தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரும் சட்டமன்ற தொகுதி உறுப்பினரின் மனைவியுமான அஜி சோலங்கி என்பவர் வழிபடச் சென்ற கோவிலை பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து தூய்மைப்படுத்தியுள்ளது கோவில் நிர்வாகம்!
சிசு மாவு (உத்தரப் பிரதேசம்) சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இர்பான் சோலங்கியின் மனைவி அஜி சோலங்கி – தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்தவர், இவர் கான்பூரில் உள்ள கோவிலுக்குச் சென்றுவழிபட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் சென்ற பிறகு அரித்துவாரில் இருந்து தலைமை அர்ச்சகரை அழைத்துவந்து அங்கிருந்தே கங்கைநீரையும் ஒரு தண்ணீர் லாரியில் கொண்டுவந்து கோவிலைத் தூய்மைப்படுத்தியுள்ளார்கள்.
கான்பூர் நகரமே கங்கை நதிக்கரையில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அரித்துவாரில் இருந்து லாரியில் கங்கை நீரைக் கொண்டு வந்து தூய்மைப்படுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக கோவில் நிர்வாகம் கூறுகையில், ‘‘அவர் (சட்டமன்ற உறுப்பினரின் மனைவி) ஹிந்துவாக இருக்கலாம். ஆனால் அவரது கணவர் இஸ்லாமியர், அதன் படி இவர் கோவிலுக்குள் நுழைந்தது கோவிலை அவமதிப்பதாகும் – வேண்டு மென்றால் அவர் மசூதிக்குச் சென்று தொழுகை நடத்தட்டும்’’ என்று கூறியுள்ளது
இதே போல் நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் கன்னோஜ் சிவன் கோவிலுக்கு அகிலேஷ் யாதவ் சென்றார் – அவர் கோவிலுக்கு வந்து சென்ற பிறகு கோவில் நிர்வாகம் முழு கோவிலையும் கங்கை நீரால் கழுவியது.
2017 ஆம் ஆண்டு சாமியார் ஆதித்யநாத் உத்தரப் பிரதேச முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதலமைச்சர் இல்லத்தை 7 நாள் யாகம் செய்து தீட்டுக் கழித்த பிறகு பசுமாட்டை முதலில் வீட்டிற்குள் அனுப்பிய பிறகுதான் முதலமைச்சர் இல்லத்தில் சாமியார் ஆதித்யநாத் குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நாடாளுமன்றத்திலேயே அகிலேஷ் யாதவ் பேசியுள்ளார்.
இந்த நிலையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் கோவிலுக்குள் சென்றதால் தீட்டுப்பட்டுவிட்டது என்று கோவிலையே பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து தீட்டுக்கழித்த நிகழ்வும் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் 10 தொகுதிகளுக்கு இம்மாத இறுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசமைப்புச் சட்டம் 17ஆம் விதியின்படி தீண்டாமை குற்றமாகும். ஆனால் ஹிந்து மதத்திற்கு முன் அது செல்லுபடியாகாது.
குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் குடும்பத்தாருடன் பூரி ஜெகந்நாத் கோயிலுக்கும் ராஜஸ்தான் பிர்மா கோயிலுக்கும் சென்றபோது தடுக்கப்பட்டதைக் கணக்கில் கொண்டால், உ.பி. கோயில் ஒன்றில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருபெண் கோயிலுக்குச் சென்றதால், கோயில் தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி கங்கையிலிருந்து நீரைக் கொண்டு வந்து கோயிலைச் சுத்திகரித்தது ஒன்றும் ஆச்சரியமானதல்ல.
இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த பாபு ஜெக ஜீவன்ராம் காசியில் சம்பூர்னானந்த் சிலையைத் திறந்தார் என்பதற்காக – ஒரு உயர் ஜாதியினர் சிலையைத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் எப்படி திறக்கலாம் என்று கூறி காசிப் பல்கலைக் கழக மாணவர்கள் சம்பூர்னானந்து சிலையை கங்கை நீரால் கழுவி தீட்டுக் கழிக்கவில்லையா?
அதனையடுத்து சென்னை மாங்கொல்லைப் பொதுக் கூட்டத்தில் பாபு ஜெகஜீவன்ராம் குமுறவில்லையா? பெரியார் பிறந்த மண்ணில் இதைப் பேசாமல் வேறு எங்கு நான் எடுத்துக்கூற முடியும் என்றாரே.
இன்றைய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு எப்படி எல்லாம் அவமதிக்கப்படுகிறார். ஒரே நாடு, ஒரே மதத்தின் இலட்சணம் இதுதான். ஒரு முறைக்குப் பல முறை வெட்கப்படுவீர்!