தோழர் கவுதமனுடைய பிறந்த நாள் விழா – நமக்கு நல்ல கற்றுலா!
இதுதான் இந்த விழாவின்மூலம் நாம் அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று
மருத்துவர் கவுதமன் அவர்களின் 75 ஆம் ஆண்டு பவள விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்
சென்னை, நவ.25 தோழர் கவுதமனுடைய பிறந்த நாள் விழா – நமக்கு நல்ல கற்றுலா! பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்கள். இங்கே வந்திருப்பவர்கள் எல்லாம் சுற்றுலாவிற்கு வரவில்லை; கற்றுலாவிற்கு வந்திருக்கிறீர்கள் – கற்றுலா பெருகட்டும்; நண்பர்களைச் சந்தியுங்கள், உற்சாகமாக இருங்கள். வயதாகிவிட்டதே என்று கவலைப்படாதீர்கள், குடும்பங்களில் பிரச்சி னைகள் இருக்கும்; பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்கள், அதைப் பார்த்து பயந்து ஓடி ஒளிந்துகொள்ளாதீர்கள். இதுதான் இந்த விழாவின்மூலம் நாம் அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மருத்துவர் கவுதமனின்
75 ஆம் ஆண்டு பவள விழா!
கடந்த 6.10.2024 அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்,இராதா மன்றத்தில் நடைபெற்ற பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் கவுதமன் அவர்களின் 75 ஆம் ஆண்டு பவள விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
23.11.2024 அன்று ‘விடுதலை’யில் வெளிவந்த சிறப்புரையின் தொடர்ச்சி வருமாறு:
தனக்கென வாழாமல், பிறருக்கென வாழ்பவர் மருத்துவர் கவுதமன் எனக்குப் பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், தனக்கென வாழாமல், பிறருக்கென வாழ்பவர் மருத்துவர் கவுதமன் அவர்கள்.
இங்கே உரையாற்றியவர்கள்கூட சொன்னார்கள், மருத்துவர் கவுதமன் அவர்கள் நிறைய பேருக்கு உதவி செய்கிறார் என்று.
உதவி செய்வதை வெளிச்சம் போடுவதில் ஒரு பெரிய ஆபத்து இருக்கிறது. அது என்னவென்றால், தகுதியில்லாதவர்கள்கூட உதவியைக் கேட்பார்கள். பல பேருக்கு இயக்கத்தின் சார்பில் உதவிகளைச் செய்கிறோம்; ஆனால், அதையெல்லாம் நாங்கள் வெளியில் சொல்வதில்லை. விளம்பரம் தேவையில்லை; நல்ல வாய்ப்பாக ஓட்டு கேட்பதும் இல்லை.
இன்றைக்கு இந்த நிகழ்ச்சியை நடத்துவதின் முக்கியத்துவம் என்னவென்றால், புத்தக வெளியீடுதான். நிறைய புத்தகங்களை கவுதமன் அவர்கள் எழுதுகிறார். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்.
கவுதமன் அவர்கள் எவ்வளவு பக்குவப்பட்டு இருக்கிறார் என்பதை நீங்கள் எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டும்.
பிறைநுதல் செல்வி அவர்களுடைய மறைவுதான் இந்த நேரத்தில், எனக்கும், என்னுடைய வாழ்வி ணையர், மற்ற எல்லோருக்குமே ஒரு பெரிய சங்கடம் என்னவென்றால், பிறைநுதல் செல்வி அவர்களுடைய மறைவுதான்.
எங்களால் இன்னமும் ஏற்க முடியாத ஓர் இழப்பு. குறிப்பாக எனக்கு. எங்களுடைய அமைப்பில், தந்தை பெரியாருக்குப் பிறகு, எத்தனையோ சோதனைகள், வேதனைகளுக்குப் பிறகு, இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்துக் கொண்டுபோகவேண்டும் என்ற நிலையில், நல்லவர்களைத் தயாரித்து, அவர்கள் இயக்கத்திற்கு வரவேண்டும் என்பதற்காகத்தான், டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களை கேட்டுக்கொண்டோம்.
ஏனென்றால், அவருடைய பண்பாடு, முதிர்ச்சி ஆகியவற்றைப் பார்க்கும்பொழுது, கவுதமன் சாதா ரணம்தான். இதைச் சொல்வதால் அவர் தவறாக நினைக்கமாட்டார். இரண்டு பேரையும் ஒப்பிடவே முடியாது. அந்த அளவிற்கு முதிர்ச்சி, பக்குவம்.
துணைப் பொதுச்செயலாளராக இருக்கும்பொழுது, நல்ல அளவிற்கு மேடைகளில் பேசுவார். நல்ல வண்ணம் இயக்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.
மூன்று குடும்பங்களின் இணைப்பு!
அவர் அதிகாரியாக – இணை இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். பிறகு அவர் ஓய்வு பெற்ற பிறகு, அவரை இயக்கத்தில் முழுமையாக ஈடுபட வைக்க வேண்டும் என்று நினைத்தோம்.
இந்த அரங்கத்தில் மூன்று குடும்பங்கள் இணைந்திருக்கின்றன.
1. இயக்கக் குடும்பம்
2. குருதிக் குடும்பம், ரத்த உறவுகள்.
3. கல்விக் குடும்பம் – பெரியாருடைய கல்விக் குடும்பம் ஆக மொத்தம் மூன்று குடும்பங்களின் இணைப்புதான் இந்த நிகழ்ச்சி.
இயற்கையின் கோணல் புத்தி!
அப்படி வரும்பொழுது, நல்லவர்கள் எல்லோரையும் தயாரித்து இயக்கத்திற்குக் கொண்டு வரும்பொழுது, இயற்கையின் கோணல் புத்தி அவர்களை நம்மிடமிருந்து பிரித்துக் கொள்கிறது.
இந்த இயக்கத்தில் நாளைக்கு என்று ஒத்தி வைக்கவேண்டிய பணிகளே இல்லை. இதுதான் நாம் பங்கேற்கின்ற கடைசி நிகழ்வு என்று – ஒவ்வொரு நிகழ்வையும்நடத்தவேண்டும். தந்தை பெரியார் அவர்களிடத்தில் கற்றுக் கொண்ட மிகப்பெரிய ஒரு தத்துவம் இது.
அறிவியல் வளர்ச்சிக்கு ஓர் உதாரணம் என்ன வென்றால், நாங்கள் இயக்க நிகழ்விற்காக ஜப்பானுக்குச் சென்றபொழுது,, காரில் சென்று கொண்டிருக்கும்பொழுதே, விடுதலை ஞாயிறுமலர் கேள்விகளுக்குப் பதில் எழுதவேண்டும் என்று சொன்னார்கள். அங்கிருந்தபடியே கேள்விகளுக்கான பதிலை டிக்டேட் செய்தேன்.
அய்யா, உங்களிடமிருந்து
நிறையக் கற்றுக்கொண்டேன்!
இதைப் பார்த்துக் கொண்டு வந்தார் தஞ்சையைச் சேர்ந்த நண்பர் பிரதீப் அவர்கள். இரண்டு நாள் கழித்து அவர் என்னிடம் சொன்னார், ‘‘அய்யா, உங்களிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன் நான். பெரியாருடைய வாழ்க்கை முறைப்படி நீங்கள் வாழுகிறீர்கள். ஆனால், இன்றைக்கு என்னை ஒருவர் பார்க்க வேண்டும் என்று தொலைப்பேசியில் கேட்டார்; இன்று முடியாது, நாளை மறுநாள் வாருங்கள் என்று சொல்லிவிட்டேன். ஆனால், இதற்குப் பிறகு நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். நீங்கள் வந்ததினால், எனக்கு கிடைத்த லாபம் என்ன வென்றால், இன்றைய பணியை, நாளைக்குத் தள்ளி வைக்கக்கூடாது; அந்தந்த பணியை, அவ்வப்பொழுதே செய்துவிடவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். இது மற்றவர்களுக்குப் பொதுவான லாபமாக இருக்கலாம்; ஆனால், எனக்கு இது தனிப்பட்ட முறையில் லாபம்” என்றார்.
அதேமாதிரி தயாரிக்கப்பட்டவர்கள் – தயா ரிக்கப்பட்ட வர்கள் என்று சொல்ல முடியாது; அவர்களுடைய ஆற்றல்தான் அதற்குக் காரணம்.
பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் அவர்களானாலும், பேராசிரியர் அ.இறையன் அவர்களானாலும், பேராசிரியர் மு.நீ.சிவராசன் அவர்களானாலும் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
அதேபோன்று கழகப் பொதுச்செயலாளராக இருந்த வர் அருமை நண்பர் துரை.சக்ரவர்த்தி அவர்கள். அவர் ஒரு சாலை விபத்தில் இறந்தார் என்று சொல்லுகின்ற நேரத்தில், என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
ஏனென்றால் நண்பர்களே, நான் சொல்வது பெருமைக்காகவோ, புகழுக்காகவோ அல்ல. எனக்கு உடல்நலக் குறைவு ஏற்படும்பொழுதுகூட நான் கவலைப்படுவது இல்லை. ஆனால், என்னுடைய தோழர்களுக்கோ, ஆதரவாளர்களுக்கோ, எனக்குப் பயன்படக் கூடிய தோழர்களுக்கோ உடல்நலக் குறைவு என்று சொல்லும்பொழுது, அவருடைய குடும்பத்தாரை விட அதிகமாகக் கவலைப்படக் கூடியவர்களாக நாங்கள் இருக்கிறோம். காரணம், அவர்கள்தான் ரத்தவோட்டம். உடலில் ஓர் உறுப்பு.
கூட்டு முயற்சிதான் –
பல பேருடைய ஒத்துழைப்புதான்!
அய்யாவிற்குப் பிறகு, அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோம்; அது நன்றாக இருக்கிறதோ, நன்றாக இல்லையோ – அப்படி நன்றாக இருக்கிறது என்று சொன்னால், அதற்கு என்ன காரணம் என்றால், ஒரு தனி மனிதன் அல்ல. அந்தத் தனி மனிதன் அந்தப் புகழுக்குரியவன் அல்ல. ஒரு கூட்டு முயற்சிதான் -பல பேருடைய ஒத்துழைப்புதான்.
ஆகவே, அவர்கள் நன்றாக இருந்தால்தான் நல்லது. நான் அடிக்கடி சொல்லக்கூடிய ஓர் உதாரணம் – ‘விடுதலை’ நாளிதழ் நன்றாக இருக்கிறது; பயனுள்ளதாக இருக்கிறது என்று பல பேர் என்னிடம் சொல்வார்கள். ஆனால், அதற்குக் காரணம் ஆசிரியராக இருக்கின்ற நான் மட்டுமல்ல; நிர்வாக ஆசிரியர் கவிஞர் கலி.பூங்குன்றன் உள்பட சந்தா ஒட்டுகின்ற தோழர்கள் வரை அந்தப் பெருமை சேரும்.
ஏனென்றால், நான் எழுதுகின்ற அறிக்கையில், ஒரு பகுதியை சந்தா அனுப்பும்பொழுது கிழித்துவிட்டார்கள் என்றால், சரியாகப் படிக்க முடியாது. ஆகவே, ஆசிரியருக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் உண்டோ; அந்த அளவிற்கு முக்கியத்துவம் சந்தா ஓட்டுகின்ற தோழர்கள்வரை உண்டு. எங்கள் கார் ஓட்டுநர்கள் வரை உண்டு. இது ஒரு குடும்பம் போன்றதுதான் – சுயமரியாதை இயக்கம்.
மிகத் துல்லியமாக எதையும் புரிந்துகொள்வார் டாக்டர் பிறைநுதல் செல்வி!
அப்படிப்பட்ட ஓரிடத்தில், டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களை, பல்கலைக் கழக அறக்கட்டளைப் பொறுப்பில் நியமித்திருந்தோம். மிகத் துல்லியமாக எதையும் புரிந்துகொள்வார். பிறகு, திராவிடர் கழகப் பொருளாளராக அவரை நியமித்தோம்.
அப்படிப்பட்டவருடைய மறைவு என்பது கவுதம னுக்கு முதல் இழப்பாகும். ஆனால், எங்கள் இயக்கக் குடும்பத்திற்கு, கொள்கைக் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும்.
என்னுடைய பிறந்த நாள் விழாவிற்காக குன்னூரி லிருந்து சென்னைக்கு வந்திருந்தார் டாக்டர் பிறைநுதல் செல்வி. பிறந்த நாள் விழா முடிந்து, நீண்ட நேரம் எங்களுடைய இல்லத்தில் அமர்ந்து கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தோம்.
பிறகு அவர் குன்னூருக்குப் பயணமானார். அவர்கள் பயணம் செய்த கார் விபத்திற்குள்ளாகி, அவர் மறைந்தார் என்ற செய்தி தாங்க முடியாத துயரத்தை எங்களுக்குக் கொடுத்தது.
பெரியாரின் வாழ்க்கைப் பாடம்!
ஆனாலும், எதை நாம் இழந்திருந்தாலும், அதிலி ருந்து வெளியே வரவேண்டும். இது பெரியாரின் வாழ்க்கைப் பாடம்.
நாகம்மையார் அவர்கள் இறந்து போகிறார்; இந்தக் காட்சியை நீங்கள் எல்லோரும் “பெரியார்” திரைப்படத்தில் பார்த்திருப்பீர்கள். நாகம்மையார் அவர்கள் இறந்தவுடன், பெரியார் அவர்கள் அழுது புலம்பிக் கொண்டிராமல், உடலை அடக்கம் செய்து விட்டு, ஒரு திருமணத்தில் பங்கேற்க திருச்சி பாலக்கரைக்குப் பயணமாகிறார்.
எவ்வளவு பெரிய மாற்றம்!
மே 12, 1933 நாளன்று கிறித்துவ மதத்தைச் சேர்ந்த மணமகனுக்கும், இந்து மதத்தைச் சேர்ந்த மணமக ளுக்கும் மணவிழாவினை நடத்தி வைக்க பெரியார் சென்றார்.
மணமகனின் தந்தையான பாதிரியார் அவர்கள், காவல் நிலையத்தில் பெரியார்மீது புகார் கொடுக்கிறார். பெரியார் அவர்கள், சுயமரியாதை திருமணத்தை நடத்த விருக்கிறார்; அதைத் தடுக்கவேண்டும்; பெரியாரைக் கைது செய்யவேண்டும். கிறித்துவ மத முறைப்படியில் செய்யவேண்டிய திருமணத்தை அவர் நடத்தக்கூடாது; அது மத மோதலாகும் என்று அந்தப் புகார் மனுவில் குறிப்பிடுகிறார்.
அப்புகார் மனுவினை ஏற்றுக்கொண்ட
காவல்துறை, பெரியாரை கைது செய்வதற்காக வருகிறார்கள்.
அன்றைக்கு 1933 ஆம் ஆண்டு கைது செய்வதற்காக வந்தார்கள்; இன்றைக்கு அப்படி செய்கிறவர்களைப் பாராட்டி பாதிரியார் அவர்கள் வந்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய மாற்றம்! ஒரு துளி ரத்தம் சிந்தாமல், இதுதான் பெரியார்! இதுதான் சுயமரியாதை இயக்கம்.
மறைந்தும் மறையாமல் நம்முடைய நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய எஸ்றா சற்குணம் அவர்கள். இன்றைக்கு எவ்வளவு பெரிய மாற்றங்கள் நடந்திருக்கின்றன. அதற்காக பெரிய அடிதடியோ, துப்பாக்கிச் சூடோ நடக்கவில்லை. அப்படிப்பட்ட ஒரு பெரிய வாய்ப்பு!
எங்களுக்கெல்லாம் ஏற்படுகிற மகிழ்ச்சிக்கு வேறொன்றும் நிகரில்லை!
இன்னார் இவர் என்று அறிவிக்கப்படும்பொழுது எங்களுக்கு மகிழ்ச்சி. இவர்தான் இந்தப் பதவியில் இருந்தார், அவர்தான் அந்தப் பதவியில் இருந்தார் என்று சொல்லுகிறபொழுது எங்களுக்கெல்லாம் ஏற்படுகிற மகிழ்ச்சிக்கு வேறொன்றும் நிகரில்லை.
டாக்டர் பிறைநுதல் செல்வியை இழந்த துயரத்திலிருந்து கவுதமன் வெளியே வரவேண்டும். கவுதமன் என்று சொல்லும்பொழுது அவர் ஓர் உதாரணம்தான். அதை மற்றவர்களுக்குச் சொல்கிறேன்; வாழ்க்கையில் உங்களுக்கு எந்தவிதமான விபத்துகளும் ஏற்படலாம்; எந்த நேரத்திலும் சோதனைகள் ஏற்படலாம். அதனால், நாம் சோர்ந்துவிடவோ, கீழே விழுந்துவிடவோ கூடாது. விழுவது இயல்பு; எழுவது மிக முக்கியம்.
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் சொன்னதை எல்லா இடங்களிலும் அடிக்கடி நான் சொல்லுவேன். ‘‘தமிழன் விழுகிறான், அதை நினைத்தால் எனக்கு வேதனையாகத்தான் இருக்கிறது. ஆனால், அவன் விழுவதைப்பற்றிக் கூட கவலையில்லை; நேற்று விழுந்த இடத்திலேயே, இன்றைக்கும் விழுகிறானே, அதை நினைத்தால்தான் எனக்கு வெட்கக்கேடாக இருக்கிறது; புதிய இடத்திலாவது விழலாம் அல்லவா”” என்று சொன்னார்.
வாழ்க்கையாக இருந்தாலும், கொள்கையாக இருந்தாலும், சமுதாயமாக இருந்தாலும் எதிர்நீச்சல் அடிக்கவேண்டும்!
ஆகவே நண்பர்களே, நீங்கள் எல்லாம் கவுதமனை உதாரணமாகப் பாருங்கள். எவ்வ ளவு பெரிய இழப்பு அவருக்கு. ஆனால், அந்த இழப்பினால் அவர் மனம் உடைந்து மூலையில் உட்கார்ந்துவிடவில்லை. குடும்பம் என்றால், சோதனைகள் வரும்; பல கருத்து மாறுபாடுகளும், உரசல்களும் வரும். அப்படிப்பட்ட நிலையில் நாம் அதிலிருந்து வெளியில் வரவேண்டும். துணிச்சலோடு அவற்றை நாம் எதிர்கொள்ளவேண்டும். வாழ்க்கையாக இருந்தாலும், கொள்கையாக இருந்தாலும், சமுதாயமாக இருந்தாலும் எதிர்நீச்சல் அடிக்கவேண்டும். அவதூறுகளா, அவற்றை வரவேற்போம்; கெட்ட பெயரா, அதை வரித்துக் கொள்வதற்குத் தயாராவோம். அவையெல்லாம் நமக்கு உரங்கள். நம்முடைய வாழ்க்கை என்ற பயிருக்குப் போடப்படுகின்ற உரங்களாகும்.
இந்தத் துணிச்சலை அவர் பெற்ற பிறகுதான், இங்கே வெளியிடப்பட்ட நான்கு புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு என்றார் வள்ளுவர்.
நல்ல புத்தகங்களைப் படிப்பது எப்படிப்பட்டது என்றால், நல்ல நண்பர்களோடு நாம் பழகும்பொழுது, அந்த நண்பர்களுடைய நட்பு நம்மை எப்படி உயர்த்துகிறதோ அதுபோல என்றார்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் மிக அழகாகச் சொன்னார்,
‘‘நூலைப்படி, சங்கத் தமிழ்
நூலைப்படி – முறைப்படி
நூலைப்படி
காலையிற்படி கடும்பகல்படி
மாலை, இரவு பொருள்படும்படி
என்று சொன்னார்.
அதுபோன்று, இங்கே வெளியிடப்பட்ட புத்தகங்களை நீங்கள் எல்லாம் பெற்றிருக்கிறீர்கள். கவுதமன் அவர்கள் தொடர்ந்து எழுதவேண்டும்.
புத்தக வெளியீட்டு விழா – அதில் கவுதமனின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா.
பிறந்த நாளில்,
பலவகை பிறந்த நாள் உண்டு!
பிறந்த நாள் முக்கியமல்ல, மீண்டும் சொல்கிறேன். ஆகவேதான், பிறந்த நாளில், பலவகை பிறந்த நாள் உண்டு. அதில் தத்துவ ரீதியாக, பயாலஜிகல் பிறந்த நாள் என்று ஒன்று. அதேநேரத்தில், பிசியாலஜிகல் பிறந்த நாள் என்பது மற்றொன்று. சைக்கலாஜிகல் பிறந்த நாள் என்பது இன்னொன்று.
இம்மூன்றுக்கும் வித்தியாசம் உண்டு. அதனால், வயதாகிவிட்டதே என்று யாரும் கவலைப்படவேண்டாம். வயதாகவில்லை; நாம் எப்பொழுதும் இளமையாகவே இருக்கலாம்; போராட உணர்வுகளை நாம் எப்பொழுதும் பெறலாம்.
எல்லோருடனும் பழகுங்கள்; மூத்தவர்கள், தனித்து இருக்காதீர்கள்; மற்றவர்களோடு கலகலப்பாக இருங்கள். அதற்குத்தான் இந்த இயக்கம் உங்களை இளமையாக்கிக் கொண்டிருக்கிறது.
நல்ல கொள்கைகள்
உங்களை இளமையாக்குகிறது!
நல்ல கொள்கைகள் உங்களை இளமையாக்குகிறது. வளமையாக்குகிறதா இல்லையா என்பதல்ல. அதேபோல, நீங்கள் கற்றதை மற்றவர்களிடம் சொல்லுங்கள்; நீங்கள் படித்ததை மற்றவர்களுக்குப் பரப்புங்கள்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை என்று ஒரு குறள் உண்டு.
இருக்கின்ற சாப்பாட்டைப் பபகிர்ந்து கொடுங்கள் என்று அந்தக் குறளுக்குப் பொருள் சொல்வார்கள். ஆனால், சாப்பாட்டிற்கு மட்டும் அல்ல அது.
அரிய கருத்தை நீங்கள் பெற்றால், அதை உங்களோடு வைத்துக் கொள்ளாமல், மற்றவர்களுக்கும் பரப்புங்கள் என்பதுதான் அதனுடைய பொருள்.
தானும் வாழ்ந்து,
பிறரையும் வாழ வைக்கிறார்
கவுதமன் அவர்கள் நிறைய படித்திருக்கிறார். தொழில் செய்கிறார். அந்தத் தொழில்மூலம் வருகின்ற வருமானத்தை மற்றவர்களுக்குக் கொடுக்கிறார். அதன்மூலமாக அவர் தானும் வாழ்ந்து, பிறரையும் வாழ வைக்கிறார்.
அதன்மூலமாகத்தான் நிறைய படிக்கிறார், அதை மற்றவர்களுக்கு வாரி இறைக்கிறார், அதுதான் புத்தகம்.
ஆகவேதான் நண்பர்களே, இதை ஓர் எடுத்துக்காட்டாகப் பின்பற்றுங்கள்.
யார் யாருக்கு எவை எவை முடியுமோ, அதைச் செய்யுங்கள். வீட்டோடு முடங்கிப் போகாதீர்கள்.
வயதாகிவிட்டதை முதுமை என்று கருதாதீர்கள்; முதிர்ச்சி என்று கருதுங்கள்!
வயதான நண்பர்களே, வயதாகிவிட்டது என்று கைவிரிக்காதீர்கள். வயதாகிவிட்டதை முதுமை என்று கருதாதீர்கள்; முதிர்ச்சி என்று கருதுங்கள்.
முதுமை வேறு; முதிர்ச்சி வேறு.
முதிர்ச்சி வரவேற்கத்தக்கது. முதிர்ச்சி வந்தால், முதுமை தானாகவே போகும். அதைத்தான் இந்த விழா எடுத்துக்காட்டுகிறது.
ஒவ்வொரு பிறந்த நாளிலும்,
ஒரு புத்தகத்தைத்தையாவது எழுதுங்கள்!
இன்னும் ஏராளமான புத்தகங்களை நீங்கள் எழுதுங்கள்; ஒவ்வொரு பிறந்த நாளிலும், ஒரு புத்தகத்தையாவது வெளியிடுங்கள்.
சுயமரியாதை வாழ்வு சுக வாழ்வு!
அதைத் தந்த பெரியாரை நினையுங்கள்!
பெரியார் இல்லையென்றால், நமக்கு இந்த மான வாழ்வு, உரிமை வாழ்வு, கல்வி வாய்ப்புகள், உத்தியோக வாய்ப்புகள் கிடைத்திருக்காது.
ஒன்றுபட்ட சமுதாயம் வரவேண்டும்!
சுயமரியாதை இயக்கத்திற்கு நூற்றாண்டு விழா – இவ்வாண்டு – அதைக் கொண்டாடுங்கள்; கொண்டாட வாருங்கள்.
கைகுலுக்குவோம், உயருவோம்; நம்மில் எட்டி நிற்கவேண்டிய அவசியமில்லை. ஒன்றுபட்ட சமுதாயம் வரவேண்டும்.
பாலின வேறுபாடு; ஜாதி வேறுபாடு; மதக் கூறுபாடு இவை எதுவும் நம்மைப் பிரிக்கவேண்டிய அவசியமில்லை.
அனைவரும் உறவினர்!
வாழ்க, வளர்க!
பல்லாண்டு வாழ்க!
நூறாண்டு வாழ்க என்று சொன்னார்கள். நூறாண்டு என்பது இக்காலகட்டத்தில் சாதாரணம். எங்களுடைய அறக்கட்டளை தலைவர் 102 வயதில் தலைமை தாங்குகிறார். அவர் கையில் கைத்தடிகூட கிடையாது.
ஒழுக்கம் பொதுச் சொத்து –
பக்தி தனிச் சொத்து
ஆகவேதான், அவரைப் பார்த்து நீங்கள் எல்லாம் உற்சாகமாக இருங்கள்.
எவ்வளவு காலம் உழைக்க முடியுமோ, எவ்வளவு காலம் சமுதாயத்திற்குப் பயன்பட முடியுமோ, அவ்வளவு காலத்திற்கு
வாழ்வதற்காக முயலுங்கள்!
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அந்த ஒழுக்கம் பொதுச் சொத்து – பக்தி தனிச் சொத்து. பெரியாரை நினைத்து நன்றி காட்டி வாழுவோம்
ஆகவேதான், தனிச் சொத்து எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்; பொதுச்சொத்து கெட்டுவிடக் கூடாது என்று பெரியார் சொன்னார். அந்தப் பெரியாரை நினைத்து நன்றி காட்டி வாழுவோம்!
வாழ்க பெரியார்!
வளர்க தொண்டு!
வாழ்க தோழர் அருமை கவுதமன் போன்றவர்கள்! அவருடைய பிறந்த நாள் விழா – நமக்கு நல்ல கற்றுலா! பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்கள் இங்கே வந்திருப்பவர்கள் எல்லாம் சுற்றுலாவிற்கு வரவில்லை; கற்றுலாவிற்கு வந்திருக்கிறீர்கள். கற்றுலா பெருகட்டும்; நண்பர்களைச் சந்தியுங்கள், உற்சாகமாக இருங்கள். வயதாகிவிட்டதே என்று கவலைப்படாதீர்கள், குடும்பங்களில் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்கள். அதைப் பார்த்து பயந்து ஓடி ஒளிந்துகொள்ளாதீர்கள். இதுதான் இந்த விழாவின்மூலம் நாம் அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.