சென்னை, நவ.29 தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் நேற்று (28.11.2024) டில்லியில் ஒன்றிய சுற்றுலா, கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தை சந்தித்துப் பேசினார்.
தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை செயலர் பி.சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது அமைச்சர் ராஜேந்திரன், தமிழ்நாட்டின் பல்வேறு சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.4,573.53 கோடி வழங்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தினார். இதுதொடர்பாக ஒன்றிய அமைச்சரிடம் அவர் அளித்த மனுவின் விவரம்:
ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்தின்கீழ், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் திட்டத்துக்கு ரூ.30 கோடியும், நீலகிரி பைக்காரா இயற்கை சுற்றுலா தல மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.28.3 கோடியும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.சிறப்பு நிதியுதவி திட்டத்தின்கீழ் மாமல்லபுரத்தில் பாரம்பரிய நந்தவனம் அமைக்கும் திட்டத்துக்கு ரூ.99 கோடியும், உதகை தேவலாவில் சுற்றுலா பூந்தோட்டம் அமைக்கும் திட்டத்துக்கு ரூ.72.58 கோடியும், ராமேசுவரத்தில் சுற்றுலா பயணிகள் மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.99 கோடியும் தேவை.
மேலும், பிரசாத் திட்டத்தின்கீழ் 8 நவகிரக கோயில்களில் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த ரூ.44.95 கோடியும், மராட்டியர்கள், நாயக்கர்கள், பாளையக்காரர்கள் எழுப்பிய பாரம்பரிய கட்டடங்களை பாதுகாக்கவும், புனரமைக்கவும், சீரமைக்கவும் ரூ.3,000 கோடியும், சுற்றுலாத்துறை வளர்ச்சியை மேம்படுத்த ரூ.1,200 கோடியும் (மொத்தம் ரூ.4,573.53 கோடி) வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.