இந்திய கிரிக்கெட் ஆட்டக் காரர்களின் 9ஆம் நம்பர் விருப்பம்.. இதுதான் காரணமா?
இந்திய அணியில் உள்ள சில கிரிக்கெட் வீரர்களின் ஜெர்சி எண்ணை சேர்த்தால் 9 வரும். உதாரணமாக ரோஹித் (45), கோலி (18), சூர்யா (63), திலக் (72), சாம்சன் (9) ஆகியோர் இப்பட்டியலில் உள்ளனர். ஆனால் அவர்கள் இந்த எண்களை நியூமராலஜிபடி தேர்வு செய்திருக்கலாம் என கிரிக்கெட் ஆய்வாளர்கள் கூறு கின்றனர். ரோஹித் ஆரம்பத்தில் ஜெர்சி எண் 7 அணிந்திருந்தார். 45க்கு மாற்றினார்.
விளையாட்டு என்பது திறமையைச் சார்ந்தது. திற மையைக் காட்ட வேண்டிய இடத்தில் மூடநம்பிக்கையைக் கொண்டு வருவார்கள்.
திறமைக்கும், தகுதிக்கும் தொடர்பில்லாத பரீட்சையில் வாங்கும் மார்க்கை வைத்து ‘ஆகா பார்த்தீர்களா, புத்திசாலி மாணவன் அல்லது மாணவி’ என்று திறமை பேசுவார்கள்.
இந்த ‘எண்’ மூடநம்பிக்கை இந்தியாவில் மட்டுமல்ல; உலகம் முழுவதும் பரவிதான் இருக்கிறது.
மூடநம்பிக்கை என்ன, இந்தி யாவுக்கு மட்டும்தான் சொந்தமா?
சிலருக்கு 8 ராசி இல்லாத நம்பராம். வேறு சிலருக்கோ 13 ஆம் எண் ராசியில்லாத ஒன்றாம்.
ரொம்பத் தூரம் போக வேண் டாம்; இந்தியாவின் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பேயிக்கு 8ஆம் நம்பர் ஆகாதாம்.
ஆனால் டில்லியில் அவருக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவின் எண் 8. என்ன செய்தார்கள் அதிகாரிகள்? அதே பங்களாவின் எண்ணை 6ஏ என மாற்றி விட்டார்கள். வீடு மாறவில்லை, ஆனால் வீட்டின் எண்ணை மாற்றி விட்டார்கள். வாஜ்பேயும் நிம்மதிப் பெரு மூச்சு விட்டார்.
படித்திருந்து என்ன பயன்? பகுத்தறிவு வேலை நிறுத்தம் செய்கிறது – என்ன செய்ய!
இலண்டனில் அரசி குடும்பத்தில் 13ஆம் எண் ஆகாதாம். ஒரு முறை இங்கிலாந்து ராணி பயணம் செய்ய வேண் டிய இரயில் 13ஆவது நடைமேடை யில் (பிளாட்பார்ம்) நின்றதாம்.
துடித்துப் போய் விட்டாராம். இங்கிலாந்து நாட்டின் அரசி யாயிற்றே! என்ன செய்தார்கள்? அரசி புறப்பட வேண்டிய ரயிலை வேறு பிளாட்பாரத்திற்கு மாற்றி விட்டார்கள்.
இலண்டன் அரசி குடும்பத்தி்ல் இரண்டாம் எலிசபெத்தின் தங்கை இளவரசி 1930 ஆகஸ்டு 21 அன்று பிறந்தார். ஆனால் அந்தக் குழந்தையை உடனடியாகப் பதிவு செய்யவில்லை. மூன்று நாட்கள் காத்திருந்தனராம். பிறந்த நாளன்று பதிவு செய்திருந்தால் 13ஆம் எண் வரிசையில் இடம் பெற நேர்ந்திருக்குமாம்.
இந்த மூடத்தனத்தை முறியடிக்க அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பகுத்தறி வாளர்கள் 13 பேர் கூடினர். 1982 ஜனவரி 13இல் ஒரு சங்கத்தைத் தொடங்கினார்கள். அதன் பெயரே 13ஆவது சங்கம் என்பதாகும்.
ஓர் உணவு விடுதியில் 13ஆவது அறையில் 8.13 மணிக்குத் தொடங்கி 13ஆவது மணிக்கு (அதாவது பிற்பகல் 1 மணிக்கு) விழாவினை முடித்தனர். சங்கத்தில் சேர நுழைவுக் கட்டணம் 1.13 டாலர். ஆயுள் சந்தா 13. ஒவ்வொரு மாதமும் 13 பேர் 13ஆம் தேதி கூடுவார்கள்.
மூடத்தினத்திற்கு இப்படி சவுக்கடி கொடுத்தவர்களும் உண்டு. சென்னை மாநகராட்சியில் வீட்டு எண் 13க்குப் பதிலாக 12ஏ என்று போடுவார்கள்.
நமது தலைவர் ஆசிரியர் அவர் களின் இல்லத்து பழைய எண் 13.
அறிவியல் வளர்ந்தாலும் அறிவு வளர்ச்சி கட்டையாகத் தானே இருக்கிறது.
கையாலாகாதவனுக்குக் கடவுள் துணை – துணிவு இல்லாத வனுக்கு மூடநம்பிக்கையே கதி.
– மயிலாடன்