இம்பால், நவ.17 பாஜகவின் வகுப்புவாத அரசியல் காரணமாக மணிப்பூர் மாநிலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வன்முறையால் (குக்கி – மெய்டெய் மக்களிடையே மோதலால்) பற்றி எரிந்து வருகிறது. இந்த வன்மு றைக்கு பலியானோர் எண்ணிக்கை 250-அய் நெருங்கியுள்ளது. சொந்த மாநிலத்திலேயே அகதிகள் போல பல லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மணிப்பூரில் இன்னும் வன்முறை சம்பவங்கள் கட்டுக்குள் வரவில்லை. கடந்த 7 நாட்களில் நிகழ்ந்த வன்முறைக்கு 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலியானோர்களில் பெரும்பாலா னோர் குக்கி பழங்குடியின மக்கள் ஆவர். இந்நிலையில், மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்துவதாக கூறி கடந்த மாதம் மாநிலத்தில் உள்ள 19 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளை தவிர மீதி உள்ள இடங்களில் ஆயுத படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தியது.
அதே போல மாநிலத்துக்கு கூடுதலாக 20 கம்பெனி ஒன்றிய துணை ராணுவத்தினரையும் அனுப்பியது. இதனை தொடர்ந்து இம்பால் மேற்கு மாவட்டத்தின் சேக்மாய், லாம்சங், இம்பால் கிழக்கு மாவட்டத்தின் லாம்லை, ஜிரிபாம் மாவட்டத்தின் ஜிரிபாம், காங்போக்பியின் லீமாங்கோங் மற்றும் பிஷ்னுபூரின் மோய்ராங் ஆகிய 6 காவல் நிலைய பகுதிகளில் ஆயுதப் படைகளின் சிறப்பு சட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினர் சுதந்திரமாக தாக்குதல் நடத்த ஆயுத படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை ஒன்றிய அரசு மீண்டும் அமல்படுத்தியுள்ளது. மணிப்பூரில் பாஜக ஆட்சியில் இருக்கும் வரை வன்முறை சம்பவங்கள் குறைய வாய்ப்பில்லை. ஆயுத படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் குக்கி மக்கள் மீதான தாக்குதலை அதிகப்படுத்தும் என மோடி அரசின் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்ட அறிவிப்புக்கு மணிப்பூர் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.