நூல் : இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் (வரலாற்றுக் கையேடு)
நூல் ஆசிரியர் : கி.தளபதிராஜ்
வெளியீடு : திராவிடன் குரல்
பக்கம் : 44 விலை : ரூ.50
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
தந்தை பெரியாரின் முதன்மை கொள்கை என்பது ஜாதி ஒழிப்பே! சமூகத்தில் நிலவிய ஜாதிய ஏற்றத்தாழ்வினை அழித்தொழிக்க எல்லா எல்லைகளுக்கும் சென்று போராடிய தலைவர் பெரியார்.
அவர் கண்ட ‘சுயமரியாதை இயக்கம்’ மனித சமத்துவத்திற்கு தடையாக இருந்த அனைத்தையும் எதிர்த்தது. பெரியாரின் வழி வந்த அவரின் கருஞ்சட்டை தொண்டர்கள், தலைவரின் ஆணை ஏற்று மானுட விடுதலைக்காக எதையும் செய்யத் துணிவு கொண்டிருந்தனர். தந்தை பெரியாரின் கொள்கை உறுதி, துணிவு, போராட்ட குணம், போராட்ட வடிவம், அணுகுமுறை, அவர்தம் தொண்டர்களின் கடப்பாடு என அனைத்தையும் இச்சமூகத்திற்கு உணரச் செய்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த போரட்டம் தான் ‘இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம்!’
திராவிடர் கழக வரலாற்றில் மட்டுமின்றி ஜாதி ஒழிப்புக்கான வரலாற்றிலும் அதற்கு ஈடு இணையான போராட்டம் வேறு எதுவும் இல்லை என்று எண்ணும் அளவிற்கான கருஞ்சட்டைகளின் தியாக வரலாற்றின் உச்சம் அது!
அத்தகைய வலிமை மிகுந்த போராட்டத்தினை நம் கண் முன் கொண்டு வரும் சிறப்பான முயற்சியை 44 பக்க அளவிலான இந்நூலின் மூலம் செய்திருக்கிறார், நூலாசிரியர் கி.தளபதிராஜ். பெயர் அளவில் மட்டுமல்ல; ஆய்வு நோக்கிலும் இந்நூல் நமக்கு ஒரு வரலாற்றுக் கையேடு தான். நூலில் இடம் பெற்றுள்ள உட் தலைப்புகள் நம்மை வாசிக்கத் தூண்டுகிறது. காரணம், கற்பனைகள் ஏதுமின்றி அனைத்துமே வரலாற்றை மய்யப்படுத்தி எழுதப்பட்ட செய்திகளாக இருக்கின்றன.
கராச்சி காங்கிரஸ் தீர்மானம்! *அரசியல் சட்டத்தில் ஜாதிக்கு பாதுகாப்பு!
சட்டம் எரிக்கப்பட வேண்டும்! *பிராமணாள் பெயர் பலகை அழிப்பு!
சாகத் துணிவு கொள்ளுங்கள்!
அரசியல் சட்டம் நம்மைக் கட்டுப்படுத்தாது!
தஞ்சை ஸ்பெஷல் மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள்!
தஞ்சை ஸ்பெஷல் மாநாடு!
பெரியார் உரை!
தஞ்சையே முன்னணி!
ரயில் மூலம் சுற்றுப் பயணம்!
தேசிய அவமதிப்பு தடைச் சட்ட மசோதா விவாதம்!
விவாதத்தில் அண்ணா!
தேசிய அவமதிப்பு தடைச் சட்ட மசோதா நிறைவேறியது!
மந்திரிக்கு அனுப்புங்கள்!
நீதிமன்றத்தில் தோழர்களின் பிரகடனம்!
சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பெரியார்!
பெரியார் கைது!
சிறை செல்லும் முன் பெரியார் வேண்டுகோள்!
இந்திய அரசியல் சட்டம் தீக்கிரை!
தியாகத் தீயில் குதித்தனர் திராவிடர்!
“வெற்றி! வெற்றி! வெற்றி!
*சிறையில் நான்காயிரம் தன்மான வீரர்கள்!
நேருவிற்கு பெரியார் பதிலடி! *பெரியார் மீண்டும் கைது!
சிறையில் உயிர் நீத்தத் தோழர்கள்!
பெரியார் விடுதலை!
மேற்கண்ட தலைப்புகளின் மூலம் தந்தை பெரியாரின் ‘ஜாதி ஒழிப்பு’ எனும் முதன்மை கொள்கையை அடைய, சமத்துவம் சமூகம் படைக்க அவரின் சொல் கேட்டு அணிதிரண்ட கருஞ்சட்டை படையின் தீரமிகு கொள்கை உணர்ச்சி நமக்கு புலப்படுகிறது. மேலும், தலைவர் என்பவர் எந்த முறையில் தனது தொண்டர்களை வழிநடத்த வேண்டும் என்பதற்கான இலக்கணம் தந்தை பெரியார் தான் என்பதை நமக்கு உணர்த்தும் பல சான்றுகள் இந்நூலில் இருக்கிறது. குறிப்பாக, தான் கைது செய்யப்படலாம் என்பதை உணர்ந்து, பெரியார் கூறுகிறார், “நவம்பர் 25ஆம் தேதி நடக்கும் விசாரணையில் எனது ஜாமின் பத்திரம் கேன்சல் ஆகி என்னை சிறைப்படுத்தும் படியான நிலைமை பெரும்பாலும் ஏற்படலாம்.
இந்த சமயத்தில் பொதுமக்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டியது அவசியமாகும். நான் சிறைப்படுத்தப்பட்டு விட்டேன் என்பதாலேயே அல்லது பொதுமக்கள் கொளுத் துவார்கள் என்கிற எண்ணத்தாலேயே அதை தடுக்க அரசாங் கத்தார் ஏராளமான மக்களை கைது செய்து விட்டார்கள் என்ற எண்ணத்தாலேயே, புதிய சட்டத்தின்படி நீண்ட நாள் தண்டிக்கப்பட நேரிடும் என்ற அச்சத்தினாலேயே, யாரும் அதாவது கொளுத்த வேண்டியது அவசியம் தான் என்று கருதுகிறவர்கள் எந்த விதமான தயக்கமும் இல்லாமல் அரசமைப்புச் சட்டத்தில் இருந்து பொறுக்கி எடுத்து போட்டு இருக்கிற நமக்கு கேடான நாலைந்து பிரிவுகளைக் கொண்ட பிரசுரத் தொகுப்பை கொளுத்தியே தீர வேண்டியது முக்கியமான காரியம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இதைவிட முக்கியமான காரியம் ஒன்றை வணக்கமான வேண்டுகோளாக தெரிவித்துக் கொள்கிறேன். அதை அவசியம் ஒவ்வொருவரும் கவனிக்க வேண்டியது , என்னை ரிமாண்ட் செய்வதானாலும் மற்றும் இப்பொழுது நடைபெறும் வழக்கின் பெயரால் என்னை நீண்ட நாள் அரசாங்கத்தார் தண்டனைக்கு உள்ளாக்கி விடுவதாலேயோ பொதுமக்கள் யாரும் ஆத்திரப்படுவதற்கோ நிலைகுலைந்து விடுவதற்கோ ஆளாகாமல் மிக்க மகிழ்ச்சியோடு அச்செய்தியை வரவேற்க வேண்டும். எந்தவிதமான கலவரமுமோ பலாத்காரமோ பார்ப்பன சமுதாயத்தை சேர்ந்த ஆண்களுக்கோ பெண் களுக்கு துன்பம் வேதனை உண்டாக்கக் கூடியதான எப்படிப்பட்ட பலாத்காரமான செய்கையையும் நஷ்டம் உண்டாக்கக்கூடிய பலாத்காரமான செய்கையையும் அதாவது ஆயுதப் பிரயோகமோ அடிதடி நெருப்புக் கொளுத்துதலோ முதலிய ஒரு சிறு காரியம் கூட நடத்தாமலும் ,நடைபெறாமல் இருக்கும்படியும் ஒவ்வொருவரும் நடந்து கொள்ள வேண்டும்!”
சிந்தித்துப் பாருங்கள்! தான் இருந்தாலும், இல்லை யென்றாலும் எம் தொண்டர்கள் எத்தகைய கடப்பாடுடன் செயல்பட வேண்டும் என்பதை மனிதத்தன்மையுடன் பதிவு செய்ய நம் தலைவர் தந்தை பெரியாரைத் தவிர வேறு யாரால் முடியும்? தற்போது புறப்பட்டுள்ள திராவிடத்தால் தமிழ்நாட்டில் ஒடுக்கப்படுகிறோம் என்று கூறும் பார்ப்பனக் கூட்டத்திற்கு நிச்சயம் இந்நூலில் இடம்பெற்றுள்ள இத்தகைய பெரியாரின் வரிகளை நாம் எடுத்துரைக்க வேண்டும்.
மிகச் சரியான நேரத்தில், மிக நேர்த்தியான நடையில், மிகச் சிறந்த செய்திகளை உள்ளடக்கி வாசிப்பதற்கு சுவாரசியமான நடையுடன் எழுதப்பட்டுள்ள இந்நூலினை வாசிப்போம்! பரப்புவோம்!