திருச்சி, நவ. 23- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ஆண்டு தோறும் மாணவ மாணவிகளைக், கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கல்விச் சுற்றுலா 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 20/11/2024 மற்றும் 21/11/2024 ஆகிய இரண்டு நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் 160 மாணவர்கள், திருச்சி, திருவரங்கத்தில் அமைந்துள்ள ஸ்டெம் பூங்காவிற்கு(STEM – Science, Technology, Engineering, Mathematics Park) அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த பூங்காவானது, ஏராளமான குழந்தைகள் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குடன், தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் இருந்து வருகிறது. இது மட்டுமல்லாமல் குழந்தைகள் விளையாடுவதற்கு என்று தனியாகவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய காணொலிக் காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு , 3டி முறையில் மாணவர்கள் வானியல், உயிரியல், புவியியல் போன்றவற்றைக் கற்கும் வகை யில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதைக் கண்டு இரசித்தனர், இதன் மூலம் சோலார் சிஸ்டம், சந்திராயன் மிஷன், உலகம், பிளான்ட் கிங்டம், ஃபாரஸ்ட் எக்கோ சிஸ்டம் போன்ற பல்வேறு தகவல்களை அவர்கள் அறிந்து கொள்வதற்கு இந்தக் கல்விச் சுற்றுலா மிகவும் உறுதுணையாகவும், பயனளிப்பதாகவும் இருந்தது.
ரயில் அருங்காட்சியகம்
4 மற்றும் 5ஆம் வகுப்பு பயிலும் 150 மாணவர்கள், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரயில் அருங்காட்சியகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துப் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதில் ரயில் அருங்காட்சியகத்தில் பழைய தென்னக ரயில்வேயின் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ள உட்புறக் கண்காட்சியில் ஆங்கிலேய ஆட்சியின் பல்வேறு ஆவணங்கள், அப்போது, பயன்படுத்தப்பட்ட அரிய புகைப்படத் தொகுப்புகள், வரைபடங்கள், அரசிதழ்கள், ரயில்வே கையேடுகள் மற்றும் புத்தகங்கள் மற்றும் கலைப்பொருட்களான சீனா கண்ணாடி, கடிகாரங்கள், மணிகள், பழைய விளக்குகள், பணியாளர்கள் பேட்ஜ் களையும் . வெளிப்புற கண்காட்சியில் சில பழங்கால நீராவி இன்ஜின்கள், 1930இல் கட்டப்பட்ட கோச், பழைய நீராவி இன்ஜின், இங்கிலாந்து கம்பெனி பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றையும் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
போக்குவரத்து பூங்கா
தொடர்ந்து, குழந்தைகள் போக்குவரத்து பூங்காவிற்குக் களப்பயணம் சென்றனர். அடிப்படை சாலை பாதுகாப்பு விதிகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட பவர்பாயிண்ட் விளக்கக்காட்சியைப் பயன்படுத்தி, ஒவ்வொரு சாலைப் பாதுகாப்பு விதிகளையும் பொறுமையாக விளக்கிய அதிகாரிகளுடன் குழந்தைகள் உரையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றனர். பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக குழந்தைகள் அந்த இடத்தைப் பார்வையிட்டனர். போக்குவரத்து பூங்காவில் போக்குவரத்து சிக்னல்கள், சாலை அடையாளங்கள் மற்றும் சாலைக் கடக்கும் வசதிகள் உள்ளன, இதனால் குழந்தைகள் விளையாட்டு வழி முறையில் சாலைப் பாதுகாப்பின் பல்வேறு அம்சங்களைப் பற்றி அறிந்து மகிழ்ந்தனர். போக்குவரத்து விதிகள் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
சாலைப் பாதுகாப்பு
மாணவர்களால் சாலைப் பாதுகாப்பைத் தெளிவாகக் கவனிக்க முடிந்ததால், மாணவர்களுக்கு விளக்குவது எளிதாக இருந்தது. பூங்காவில் உள்ள ஒரு பயிற்றுவிப்பாளர் ஜீப்ரா கிராசிங்கின் முக்கியத்துவம், பாதசாரி சுரங்கப்பாதை மற்றும் கால் மேல் பாலங்களின் பொருத்தம் ஆகியவற்றை விளக்கினார். சிறு குழந்தைகள் புனையப்பட்ட நடைபாதைகள், அடையாள பலகைகள், போக்குவரத்து விளக்குகள் ஆகியவற்றைக் கண்டு உற்சாகமடைந்தனர். நடைபாதைகள், சுரங்கப்பாதைகள், கால் மேல் பாலங்கள் மற்றும் ஜீப்ரா கிராசிங்குகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைக் கற்றுக்கொண்டது குழந்தைகளுக்கு இது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. இது குழந்தைகளுக்கு வேடிக்கை யாக மட்டுமல்லாமல், சிறந்த கற்றல் அனுபவமாகவும், கல்வி மற்றும் பொழுதுபோக்கின் புத்துணர்ச்சியூட்டும் கலவையாகவும் இருந்தது.