இந்தியா முழுமையும் உயர்நீதிமன்றங்களில்
76% நீதிபதிகள் பார்ப்பனர்களும், உயர்ஜாதியினர்களும்தானா?
நீதித் துறையிலும் சமூக அநீதியா? அனுமதியோம்! அனுமதியோம்!!
இந்தியா முழுமையும் உயர்நீதிமன்றங்களில் 76% நீதிபதிகள் பார்ப்பனர்களும், உயர்ஜாதியினர்களும் தானா? நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்று நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் குரல் எழுப்புக – போராடுக! நீதித் துறையிலும் சமூக அநீதியா? அனுமதியோம்! அனுமதியோம்!! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
இந்தியா முழுமையும் உள்ள உயர்நீதிமன்றங்களில் வெறும் 12 விழுக்காட்டினர் மட்டுமே இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பைச்சேர்ந்த நீதிபதிகள்; 76 விழுக்காட்டினர் பார்ப்பனர்களே!
ஒன்றிய அரசின் நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்பட்ட அதிர்ச்சிப் புள்ளிவிவரங்களே இவை!
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட
கேள்வியும் – பதிலும்!
நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் 2018 ஆம் ஆண்டுக்குப் பின் நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 76 சதவீதத்துக்கும் மேலானவர்கள் பொதுப் பிரிவை சேர்ந்தவர்கள் என மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்களின் ஜாதிவாரியான கணக்கைப்பற்றி கடந்த ஜூலை 21ஆம் தேதி மக்கள வையில் கேள்வி எழுப்பியிருந்தனர். அதில், துணைக் கேள்வியாக
· பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்காமல், கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து உயர்நீதிமன்றங் களிலும் நியமிக்கப்பட்டுள்ள 76% நீதிபதிகள் உயர் வகுப்பை சார்ந்தவர்கள் என்பது உண்மையா? ஆம் என்றால், என்ன காரணம்?
· 2018 ஆம் ஆண்டு முதல் நியமிக்கப்பட்ட 537 நீதிபதிகளில் 2.6% பேர் மட்டுமே உயர் வகுப்பினர் அல்லாதவர்கள் என்பது உண்மையா? ஆம் என்றால், அதன் விவரங்கள் என்ன?
· உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளிடம் சமூக பன் முகத்தன்மை மற்றும் சமூக நீதி தொடர்பான பிரச்சி னைக்குத் தீர்வு காணுமாறு அரசாங்கம் வலியுறுத்தி யுள்ளதா? ஆம் என்றால், அதன் விவரங்கள் என்ன?
· நீதிபதிகளின் நியமனம் தொடர்பாக, 90-களின் பிற்பகுதியில் கொலீஜியம் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நிலைமை மோசமாகிவிட்டதா?
· ஆம் என்றால், உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுடன் ஆலோசித்து இது தொடர்பாக எடுக்கப்பட்ட அல்லது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை என்ன?
· 2018ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை உயர்நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட 604 நீதிபதிகளில், 458 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இதற்கு ஒன்றிய அரசின் பதில் என்ன?
என்ற இக்கேள்விகள் எழுப்பப்பட்டன.
இக்கேள்விகளுக்கு ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக விரிவான பதிலளித்தார்.
நீதிபதி நியமனம் நடைமுறை
அதில், உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையாளர்கள் வழங்கிய தகவலின்படி 2018ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி வரை உயர்நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட 604 நீதிபதிகளில், 458 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அதுபோக, 18 நீதிபதிகள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், 9 பேர் பழங்குடியினத்தவர்கள் என்றும், இதர பிற் படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களில் 72 பேர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 34 நீதிபதிகள் சிறுபான்மையினர் என்றும், 13 நீதிபதிகளில் சமூகம் குறித்த தகவல் இல்லை என்றும் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதி நியமனத்தைப் பொறுத்தவரை ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் அடங்கிய பட்டியலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநில அரசு, ஆகியோர் அனுப்புவார்கள், அதனைப் பரிசீலித்து நீதிபதிகளை நியமிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கிறது
சமீபத்திய எடுத்துக்காட்டு ஒடிசா மாநில நீதிபதி முரளிதரன் என்பவரை தமிழ்நாடு தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்து உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு அனுப்பியது. ஆனால், அதை ஒன்றிய அரசு நிராகரித்துவிட்டது, இதற்குக் காரணம் டில்லி கலவரத் தின் போது அவர் கலவரத்தைத்தூண்டிய பா.ஜ.க. தலைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார். இதனாலேயே அவரை பஞ்சாப்- அரியானா நீதிமன்றத்திற்கு மாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
எதிர்க்கட்சிகளின் கடமை!
நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று திராவிடர் கழகம் தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறது. பல ஆண்டுகளுக்குமுன் ஒன்றிய சட்ட அமைச்சராக இருந்த பி.சங்கரானந்த் சென்னைக்கு வந்தபோது, அவரை நேரில் சந்தித்து, திராவிடர் கழகத்தின் சார்பில் இதுகுறித்து எழுத்துப்பூர்வமாகக் கடிதமும் கொடுத்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாதி உணர்வு இந்தியாவைப் பொறுத்தவரை மிக முக்கியமானது. இந்த நிலையில் உச்சக்கட்ட அதிகாரம் படைத்த உச்ச, உயர்நீதிமன்றங்களில் அனைவருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவேண்டியது மிகவும் அவசியமே!
ஒன்றிய அமைச்சர் கூறியுள்ள பொதுப் பிரிவினர் என்பது பெரும்பாலும் பார்ப்பனர்களே!
இந்திய அரசமைப்புச் சட்ட முகப்புரையிலேயே சமூகநீதி முதல் இடத்தைப்பெற்றுள்ள நிலையில், அதனை மதித்து நடக்கவேண்டிய நீதிமன்றங்களிலேயே சமூகநீதி புறக்கணிக்கப்படுவது – சட்டப்படியோ, நியாயப்படியோ சரியாகுமா என்பதை சிந்திக்கவேண்டும்.
குறிப்பாக சமூகநீதி தொடர்பான பிரச்சினைகளில் குறிப்பிட்டவர்களின் ஆதிக்கம் காரணமாக சமூகநீதிக்கு எதிரான தீர்ப்புகள் (‘நீட்’ உள்பட) வருவதைக்கண்டு பெரும்பாலான மக்கள் மத்தியில் மனக்குமுறல் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.
சமூகநீதிக் குரல் எங்கெங்கும் வெடிக்கட்டும்!
ஒன்றிய அமைச்சர் தந்த புள்ளி விவரத்தின் அடிப் படையில் நீதித் துறையில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வரும் வகையில் சட்டம் இயற்றப்படவேண்டும் என்று சமூகநீதியில் அக்கறை கொண்ட அனைத்துக் கட்சி களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
‘‘நீதித் துறையில் சமூக அநீதியா? அனுமதியோம்! அனுமதியோம்!!” என்ற போர்க் குரல் நாடெங்கும் வெடித்துக் கிளம்பட்டும்! கிளம்பட்டும்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
25.7.2023