 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செய்து வருகிறோம். ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். மாலை 5 மணிக்குத் தொடங்கும் இந்தத் தமிழர் கலை விழா விடிய, விடிய நடைபெறும். மாட்டுவண்டி, டிராக்டர் மூலம் சுற்று வட்டார மக்கள் வருவார்கள். விதவிதமான உணவுகள் வழங்கப்படும்! ஆசிரியர் மட்டுமே 4 முறை வந்துள்ளார்கள். இப்படியாக இயக்கம் வேறு; குடும்பம் வேறு என்றில்லாமல் அந்தக் காலம் தொட்டு தொடர்கிறது!
ஒரு கட்டத்தில் என் அப்பாவும், எனது இணையரும் மறைந்துவிட்டார்கள். அவர்கள் இருவரோடும் ஏராளமான கழகப் பணிகள் செய்யும் வாய்ப்பை நான் பெற்றேன். இப்போது என் பிள்ளைகள் அதை முன்னெடுத்துச் செய்கிறார்கள். இணையர் இறந்த நேரத்தில் ஆசிரியர் அவர்கள் கனடாவில் இருந்தார்கள். பிறகு ஒருநாள் வீட்டிற்கு வந்து ஆறுதல் கூறினார்கள். இறப்பிற்குப் பிறகு எங்கள் குடும்பத்தில் விழிக் கொடைகளும், உடற் கொடைகளும் நிறைய செய்துள்ளோம். இவை அனைத்திற்குமே பெரியார் கொள்கைதான் காரணம்”, என நெகிழ்ச்சியோடு பேசினார் பொம்மி அம்மா!