உலகில் எந்த ஓர் அமைப்பிலும் செய்யாத அளவுக்கு விஷயங்களைச் சேகரித்து வைக்கும் கருவூலமாக வீரமணி திகழ்கிறார்!

Viduthalai
2 Min Read

முத்தமிழ் அறிஞர் கலைஞர்

நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்களுடைய அரும்முயற்சி இன்னும் நூறாண்டுகளுக்குப் பிறகு திராவிட இயக்கத்தைப் பற்றி தெரிந்துகொள்ள – தந்தை பெரியாரைப் பற்றித் தெரிந்துகொள்ள – அண்ணாவைப் பற்றித் தெரிந்துகொள்ள எங்கெங்கு இருந்து ஆதாரங்கள் திரட்டப்பட்டன, எப்படியெல்லாம் நம்முடைய வரலாறு முன்னாளில் இருந்தது, பின்னாளில் அமைந்தது என்பதையெல்லாம் இன்னும் நூறாண்டுகளுக்குப் பிறகு தெரிந்துகொள்ள வேண்டுமென்றாலும் அதற்கான கருவூலமாக நம்முடைய வீரமணி அவர்கள் விளங்கு கிறார்கள் என்று சொன்னால், அதை யாராலும் மறுக்க முடியாது.

இதோ என் கையிலே உள்ள இந்தப் புத்தகம் செங்கல் பட்டு முதல் தமிழ் மாகாண சுயமரியாதை மாநாடு, 1929 – ஒரு வரலாற்றுத் தொகுப்பு. நான் நிச்சயமாகச் சொல்கிறேன். அவர் மாத்திரம் இன்றைக்குத் திராவிடர் கழகத்திலே தந்தை பெரியாருடைய வழித்தோன்றலாக அமையாமல் இருந்திருப்பாரேயானால், இந்தப் புத்தகம் எனக்குக் கிடைத்திருக்காது (கைதட்டல்).
இதிலே உண்மைகள் வரலாற்றுச் சான்றுகள், இங்கே நடைபெற்ற மாநாடு, அந்த மாநாட்டிலே கலந்துகொண்டவர்கள், அவர்களைப் பற்றிய விவரங்கள் எதுவும் எனக்குக் கிடைத்திருக்காது.

இதிலே சவுந்தரபாண்டியனாருடைய உருவத்தைப் பார்க்கிறேன். வி.வி.ராமசாமி நாடார் உருவப்படத்தைப் பார்க்கிறேன். அவ்வளவு ஏன்? இதே செங்கல்பட்டிலே இருந்த வேதாசலம் முதலியார் படத்தையும் அதிலே பார்க்கிறேன். வேதாசல முதலியார் உங்களுக்குத் தெரியும். “வேலைக்காரி” படத்திலே அறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம். அந்த வேதாசல முதலியார் அந்த மாநாட்டிலே கலந்துகொண்டார். ஒரு முக்கிய பொறுப்பேற்றார் என்கின்ற இந்தச் செய்தியெல்லாம் எங்கள் சிந்தையைச் செதுக்கச் செய்கின்ற செய்திகளாகும்.

விஷயங்களைச் சேமித்து வைப்பதிலே வீரமணி யிடத்திலே பாடம் படிக்கவேண்டும்
இந்தச் செய்திகள் எல்லாம் காணாமல் போயிருக்கும். இப்படிப்பட்ட புத்தகத் தொகுப்பு மாத்திரம் இல்லாவிட்டால், நான் உலகத்தில் உள்ள எல்லாக் காட்சிகளையும் ஒப்பிட்டு இப்படிச் சொல்லவேண்டுமேயானால், அவர் என்னைப் பாராட்டியதற்காக, நான் அவரைப் பாராட்டுவதாக அர்த்தமல்ல. உலகத்திலே உள்ள எல்லா கட்சி அமைப்புகளைப் பற்றியும் சொல்லவேண்டுமேயானாலும், எந்த ஓர் அமைப்பிலும் இவ்வளவு விஷயங்களைச் சேகரித்து வைத்து, அதை எதிர்காலத்திற்குத் தரக்கூடிய இந்த ஆற்றல், நம்முடைய வீரமணியாருக்கு இருப்பதைப்போல வேறு யாருக்கும் இருப்பதாக நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். அவரிடத்திலே எங்களைப் போன்ற கட்சிகளெல்லாம் இதற்காகப் பாடம் படிக்கவேண்டும். எங்களுடைய முன்னோடிகள்கூட இங்கே வந்திருக்கிறார்கள். மூத்த தம்பிமார்களெல்லாம் வந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம்கூட இன்று முதல் பயிற்சியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அடக்கத்தோடு அவர்களை எல்லாம் நான் கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

-(செங்கற்பட்டு சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாடு 80ஆம் ஆண்டு விழாவில் முதலமைச்சர் கலைஞர்- 18.2.2008

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *