கிருஷ்ணகிரி, டிச.3- ஓசூர் அருகே சினையாக இருந்த கழுதையின் தலையை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி எடுத்துச்சென்ற னர். அமாவாசை நாளில் பூஜை நடத்துவதற்காக கழுதையின் தலை வெட்டி எடுக்கப்பட்டதா? என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கொத்த கொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 43). சலவைத் தொழில் செய்து வருகிறார். இவர் 20-க்கும் மேற்பட்ட கழுதைகளை வளர்த்து வருகிறார். இந்த கழுதைகள் மூலம் கிடைக்கும் கழுதைப் பாலை அவர் விற்பனை செய்தும் வருவாய் ஈட்டி வருகிறார்.
1.12.2024 அன்று காலை வழக்கம் போல ஆனந்த் ஏரிக்கரை ஓரத்தில் உள்ள தனது கொட்ட கைக்கு சென்றார். அந்த நேரம் கொட்டகையின் கதவு உடைக் கப்பட்டு இருந்தது.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த கழுதைகள் மீது ரத்தம் தெளித்த நிலையில் இருந்தது.
மேலும் சினையாக இருந்த ஒரு பெண் கழுதையின் தலை வெட்டப்பட்டு முண்டமாக ரத்த வெள்ளத்தில் கிடந்தது. அதன் தலையை அடையாளம் தெரியாத நபர்கள் யாரோ வெட்டி எடுத்து சென்றுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ஆனந்த் இதுகுறித்து காவல் துறையில் புகார் செய்தார்.
நள்ளிரவு நேரத்தில் கொட்ட கைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் பெண் கழுதையின் கால்கள் உள்ளிட்ட இடங்களில் கத்தியால் வெட்டி விட்டு பின்னர் கழுதையின் கழுத்தை அறுத்து பின்னர் தலையை எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.
அன்று அமாவாசை என்பதால், மாந்திரீகம் செய்து பூஜை நடத்துவதற்காக கழுதையின் தலை வெட்டப்பட்டதா? என காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.