புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண நிதி விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

viduthalai
3 Min Read

விழுப்புரம், டிச.3- ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசால் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரத்தில் நேற்று (2.12.2024) உறுதியளித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மரக்காணம் அருகே மண்டவாய் புதுக்குப்பம், விழுப்புரம் பாதுகாப்பு மய்யம், காணை, அரகண்டநல்லூர், திண்டிவனம் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நிவாரண உதவிகள் வழங்கினார்.

அப்போது விழுப்புரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக கடுமையான மழை பெய்துள்ளது. குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் இதுவரை கண்டிராத மழையை சந்திக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த இரு நாள்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இவையல்லாமல் மற்ற மாவட்டங்களிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட அதிகமாக பதிவாகி உள்ளது.

இந்த புயல் தொடங்குவதற்கு முன்பாகவே அரசின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்காக பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி உரிய நடவடிக்கையை முன்கூட்டியே மேற்கொண்டிருக்கிறோம் என்று உங்களுக்கெல்லாம் தெரியும். அதேபோல் அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் இந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தொடர்புடைய ஆட்சியர்களுடன் நானும் தொடர்பு கொண்டு இந்த விவரங்களை தெரிவித்துக் கொண்டிருந்தோம். அதேபோல் காணொலி மூலமாகவும் ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டு உரிய அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக மீட்பு பணிக்குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்திற்கு 407 வீரர்களை உள்ளடக்கிய 7 தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரும், 8 மாநில பேரிடர் மேலாண்மை குழுவினரும் என மொத்தம் 15 குழுக்களும், கடலூர் மாவட்டத்திற்கு 56 பேரிடர் வீரர்களும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 30 வீரர்களை கொண்ட ஒரு குழுவும் ஆக மொத்தம் 3 மாவட்டங்களுக்கும் 493 வீரர்கள் அடங்கிய 18 குழுக்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த மீட்புப் பணிகள் குழுவினரோட மாநில மீட்புப் பணிகள் துறையை சேர்ந்த வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 180, கடலூர் மாவட்டத்தில் 247 மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 210 மொத்தம் 637 தீயணைப்பு பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புயல், மழையிலிருந்து பாதுகாக்க 174 நிவாரண மய்யங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் 7,876 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு வசதி, மருத்துவ வசதிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டம் பெரும் பாதிப்படைந்து மின்சாரமின்றி பல பகுதிகள், ஊராட்சிகள், பேரூராட்சிகள் சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதையும் சரிசெய்ய வேண்டி மின்வாரியதுறை சார்பில் 900 பேர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தண்ணீர் தேங்கிய இடங்களெல்லாம் உடனடியாக மின்சாரம் தரமுடியாத சூழ்நிலை இருக்கிறது. தண்ணீர் வடிந்த பகுதிகளிலெல்லாம் உடனுக்குடன் மின்இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது மழையின் அளவு கடலூர் மாவட்டத்தில் குறைந்திருந்தாலும் உள்மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருருக்கிறது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மூத்த அய்ஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ரா தலைமையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சிறப்புக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பயிர் சேதங்களை பொறுத்தவரை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் நெல் பயிர்கள் மூழ்கியிருக்கின்றன. தற்போதைய உத்தேச கணக்கெடுப்பின்படி 1.29 லட்சம் எக்டேர் அளவில் சேதம் ஏற்பட்டிருப்பதாக புள்ளிவிவரம் பெறப்பட்டிருக்கிறது. மழை முழுமையாக நின்ற பிறகு முறையான, முழுமையான கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் நிச்சயமாக வழங்கப்படும். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பான அறிக்கையை விரைவில் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்து சேதங்களை பார்வையிட உடனடியாக குழுவை அனுப்பி வைப்பதற்கான கோரிக்கை நிச்சயமாக தமிழ்நாடு அரசு வைக்க இருக்கிறது என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *