இந்திய அரசின் தனியார் மயம் – ஆளுநரின் நடவடிக்கை –
கோவை,நவ.19- தி.மு.க. கூட்டணியில் குழப்பம் எதுவும் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில கூட்டம் கோவையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செய லாளர் முத்தரசன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஒன்றிய அரசு பொதுத்துறைகளை தனியார் மயமாக்கி வருகிறது.
ரயில்வே, விமானத் துறைகளை தனியார் மயமாக்குவதால் பொது மக்களுக்கு பெரும் துன்பம் ஏற்படும். விமான நிலையம் விரிவாக்கம் என்ற பெயரில் நிலத்தை பொதுமக்களிடம் கையகப்படுத்தி அதன் பின்னர் தனியாரிடம் ஒப்படைப்பது சரியல்ல.
ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறது. தமிழ்நாடு அரசு இதற்கு உடன்படக் கூடாது. சூலூரில் பாரத் பெட்ரோலியம் விவசாய நிலத்தில் குழாய் பதிப்பதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எந்த மாவட்டமாக இருந்தா லும் விவசாயம் பாதுகாக்கப் பட வேண்டும். விவசாயம் அழிந்தால் வேறு எதுவும் இல்லை. விவசாய நிலத்தை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையாக இருந்தாலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டிக்கும். தி.மு.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் அந்த கூட்டணியில் தொடர்ந்து உள்ளோம். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது.
23ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்
ஈஷா அறக்கட்டளை, யோகா என்கிற பெயரில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த யோகா மய்யத்தில் பெண்களுக்கு எதிரான தவறுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. பெண்களுக்கு அங்கு மொட்டை அடிக்கப்படுகிறது.
ஜக்கிவாசுதேவ் மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் ஊரார் வீட்டு மகள்கள் மொட்டை அடிக்கப்படு கிறார்கள். பிரதமர், குடியரசுத் தலைவர், பிற மாநில முதலமைச்சர்கள் எல்லாம் அங்கு வருகிறார்கள். இவர்கள் எல்லாம் வருவதால் ஈஷா மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தடுக்கப்படுகிறது. ஈஷாவில் உள்ள பெண் குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈஷா நிறுவனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈஷா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 23ஆம் தேதி கோவை சிவானந்தா காலனி பகுதியில் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற உள்ளது. இதில் திரளான பெண்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இருமொழிக் கொள்கை
ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து என்ன சொல்வது என தெரியவில்லை. அவர் தமிழ்நாட்டுக்கு வந்தநாள் முதல் இந்தநாள் வரை பொது அமைதியை சீர்குலைத்து வருகிறார்.
தமிழ்நாடு அரசும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் இருமொழிக்கொள்கையில்தான் உறுதியாக உள்ளன. சொத்து வரி, மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அரசுதான் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.