பேராசிரியர்
மா.செல்வராசன்
பல்கலைக் கழகத்தின்
படிப்பிலே முதன்மையுற்று
கல்வியிற் சிறந்திருந்த
கடலூரின் செல்வன்தான்
எல்லோரும் செய்வதுபோல்
ஏற்றதொரு பணிதேடிச்
செல்லாமல் சமுதாயச்
சீர்திருத்தப் புறட்சியர்
வல்லவர் பெரியாரின்
வழிநாடி வந்தவர்!
சொல்லாற்றல் பெற்றவர்;
சுழல்புயல் ஆனவர்;
நில்லாமல் பாய்கின்ற
நீர்ஆறு போன்றவர்:
வெல்லாமல் ஆரியத்தை
விடுதலை இல்லையென்று
கல்லாத பேர்களுக்கும்
கற்றபெரு மக்களுக்கும்
இல்லாத ஏழையர்க்கும்
இருக்கின்ற செல்வர்க்கும்
பொல்லாத ஆரியத்தின்
பொய்ம்மையை, புரட்டினைச்
சொல்லாத நாளில்லை;
துண்டாட வாளில்லை!
பெரியார்க்குப் பின்இந்தப்
பெரும்புரட்சி இயக்கத்தைச்
சரியாமல் மணியம்மை
தலைமையில் நிலையாக
விரிவாக்கி உலகமெலாம்
விழுதூன்றும் வீரமணி
உரிமைக்குப் போராடும்
ஒப்பற்ற ஒருதலைவர்!
கரியாத வைரமவர்;
கருஞ்சட்டை மறவரவர்;
பரியாகப் பாய்பவர்.
பார்ப்பனியம் ஓய்ப்பவர்:
சரிநீதி சமூகநீதி
தாங்கியே நிற்பவர்:
மரியாதை, பகுத்தறிவு
வான்தொடும் வெற்பவர்:
அரியநூல் ஒவ்வொன்றும்
ஆழமாய்க் கற்பவர்:
அரியணை ஏறாமல்
ஆள்கின்ற கொற்றவர்!
புரிநூலார் கலங்கியே
புலம்பவைக்கும் கூற்றுவர்.
எரித்திடப் பழங்குப்ைப
எழுந்திடும் காற்றவர்.
வரிசையாய்க் கருத்துகள்
வழங்கிடும் ஊற்றவர்:
நரியாரின் வஞ்சக
நஞ்சொழிக்க நோற்றவர்.
பெரியாரே தலை வரெனப்
பிள்ளையில் ஏற்றவர்!
பிரியாரே என்றுமவர்
பேரியக்க ஆற்றலர்!
தெரிவான திராவிடமே
தீர்வென ஆற்றுபவர்
விரிவாக இன்றுவரை
விளக்கங்கள் சாற்றுபவர்!
பரிவாகக் கருத்துநீர்
பகுத்தறிவாய் ஊற்றுபவர்:
தெருவெங்கும் தன்மானத்
திருவிளக்கை ஏற்றுபவர்.
ஆசிரியர் என்றாலே
அவரைத்தான் குறித்திடும்:
மாசிலார் எனில்வீர
மணியே ஒலித்திடும்;
வீசிடும் புயலென்றால்
விடுதலையை விளம்பிடும்:
ஏசிடும் கூட்டத்தின்
எதிரியென இயம்பிடும்!
காசிலார் என்றாலும்
கருஞ்சட்டை யாளர்கள்
ஆசிலார்; கொள்கையே
அகமுளார்; தகவுளார்!
கூசிடார் பகுத்தறிவைக்
கூறிடாது இருந்திடார்.
தூசியாம் பழமையைத்
துடையாது விட்டிடார்:
பாசியாம் அறியாமைப்
படிக்கட்டைத் தொட்டிடார்!
ஊசிமுனை அளவெனினும்
ஊழலுக்கு ஒப்பிடார்:
உண்மையன்றி வேறொன்றை
ஒருபோதும் செப்பிடார்!
கண்மயக்கும் வித்தைகளைக்
கருவொழிக்கத் தப்பிடார்!
பெண்மயக்கம் கொள்ளாத
பேராண்மை கொண்டவர்.
திண்மையே வாழ்வெனும்
தெளிவினைக் கண்டவர்!
வண்மையே கொள்கையென
வாழ்வினை விண்டவர்!
மண்மயக்கம் இல்லாத
மானமிகு ஆசிரியர்
தொண்ணூறு தாண்டியின்று
துலங்குக நூறுமேல்!
தொல்காலத் தமிழரை
தூயநல் அறிவினரை,
பல்காலம் ஆண்டவரை
பகுத்தறிவு பூண்டவரை
மல்லரை மறவரை
மானமிகு மன்னரை
மெல்லமெல்ல மயக்கியே
மேன்மைகளைப் பொசுக்கியே
வெல்லத்தைத் தடவியுள்ளே
விரிநஞ்சை வைப்பதுபோல்
புல்லேந்திப் பூணூலார்
பொய்க்கதைகள் கட்டினார்.
எல்லோர்க்கும் மேலொருவன்
இருக்கின்றான் கடவுளெனப்
பல்லோர்க்கும் உரைத்துரைத்துப்
பகுத்தறிவு தன்மானம்
மெல்லமெல்ல போக்கினர்:
மீள்அடிமை ஆக்கினர்!
செல்லாத மாக்களாய்
தெருவிலே நிற்போராய்
அல்லலில் உழல்வோராய்
அறியாமை மிக்கோராய்ச்
செல்லரித்து விட்டதுபோல்
செழுமையை அழித்தவர்கள்
வில்லெடுத்துப் பழகாதார்.
வீரவாள் சுழற்றாதார்.
கல்லுடைத்து வியர்க்காதார்
கழனிவயல் உழைக்காதார்.
கொல்களிறு அடக்காதார்.
குகைப்புலி கொல்லாதார்
வல்லாண்மை அழிக்கவே
வந்த ஒரு பெரியாரின்
நல்லாண்மைத் தொண்டராய்
நாடெலாம் வலம்வந்து
சொல்லாண்மைத் திறத்தாலே
சீடரான வீரமணி
நல்லதொரு பிறந்தநாள்
நற்கொள்கை சிறந்தநாள்!
பகுத்தறிவு தன்மானம்
பயன்படும் செயல்திறன்
வகுத்திங்கே வழங்கிடும்
வாய்மையர் வீரமணி
உகுத்திடும் கருத்துகள்
உயர்பெருஞ் சொத்துகள்:
தொகுத்திடும் முத்துகள்:
தோற்றுவிக்கும் வித்துகள்:
அகங்கொண்டால் வாழ்விலே
அறியாமை மூடநிலை
புகல்இல்லை;
ஜாதிமதப் புரட்டுகள்
எழுவதில்லை: இகல்இல்லை
மக்களிடம், ஹிந்திமொழித்
திணிப்பினை நகங்கிள்ளி
எறிவதைப்போல்
நறுக்காமல் விடுவதில்லை!
அண்ணாவும் கலைஞரும்
அடுத்தெழும் தளபதியும்
கண்ணாவார்.
தமிழர்க்குக் காப்பாவார்:
என்கின்ற உண்மையை
எப்போதும் ஒவித்துவரும்
வீரமணி வெண்மையாய்ப்
பேசுபவர்: விடுதலைத் தீ வீசுபவர்!
தகவான எண்ணங்கள்
தருகின்ற பனுவல்கள்
மிகவாகத் தீட்டுபவர்:
விடுதலைப்பண் மீட்டுபவர்;
பகலொளி நீட்டுபவர்:
பயன்வழி கூட்டுபவர்:
நிகழ்காலம் காட்டுபவர்:
நெஞ்சுரம் ஊட்டுபவர்:
தகைசான்ற தமிழரவர்:
தமிழர்க்குத் தலைவரவர்!
ஆரியச் சூழ்ச்சிவலை
அண்டாமல் அறுத்தெறிந்த
கூரிய பெரியாரின்
கொள்கைவேல், வெல்கைவேல்
நேரிய முறையிலே
நெறியான வழியிலே
சூரியன்போல் இன்றுவரை
சுட்டெரித்து வருகின்ற
வீரமணி ஆசிரியர்
விழுமிய பிறந்தநாள் ஈரமண் தமிழ்நாட்டில் எழுந்திடும் சிறந்தநாள்!
தோரணங்கள் கொடிமலர்கள்
தோன்றுமிடம் எலாம்ஏற்றி
வாரணங்கள் பண்முழக்கம்
வாழ்த்தொலிகள் பூச்சொரிதல்
ஊர்வலங்கள், பேருரைகள்
ஓங்கிட நூறாண்டு
பூரணம் ஆகிமேல்
பொலிந்திட வாழ்த்துவோம்!