ஆ.வந்தியத்தேவன்
திராவிடர் இயக்க வாழும் தலைவர் களில் வயதாலும், பட்டறிவாலும், அறிவாற்றலாலும் மூத்த தலைவர்; பெரியாரியலை உலகமயமாக்கிடும் உயரிய தலைவர்; மதவெறிக் கழுகுகளிடமிருந்து ஒடுக்கப்பட்ட மக்களைக் காக்கும் ‘தாய்ப் பறவை’, என பல்வேறு சிறப்புகளை ‘அணிகலன்களாக’க்கொண்ட நம் தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களுக்கு இன்று (2.12.2024) அகவை 92! நினைக்கும் போதே நம் நெஞ்சம் இனிக்கிறது!
பிறந்தநாளை விழா எடுத்துக் கொண் டாட விரும்பாத அவரது பிறந்தநாளை நன்றியுணர்ச்சியுள்ள தமிழ்மக்கள் குதூகலம் பொங்கக் கொண்டாடி மகிழ்கிறார்கள்!
பத்து வயது சிறுவனாகப் பெரியாரிடம் அடைக்கலமாகி, தமிழர் தலைவராக இன்று உயர்ந்து நிற்கும் ஆசிரியர் அவர்களின் அடிச்சுவடுகள் நாள்தோறும் நமக்குப் பாடம் கற்பிக்கின்றன என்கிற உணர்வோடு நாம் அவருக்கு வாழ்த்து சொல்கிறோம்!
“மாபெரும் தலைவர் பெரியாரின் அடிச்சுவட்டில் இருந்து ஆயுதங்களானோர் ஆயிரம் ஆயிரம் உண்டு. அதில் நானும் ஒருவன். எனக்குள்ள முகவரியே – எல்லா நாதியற்ற தமிழினத்திற்கும் உள்ளது போலவே தந்தை பெரியார்தான்! அவர்தம் அடிச்சுவடே என்னுடைய நிரந்தரப் பாதை! அவர் வைத்த இலக்கை நோக்கியே என்னுடைய பயணம்! என் வாழ்வில் நான் பெற்ற பெரும் பேறு பெரியார் தொண்டன்; தொண்டனுக்குத் தொண்டன் என்பதே!” என்று ‘பிரகடனம்’ செய்தது மட்டுமல்ல, வெளியிடுகிற அறிக்கைகளில் நிறைவாக கையொப்பம் இடுகிறபோதும் “உங்கள் தோழன், தொண்டன்” என்று குறிப்பிடுகிற ஆசிரியரின் ‘தன்னடக்கம்’ நம் அனைவருக்கும் பாடமாகிறது!
“சமுதாயப் புரட்சிப்பணி என்ற இராணுவப் பணிக்கு வந்த பிறகு- சிந்தித்துச் சேர்ந்த பிறகு – கண்ணை மூடிக்கொண்டு கடமையாற்று!
தன்னலத்தைத் தள்ளிவிடு! பொது நலம் பேணுவதை உயிர் மூச்சாகக் கொள்!
தன்மானம் உன்மானம் எனினும் இனமானம் என்று வரும்போது உன் தன்மானத்தையும் இழந்து, அவமானத் தையும் உன் கொள்கைப் பயிருக்கு உரமாக்கிக்கொள்!
மானம் பாராது தொண்டு செய்வது மட்டுமல்ல; நன்றி பாராட்டாது பணி புரிவதே சமுதாயத் தொண்டர்களின் இலக்கணமாக இருக்கவேண்டும்!” என்று சொன்னவர்- சொன்னதைச் செய்து காட்டியவர் தாம் சோர்வறியாச் சொக்கத் தங்கம் நம் பெரியார்!” என்று பெருமிதத்துடன் சுட்டிக் காட்டிய நம் ஆசிரியர் இந்த வழியில், இன்றும் இலட்சியப் பயணம் தொடர்கிறார் என்பதுதான் அவரது தனிச் சிறப்பு!
இந்தச் சிறப்புகள்தான் அய்யா பெரியாரையும் ஈர்த்தது. தன்னலம் இல்லாத பண்பு நலனும், உழைப்பும், ஆற்றலும் அறிவாண்மையும் குவிந்து கிடக்கும் ஆசிரியரை அழைத்து இயக்கப் பொறுப்பையும் ‘விடுதலை’ ஆசிரியர் பொறுப்பையும் ஒப்படைத்தார் அய்யா பெரியார்!
“வீரமணி நல்ல படிப்பாளி, இன்னும் 10 நாள் போனால் ‘எம்.ஏ.’ என்று போட்டுக்கொள்வார். அவர் திராவிடர் கழகத்திற்கு நிதி போன்றவர், அதைப்பற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி!” என்று கடலூரிலேயே பேசினார் பெரியார்!
“திரு.வீரமணி நம்மைப் போன்றவர் அல்ல. அவர் ஒரு வக்கீல். எவ்வளவோ நல்ல வாய்ப்பு அவரை அணுகக் காத்திருக்கிறது. அவற்றுக்குத் தடை ஏற்படலாம். என்னைப் பொறுத்தவரை அவருக்கு அப்படி தடை ஏற்பட்டால் நமக்கு நல்லதாகிவிட்டது என்றுதான் கருதுவேன். ஏன்? நம் இயக்கத்திற்கு ஒரு ‘முழு நேரத் தொண்டன்’ நமக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்கிற ஆசை. இப்போது அவர் தொண்டு அரை நேரம். இனி அது முழு நேரமாகிவிடலாம்” என்று சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்திலேயே தன் எதிர்பார்ப்பை, விழைவை வெளிப் படுத்தினார் பெரியார்!
“இயக்கத்தால் தங்கள் நலனுக்கு எந்தவிதப் பலனும் அடையாமல், பணத்திலேயே வாழ்ந்துகொண்டு அவரவர்கள் நேரத்தைச் செலவு செய்து கொண்டு பல கஷ்டநஷ்டங்கள் அடைந்து இயக்க வளர்ச்சிக்கு இரவும் பகலும் பாடுபடும் உண்மைத் தொண்டர்களான இயக்கத் தோழர்கள்” என்று தான் வரையறை செய்த தகுதிகள் நம் ஆசிரியரிடம் ததும்பி வழிந்ததைக் கண்டுதான், பெரியார், விரும்பி அழைத்துப் பொறுப்புகளை அவருக்கு வழங்கினார்.
“சுயநலமில்லாது, எவ்விதப் பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத்தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல மற்றொருவர் வந்தார் – வருகிறார் – வரக்கூடும் என்று உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லவேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்கத் தலைமைப் பிரச்சாரகராகவும், ‘விடுதலை’ ஆசிரியராகவும் பயன்படுத்திக் கொள்ள முன்வந்து அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் விடுதலையை ஒப்படைத்துவிட்டேன்” என்று விடுதலையில் (6.6.1964) அறிவித்தார் பெரியார்!
ஆசிரியர் அவர்களின் முயற்சியில், ஆண்டுதோறும் ‘விடுதலை’ ஏடு, பெரியார் பிறந்தநாள் விழா மலரை, பல வண்ணங்களில் கருத்துச் சுரங்கமாய்- காலப் பெட்டகமாய் வெளியிட்டது. இதனைக் கண்டு மகிழ்ந்த, அறிஞர் அண்ணா அவர்களும், என்.வி.நடராசன் அவர்களும் ஆசிரியரைப் பாராட்டினார்கள். “எங்களுக்கெல்லாம் கொடுக்காத உரிமையைப் பெரியார் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். நினைத்துப் பார்க்க முடியாத அளவு ‘விடுதலை மலர்’ ‘மல்டி கலரில்’ வந்திருக்கிறது” என்று பாராட்டியபோது, நம்மைப்போல ஆசிரியர் மகிழ்ச்சியால் துள்ளவில்லை.
“அய்யாவுடன் இருந்த காலத்தையே தமது ‘வாழ்வின் வசந்தம்’ என்ற அறிஞர் அண்ணா-‘விடுதலை’யின் ஆசிரியரான முன்னோடியான அண்ணா. அவரது மூதுரை என்னை மேலும் கவனமாகப் பணியாற்று; அய்யாவின் நம்பிக்கையைப் பெறுவது எளிதல்ல, அதனை நீ பெற்றிருக்கிறாய்; அதனை விட்டு விடாமல் காப்பாற்றிக் கரை சேர்” என்று அறிவுறுத்துவதாகவே நான் அந்தப் பாராட்டைப் பாடமாக்கிக் கொண்டேன்” என்ற வரிகள் புகழ் போதையில் சிக்கிடக் கூடாது என்ற வழிகாட்டுதலாக நமக்கு பயனளிக்கிறது.
மலேசிய நாட்டில் கழகப் பிரச்சாரம் செய்து திரும்பிய நம் ஆசிரியர் அவர் களுக்கு, ‘விடுதலை’ சார்பில் ஒரு பாராட்டு – தேநீர் விருந்து பெரியார் திடலில்(28.6.1968)தான் பெரியார் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் அவர்களை மலேசியாவிற்கு வழிஅனுப்பவும், மலேசியாவிலிருந்து திரும்பியபோது வரவேற்கவும், விமான நிலையம் செல்ல அய்யா பெரியார் விரும்பினார்; ஏற்கனவே ஒப்புக்கொண்ட தருமபுரி மாவட்ட நிகழ்ச்சிகள் இருந்ததால், அம்மா அவர்களை அனுப்பி வைத்தார். இதனைக் குறிப்பிட்டு, அந்த நிகழ்ச்சியில் பெரியார் பாராட்டுரை வழங்கினார்.
பாராட்டுக்கு நன்றி தெரிவித்து நிறைவாக ஆசிரியர் உரையாற்றும்போது, ”இந்தப் பாராட்டுகளால் நான் வெட்கமும், கூச்சமும் அடைகிறேன்; சந்திர மண்டலத் திற்குச் செல்லும் அறிவியல் வளர்ச்சி பெற்ற காலம் இது; மலேசியா சென்று திரும்புவது என்பது பெரிய காரியம் அல்ல; வழக்கம்போல கழகப் பணிக்காகவே அங்குச் சென்று திரும்பியுள்ளேன்; பெரியாரின் அன்பு ஒன்றே போதும்; விமான நிலையத்திற்கு அவர் வராதது குறை அல்ல; உங்கள் அன்பு, பெரியாரின் அன்பு, அம்மாவின் அன்பு இவைகளுக்கெல்லாம் நான் நன்றியுள்ளவனாக என்றும் கடமை யாற்றுவேன்” எனக் குறிப்பிட்டது, பாராட்டை எதிர்பாரா ஈரோட்டுப் பாதையை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!
மதவெறிச் சக்திகள் தலைதுள்ளி ஆடும் இக்காலத்தில் நம் ஆசிரியரின் பணி நாடு முழுக்கத் தேவை என்று டெல்லியில் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் குறிப்பிட்டது இன்றைக்கும் பொருந்துகிறது.
”சமூகநீதிக்கு ஆதரவானவர்கள் அனைவரும் ஒன்றை உணர்ந்து செயல்பட வேண்டும். நாம் ஒன்றிணைந்து இந்துமத வெறிச் சக்திகளின் சவாலைச் சந்திக்க வேண்டும். மதவெறிச் சக்திகளின் கேந்திர மாய் விளங்கும் உ.பி.யில் அவர்களின் முது கெலும்பை முதலில் நாம் முறிக்க வேண்டும்.
மரியாதைக்குரிய சந்திரஜித் இந்தப் பணிக்கு நான் தலைமை ஏற்க வேண்டும் என்று கூறினார். ஆனால், இது தனிமனிதனால் செய்யக்கூடிய காரியம் அல்ல.
நண்பர் வீரமணி அனைவரை யும் ஒன்றுபடுத்தி, அழைத்துச் செல்லும் தலைவர் ஆவார். அந்தத் தகுதி அவருக்குத் தான் உண்டு!
எனவே இனியும் காலம் தாழ்த்தாமல், நாம் அனைவரும் ஒன்றுபட்டு;r செயல்பட வேண்டும்.
நான் வீரமணி அவர்களையும் அவரது இயக்கத்தவர்களையும் மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறேன். சுயநலமற்ற தொண்டினைத் தரக் கூடியவர்கள்” என்று 19.9.1995 அன்று குறிப்பிட்டது, இன்றைக்கு உ.பி.க்கு மட்டு மல்ல; நாடு முழுக்க தேவைப்படுகிறது!
அந்த உணர்வோடு நம் ஆசிரியர் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வோம்!
பெரியார் உலகமயமாகிட
உலகம் பெரியார் மயமாகிட
நூறாண்டு கடந்தும்
வாழ்க நம் ஆசிரியர்!