* கவிஞர் கண்ணிமை
புரையோடிக் கொண்டிருந்த
சமுதா யத்தைப்
புரட்சியெனும் தீயாலே
திருத்தி வைத்த
உரையாற்றும் பெரும்பெரியார்
பிள்ளை யானார்
உண்மையினை விளக்குகின்றார்;
கேள்விப் போரால்
நரைத்தாடி பின்சென்றார்;
குலத்தில் மிக்கோர்
நடுநடுங்கி ஒளியின்முன்
இருளாய்ப் போனார்!
விரைந்துவந்த ஜாதிமதப்
புழுக்கள் இந்த
வீரமணி வெயில்முன்னே
அழிந்தே போகும்!
பொய்யாலே மக்களினை
அடக்கி வைத்துப்
புராணத்தால் மேனியினை
வளர்த்து வந்த
பொய்யர்களாம் புரிநூலார்
மனுதர் மத்தை
போட்டுடைத்து இடுப்பொடிய
அடிக்க வந்தார்!
வையத்தில் தகைசான்ற
தலைவர் ஆனார்,
மடமைநோய் ஒழிவதற்கும்
மருந்து சொல்வார்!
மெய்யெழுத்தும் உயிரெழுத்தும்
ஆக நின்று
மேன்மையினை விளக்குபவர்
இவரே யாவர்!
சிந்தனைத்தேர் வடம்பிடித்தே
இழுக்கும் வீரர்!
சிறைக்கஞ்சா சிங்கமென
திகழும் தீரர்!
இந்நாட்டில் பகுத்தறிவு
விதையைத் தூவி
எண்ணத்திற் பெரும்புரட்சி
பயிர்வ ளர்த்த
வெண்தாடிச் சீடனிவர்!
நாக்குச் சண்டை
எடுத்திட்ட முதல்வீரர்,
மக்க ளுக்காய்,
செந்தணல்தான் இவர்கொள்கை;
மாற்றா ருக்குச்
சிவந்திருக்கும் செம்மலர்தான்,
தமிழர்க் கெல்லாம்!
பகுத்தறிவுப் பாசறையில்
பயிற்சி பெற்ற
கருஞ்சிறுத்தைப் புலிகளுக்கு
இவரே ஆசான்!
தொகுத்துரைக்கும் பேச்சுமழை
அறிஞர், இந்தத்
தூயவரின் தொண்டரெனில்
தலைவர்க் குள்ள
தகுதியினை விளக்குதற்குச்
சொற்கள் உண்டா?
தண்ணிலவுக் கொப்பாமா
மற்ற கோள்கள்!
பரிதியைப்போல் இருக்கின்ற
தமிழர் தலைவர்,
பகைநடுங்க இவரையென்றும்
வையம் வாழ்த்தும்!