தந்தை பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறிய நாள் – 22.11.1925
காஞ்சிபுரத்தில் 22.11.1925 அன்று காங்கிரஸ் தமிழ் மாகாண மாநாடு நடந்தது. அந்த மாநாட்டிற்கு தலைவராக திரு.வி.க அவர்கள் இருந்தார்கள். அந்த மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானத்தை தந்தை பெரியார் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் அனுமதிக்கப் படாமல் நிராகரிக்கப்பட்டது. அப்போது தான் ‘காங்கிரசால் பார்ப்பனரல்லாதார் நன்மை பெறமுடியாது; காங்கிரசை ஒழிப்பதே இனி எனது வேலை’ என்று மாநாட்டிலேயே எழுந்து கூறிவிட்டு வெளியேறினார். உடனே அவருடன் ஒரு பெருங்கூட்டம் மாநாட்டை விட்டு வெளியேறியது.
இது திடீரென நடந்துவிடவில்லை.
1920இல் திருநெல்வேலியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமை தீர்மானத்தை விஷயாலோசனை கமிட்டியில் 6 வாக்குகள் அதிகம் பெற்று நிறைவேற்றினார் தந்தை பெரியார். மாநாட்டின் தலைவராக இருந்த எஸ்.சீனிவாசய்யங்கார் ‘இது பொதுநலத்திற்குக் கேடு’ என அனுமதி மறுத்தார். 1921இல் தஞ்சாவூரில் நடந்த மாகாண காங்கிரஸ் மாநாட்டில் மீண்டும் அந்த தீர்மானத்தை கொண்டுவந்தார் தந்தை பெரியார். அதற்கு இராசகோபாலாச்சாரியார் ‘கொள்கையாக வைத்துக்கொள்வோம்; தீர்மான ரூபமாக வேண்டாம்’ என எதிர்த்தார். திருப்பூரில் நடந்த மாகாண மாநாட்டில் மீண்டும் அதே தீர்மானத்தை கொண்டுவந்தார் தந்தை பெரியார். மீண்டும் பார்ப்பனவாதிகள் எதிர்க்கவே ‘இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் நெருப்பில் கொளுத்தவேண்டும்’ என்றார் தந்தை பெரியார். கலவரம் ஏற்படவே விஜயராகவாச்சாரியார் அடங்கினார்.
1922 ஆம் ஆண்டு திருநெல்வேலி, சேரன்மாதேவியில் ‘குருகுலம்’ என்ற பெயரில் வ.வெ.சுப்பிரமணிய அய்யர் பொதுமக்களிடமிருந்தும், காங்கிரஸிலிருந்தும் பணம் பெற்று நடத்திய குரு குலத்தில் பார்ப்பனர்களுக்கு தனி உணவு, பிரார்த்தனை வேறு இடம் – பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு வேறு இடம், உணவு, பிரார்த்தனை என நடத்தினார், இதை எதிர்த்தார் தந்தை பெரியார். திரு.வி.க, டாக்டர்.வரதராஜலு நாயுடு போன்றவர்களும் இணைந்து குருகுலத்தை எதிர்த்தனர். நாடெங்கும் எதிர்ப்புக் கிளம்பியது. காந்தியார் தலையிட்ட பிறகும் வ.வெ.சு அய்யர் உடன்படவில்லை. பெரியார், திரு.வி.க, டாக்டர் வரதராஜலு போன்றவர்களது பிரச்சாரத்தால் குருகுலத்திற்கு கொடுக்கப்பட்டுவந்த நன்கொடைகள் நின்றன. வர்ணாஸ்ரம குருகுலம் ஒழிந்தது.
1923இல் சேலம் மாகாண மாநாட்டில் மீண்டும் வகுப்புவாரி தீர்மானத்தைக் கொண்டு வந்தார் தந்தை பெரியார். கலகம் ஏற்படும் சூழ்நிலை வரவே டாக்டர்.வரதராஜலு நாயுடுவும், ஜார்ஜ் ஜோசப்பும் நிறுத்தினார்கள். 1924இல் தந்தை பெரியார் தலைமையில் திருவண்ணாமலையில் மாகாண காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானத்தை கொண்டுவந்தார். வகுப்புவாரி தீர்மானத்தை தோற்கடிக்க சென்னையிலிருந்து அதிகமான ஆட்களை எஸ்.சீனிவாசய்யங்கார் கூட்டி வந்து தீர்மானத்தை தடுத்தார். தீர்மானம் நின்றுபோனது.
இந்தக் காலத்தில் திருச்சியில் நடந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ‘பார்ப்பனர்களுக்கு எதிராக பேசிவருகிறார்’ என டாக்டர்.நாயுடு மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தந்தை பெரியார் அதை எதிர்த்துப் பேசி தோற்கடித்தார். அந்தக் கூட்டத்திலேயே சி.இராஜகோபாலாச்சாரியார், டி.எஸ்.எஸ்.ராஜன், என்.எஸ்.வரதாச்சாரியார், கே.சந்தானம், டாக்டர்.சாமிநாத சாஸ்திரி ஆகியவர்கள் பொறுப்புகளிலிருந்து விலகி வெளியேறினார்கள்.
1925இல் காஞ்சி மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தீர்மானம் தலைவரால் அனுமதிக்கப்பட வில்லை. அப்போது தான் பெரியார் காங்கிரஸை விட்டு வெளியேறினார்.