மொழியும், கலையும் நமது இரு கண்கள் – அவற்றைக் காப்போம்! விருது வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை

viduthalai
2 Min Read

சென்னை, நவ. 25- முத்தமிழ்ப் பேரவை பொன்விழா ஆண்டு இசை விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘மொழியையும், கலையையும்’ கண்போல் காப்போம் என்று தெரிவித்தார்.

மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்ட முத்தமிழ்ப் பேரவையின் 50ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டம், இசை விழா – விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்றது. முத்தமிழ்ப் பேரவையின் தலைவர் ஜி.ராமானுஜம் முன்னிலை வகித்தார். செயலாளர் இயக்குநர் பி.அமிர்தம் வரவேற்புரை வழங்கினார். நடிகர் சத்யராஜ் ஏற்புரையாற்றினார். திருவாரூர் பக்தவச்சலம் நன்றியுரையாற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நடிகர் சத்யராஜுக்கு ‘கலைஞர் விருது’, திருப்பாம்புரம் டி.கே.எஸ்.மீனாட்சி சுந்தரத்துக்கு ‘ராஜரத்னா விருது’, கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினிக்கு ‘இயல் செல்வம் விருது’, முனைவர் காயத்ரி கிரிஷுக்கு ‘இசைச் செல்வம் விருது’, திருக்கடையூர் டி.எஸ்.உமாசங்கருக்கு ‘நாதஸ்வரச் செல்வம் விருது’, சுவாமிமலை சி.குருநாதனுக்கு ‘தவில் செல்வம் விருது’, முனைவர் தி.சோமசுந்தரத்துக்கு ‘கிராமியக் கலைச் செல்வம் விருது’, பார்வதி ரவி கண்டசாலாவுக்கு ‘நாட்டியச் செல்வம் விருது’ ஆகியவற்றை வழங்கி கவுரவித்தார்.

அதைத்தொடர்ந்து முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா ஆண்டு மலராக எழுத்தாளர் துமிலன் எழுதிய ‘திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினத்தின் வாழ்க்கை சரிதம்’ நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை டி.என்.ராஜரத்தினத்தின் புதல்வி வனஜா சுப்ரமணியம் பெற்றுக்கொண்டார்.

பின்னர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: முத்தமிழ்ப் பேரவை தொடங்கிய காலத்தில் இருந்து ஆண்டுதோறும் மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞர் நேரத்தை ஒதுக்கி, தனது கடமையாக கருதி கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி வந்தார். அவர் வழியிலே நானும் எனது கடமையை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறேன். இயல், இசை, நாடகத்தில் முத்திரை பதித்து முத்தமிழாக வாழ்ந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். முத்தமிழ்ப் பேரவை வழங்கும் இந்த விருதானது, கலைஞரே வழங்கும் விருது மாதிரி.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது நம் முழக்கம். அந்த வரிசையில் இசையிலும் தமிழ் ஒலிக்கணும் – செழிக்கணும். இடையில் ஜாதி, மதம் என்ற அந்நிய மொழிகளில் பண்பாட்டு தாக்குதல்கள் நடந்தாலும் எல்லாத்தையும் தாங்கி, தமிழும், தமிழினமும், தமிழ்நாடும் நின்று நிலைக்க தமிழின் வலிமையும், நம் பண்பாட்டின் சிறப்பும் தான் காரணம். எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழிக்கும், கலைக்கும் உண்டு. அந்த இரண்டையும் கண்போல் காப்போம். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் முத்தமிழ்ப் பேரவை துணைத்தலைவர் குணாநிதி அமிர்தம், பொருளாளர் கணேஷ் ரமணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *