கருத்தரங்க நிகழ்வாக மாறிய ஓசூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்!
ஓசூர்,டிச. 6- டிசம்பர் 1.12.2024 காலை 10 மணி அளவில் ஓசூர் கவுரி விடுதியில் நடைபெற்ற ஓசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சிவந்தி.அருணாச்சலம் தலைமை வகித்தார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பேரரசன் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார். நிகழ்விற்கு திராவிட கழக ஓசூர் மாவட்ட தலைவர் வனவேந்தன், ஆ.செல்வம், எழிலன், கண்மணி, சுகந்த், து.சங்கரன், சண்முகம், கௌதம், பிரசாந்த், சின்னசாமி, வாசு, ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய இளைஞர்கள்
பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சிவந்தி.அருணாச்சலம் மற்றும் மாவட்டச் செயலாளர் பேரரசன் பெரும் முயற்சியால் கலந்துரையாடல் கூட்டத்திற்கு பெருவாரியான புதிய இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களின் அறிமுகத்திற்குப் பின்னர் பேசத் தொடங்கிய பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள், திராவிடர் கழகத் தோழர்கள் அனைவரும் தனது பேச்சில் தந்தை பெரியாரின் தொண்டு பற்றியும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அரும்பணி பற்றியும், தற்போதைய திராவிட மாடல் ஆட்சி பற்றியும் செய்திகளை தொகுத்து பேசி சிறப்பித்தனர்.
பகுத்தறிவாளர் கழக மாநில துணை தலைவர் அண்ணா.சரவணன் பேசுகையில் தந்தை பெரியார் அவர்கள் சிறு வயது முதல் திராவிடர் கழகம் தோற்றுவித்தது வரை பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை தொகுத்து சிறு பயிற்சி வகுப்பாக இளைஞர்களுக்கு எடுத்தார்.
பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வா.தமிழ் பிரபாகரன் பேசுகையில் தற்கால இளைஞர்களின் அரசியல் புரிதல் பற்றியும், அதில் எவ்வாறு தெளிவு பெறுவது பற்றியும், திராவிட இயக்க கொள்கைகளை எவ்வாறு புரிந்து கொள்வது பற்றியும், திராவிடத்தை எதிர்த்து காலகாலமாக வரும் எதிரிகளை எவ்வாறு அடையாளம் காண்பது பற்றியும் இளைஞர்களிடம் கேள்வி பதில் மூலம் கேட்டு விளக்கம் அளித்தார். 92 வயது பிறந்தநாள் காணும் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் தமிழ்நாட்டில் தமிழருக்கு ஆற்றிய பணிகள் குறித்து இளைஞர்களுக்கு எடுத்துரைத்தார்.
ஆயிரம் புத்தகங்களை படித்து பெறும் உணர்ச்சியை பகுத்தறிவாளர் கழகம் ஏற்பாடு செய்யும் நாத்திகர் மாநாட்டில் கலந்து கொள்வதன் மூலம் பெரும் உணர்ச்சியை பெறலாம் என்பதை கூறி திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பு மாநாட்டிற்கு ஓசூர் பகுதியில் இருந்து பெருமளவில் இளைஞர்கள் கலந்து கொண்டு உணர்ச்சி பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
தனி வாகனம்
மேலும் இந்திய பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பு மாநாடு தற்போது தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கான அவசியத்தையும், அந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை எவ்வாறு பகுத்தறிவாளர் கழகம் மூலம் செய்யப்பட்டு வருகின்றன என்பதையும் அதில் கலந்து கொள்வது ஒவ்வொரு தமிழர்களின் கட்டாய கடமை என்பதையும் எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஓசூர் மாவட்டத்திலிருந்து தனி வாகனம் மூலம் பெருவாரியான இளைஞர்கள் பங்கு கொள்வது என்றும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை பகுத்தறி வாளர் கழகம் சார்பில் அறிவார்ந்த கருத்தரங்குகளை நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இறுதியாக எழிலன் அவர்கள் நன்றியுரை கூறினார்.