சென்னை, டிச. 5- போலி விளம்பரங்களை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் வெளியிட்டால், மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுக்கலாம்; காவல் துறையில் புகார் அளிக்கலாம்; ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி பொதுப்படையாக உத்தரவிட முடியாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தில், மங்கையர்க்கரசி என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது: பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. இந்த விளம்பரங்கள், பொது மக்களை திசை திருப்புகின்றன. இவற்றை ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளது.
போலி விளம்பரம்
போலி மருத்துவ விளம்பர நிகழ்ச்சிகளுக்கு, தொலைக்காட்சி ஊடகங்களில், 30 நிமிடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதுபோன்ற போலி மருத்துவர்கள், போலி மருத்துவமனைகள் தொடர்பான விளம்பரங்களுக்கு, தடை விதிக்க வேண்டும். ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.சிறீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, ‘முதல் அமர்வு’ முன், விசாரணைக்கு வந்தது. பொதுப்படையாக, ஊடகங்களுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க, முதல் அமர்பு (பெஞ்ச்) மறுத்து விட்டது. ஒவ்வொரு விளம்பரத்துக்காகவும், ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலாது என்றும், அமல்படுத்தக்கூடிய உத்தரவுகளை தான் பிறப்பிக்க முடியும் எனவும், முதல் அமர்வு (பெஞ்ச்) தெரிவித்தது. முதல் அமர்வு (பெஞ்ச்) பிறப்பித்த உத்தரவில், மேலும் கூறியிருப்பதாவது: விதிகளுக்கு முரணாக, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் சார்பில் விளம்பரங்களை வெளியிட்டால், உரிய அதிகாரியிடம் புகார் அளிக்கலாம்.
ஒவ்வொரு விளம்பரமும் திசை திருப்பும் வகையில் உள்ளதா என்பதை, ஊடகங்கள் சரிபார்த்து வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், பொது மக்களுக்கு பாதகமான விளம்பரங்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்பதை எதிர்பார்க்கலாம். போலி விளம்பரங்களை மருத்துவரோ, மருத்துவமனையோ வெளியிட்டால், மருத்துவக் கவுன்சில் நடவடிக்கை எடுக்க முடியும்.
புகார்
போலி மருத்துவர்கள், ஊடகங்களில் விளம்பரம் செய்தால் காவல் துறையில் புகார் அளிக்கலாம்; அதை காவல் துறை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். போலி விளம்பரங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க, சட்டத்தில் நிவாரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன. எனவே, ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, பொதுப்படையாக உத்தரவிட முடியாது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு முதல் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
பானை ஓடுகள் கிடைத்த இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
வத்திராயிருப்பு, டிச.5- வத்திராயிருப்பு அருகே யுள்ள மூவரை வென்றான் மலைக்கொழுந்தீஸ்வரா் கோயில் அடிவாரத்தில் குளம் தோண்டிய போது, பானை ஓடுகள் கிடைத்த இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.
மூவரைவென்றான் பகுதியில் உள்ள மலையில் 8-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த மலைக் கொழுந்தீஸ்வர் கோயில் அமைந்துள்ளது. குடைவரை முறையில் கட்டப்பட்ட இந்தக் கோயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோயில் மலை அடிவாரத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் குளம் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.
2.12.2024 அன்று குளம் வெட்டும் பணி நடை பெற்ற போது, 2 அடி ஆழத்தில் மண் பானை ஓடுகள், எலும்புகள் கிடைத்தன. இதுகுறித்து கோயில் தொல்லியல் சின்ன பாதுகாப்பாளா் ராம்விக்னேஷ் தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தாா்.
பானை ஓடுகள்
இதையடுத்து, கோயில் மலை அடிவாரத்தில் பானை ஓடுகள் கிடைத்த இடத்தில், விருதுநகா் மாவட்ட தொல்லியல் அலுவலா் சண்முகவள்ளி, தொல்லியல் துறை காப்பாட்சியா் பால்துறை, வருவாய்க் ஆய்வாளா் பாலமுருகன், கிராம நிா்வாக அலுவலா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு அறிக்கை அளித்து, இங்கு கிடைத்த பொருள்கள் ஆய்வு செய்யப்படும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
மேலும், குளம் தோண்டும் போது கிடைத்த மண் குடுவை, மண் பானை, இரும்பு தாதுக்கள் உள்ளிட்ட பொருள்களை வருவாய்த் துறையினர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: மலைக்கொழுந்தீஸ்வரா் கோயில் மலையைச் சுற்றிலும் முதுமக்கள் தாழி உள்ளிட்ட பழங்கால மண்பாண்ட பொருள்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கும் பணிக்கு தோண்டிய போது, பானை ஓடுகள் கிடைத்தன. இவற்றைத் தொல்லியல் துறையினர் ஆய்வுக்கு எடுத்து சென்றனர். தற்போது, குளம் அமைக்க தோண்டிய போது, மண்பாண்டங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.
மண்ணில் புதைந்த நிலையில் பல பானைகள் தென்படுகிறது. எனவே, இந்தப் பகுதியில் தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்ய வேண்டும் என்றனர்.