பாணன்
இந்திய அரசமைப்பு சட்டம் 51A h பிரிவு என்ன சொல்கிறது? அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம் மற்றும் விசாரணை மற்றும் சீர்திருத்த உணர்வு ஆகியவற்றை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறது.
குஜாரத் மாநில அமைச்சராக இருந்தவர், பின்னர் முதலமைச்சராகப் பதவி உயர்வு பெற்றவர், குஜ்ராத் பாஜக உட்கட்சி பூசலை அடுத்து அங்கிருந்து அகற்றப்பட்டார். அவரைச் சமாதானப்படுத்த உத்தரப் பிரதேச ஆளுநராக பா.ஜ.க. தலைமை நியமித்தது. இவருக்குத் தெரியாதா அரசமைப்புச் சட்டம் 51A h குறித்து?
“விமானம் பறக்கும் தத்துவத்தைக் கண்டுபிடித்தது ரைட் சகோதரர்கள் அல்ல, பரத்வாஜ முனிவர்” என்கிறார் அந்த அம்மையார். யார் அந்த பரத்வாஜர்? அவர்களே சொல்வது என்ன? தேடிப் படித்தோம்.
‘ரிஷிமூலம் பார்க்கக் கூடாது’ என்ற பழமொழி பரத்வாஜர் பிறப்பை யாரும் கேட்கக் கூடாது என்பதால் வந்ததாகும் – காரணம் அவர் பிறப்பு அசிங்கமாம்.
இதோ தினமலர் ஆன்மீகப் பகுதியில் வந்ததை அப்படியே கொடுத்துள்ளோம்.
“வால்மீகியின் சீடர்களில் பிரதானமானவர் பரத்வாஜர். இவர் சீடராக இருந்தவேளையில் தான், வால்மீகி ராமாயணத்தை இயற்றினார். பரத்வாஜர், பல மகரிஷிகளிடம் சீடராக இருந்து, அவர்களிடமிருந்து வேதங்கள், அதன் உட்பொருள் என சகல விடயங்களையும் கற்றுத்தேர்ந்தார். கற்றலில் ஆர்வம் கொண்டு, தன்னைத் தாழ்த்திக் கொண்டு, தம்மை ஒத்த ரிஷிகளிடம் கூட சீடராகத் தொண்டாற்றினார்.பரத் என்றால் தாங்குகிறவர் என்றும், வாஜம் என்றால் வலிமை என்றும் பொருள். வலிமையான தேகத்தை உடையவர் என்பதால், இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. வாஜம் என்றால் அன்னம் (உணவு), அரிசி, நீர், நெய், யாகத்தில் பயன்படுத்தும் பொருள், பரிசு, வேகம், செல்வம் என்றும் பொருள் உண்டு.
இவை எல்லாவற்றிற்கும் பொறுப்புடையவராக இருப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். சித்திரை மாதத்திற்கு வாஜம் என்ற பெயருண்டு.தேவர்களின் குருவான பிரகஸ்பதி, ஒரு சந்தர்ப்பத்தில் தன் சகோதரரின் மனைவி மமதையுடன் கூடியதாக சொல்லப்படுகிறது. இதனால் தோன்றிய குழந்தையை வளர்க்கும் படி பிரகஸ்பதி மமதையிடம் கூறினார். அவளோ, பிரகஸ்பதியே வளர்க்க வேண்டுமென்றாள். இறுதியில் இருவரும் குழந்தையை விட்டுச் சென்றனர்.
குழந்தையில்லாத ஒரு தம்பதியர் அதை எடுத்து வளர்த்தனர். தேவர்கள் அவருக்கு பரத்வாஜர் எனப் பெயர் சூட்டினர். இவரது பெயரை பரத்வாஜம் எனப் பிரித்தால் இருவருக்குப் பிறந்தவர் என்று பொருளாகும். இவரே பிற்காலத்தில் பெரிய மகரிஷியாகி, சப்த ரிஷிகளிலும் ஒருவரானார். இவரது பிறப்பு இழிவான நிலையில் இருப்பதால்தான், ரிஷி மூலம் காணக்கூடாது என்ற பழமொழியே உருவானதாகச் சொல்வர்.”
https://temple.dinamalar.com/news_detail.php?id=1344
அதாவது தினமலரே இவரது உண்மைப் பிறப்புக் கதையை எழுதக் கூசி சகோதரன் மனைவி மமதைக்குப் பிறந்தவன் என்று எழுதி உள்ளது.
“ரிஷி சாங்கித்தியம்” என்ற வடமொழி நூலில் பிரகஸ்பதிக்கும் அவரது சகோதரிக்கும் பிறந்தவர் என்று கூறப்படுகிறது. பின்னர் அது மொழி பெயர்ப்பில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்று கூறி பிரகஸ்பதிக்கு சகோதரனை உருவாக்கி அவருக்கு மமதை என்ற மனைவியை கொடுத்து அவருக்கும் பிரகஸ்பதிக்கும் பிறந்த குழந்தை தான் பரத்வாஜர் என்று எழுதிவிட்டார்கள்.
அந்த அசிங்கக் கதைகளையும் கதாகலாட்சேபத்தில் பெருமையாக கூறுவார்கள்.
யார் இந்த பிரகஸ்பதி? அவர் தான் வியாழன் – அதாவது குருவாம்.
‘ஒழுக்கம் கெட்ட பிறப்பு’ என்று தினமலர் எழுதி இருக்கும் இந்த குருவைத்தான் ஹிந்துத்துவ கும்பல்கள் நடத்தும் பள்ளிகளில் காலையில் ‘இறைவழிபாடு’ என்ற பெயரில் சொல்கிறார்கள்.
வியாழன் என்பது 9 கோள்களில் மிகப் பெரிய வாயு கோள் – இன்னும் சில கோடி ஆண்டுகளில் வியாழன் கோளின் உட்புற அழுத்தம் காரணமாக வெப்பம் அதிகமாகி அது நெருப்புப் பிழம்பாக மாறும் – பின்னர் அதுவே ஒரு சூரியனாக உருவாகும் வாய்ப்பு 80 விழுக்காடு உள்ளது என்று அறிவியலாளர்கள் ஆய்வுகளோடு கூறியுள்ளனர்.
அதனைச் சுற்றி சுமார் 50 நிலவுகள் உள்ளன. அப்படி வியாழன் கோள் வெப்பம் உமிழும் நட்சத்திரமாக மாறிவிடும் பட்சத்தில் அது 50 கோள்களைக் கொண்ட ஒரு சூரியக் குடும்பமாக மாறிவிடும் என்பதுதான் அறிவியல்.
அப்படி இருக்க வியாழன் அதாவது பிரகஸ்பதி கள்ள உறவுகொண்டு பரத்வாஜர் என்பவர் பிறந்தாராம் – அவர்தான் விமானத்தைக் கண்டுபிடித்தாராம். எப்படி இவர்களது கதை!
பார்ப்பனர்களின் ஒரு பிரிவு ரிஷிகளின் பெயர்களைக் கோத்திரங்களாகக் கொண்டுள்ளது. ரிஷி பரத்துவாசரின் வழிவந்தவர்கள், தங்களை பரத்துவாஜ கோத்திரத்தினர் என அழைத்துக் கொள்கிறார்கள். அதாவது பரத்வாஜ கோத்திரப் பிரிவினர் பரத்வாஜரின் சந்ததிகள் என்கின்றனர்.
அறிவியலுக்கு முற்றிலும் பொருந்தாத கதைகள்
மேலை நாடுகளில் எங்கள் முன்னோர்கள் ஸ்பைடர் மேன் வழி வந்தவர்கள். சூப்பர் மேன் வழி வந்தவர்கள். பேட்மேன் வழி வந்தவர்கள் என்று கூறினால் அவர்கள் நகைப்பார்கள். ஆனால், இங்கே இன்றும் அவர்கள் வழிவந்தோம் என்று பெருமை கொள்கின்றனர்.
இப்படி தினமலர் கூறும் கதைக்கு உரியவரான பரத்வாஜர்தான் விமானத்தைக் கண்டுபிடித்தார் என்று ஒரு மாநில் ஆளுநர் கூறுகிறார். ஆளுநர் என்றால் அவர் பல்கலைக்கழகங்களின் வேந்தர். அப்படி இருக்க அவரது பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பல்கலைக்கழகங்களின் வெளியீட்டில் இவரது உரையும் இடம் பெற்றிருக்கும்.
அதைப் பாடங்களின் இடையே பேராசிரியர்கள் எடுத்துச் செல்வார்கள். அப்படி இருக்க ஆனந்திபென் பட்டேலின் இந்த உரையை மாணவர்களுக்கு கூறும்போது நமது கல்விமுறையைக் கண்டு உலகத்தார் ஏளனம் செய்ய மாட்டார்களா?