புதுடில்லி, நவ. 17– 2022ஆம் ஆண்டில் ஓஇசிடி நாடுகள் என்று கூறப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு நாடுகளுக்கு 5.6 லட்சம் இந்தியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற ஓஇசிடி நாடுகளுக்கு இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் குடிபெயர்ந்து விடுகின்றனர். உயர் படிப்பு, வேலை, திருமணம் முடித்தல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக அந்த நாடுகளுக்கு மக்கள் குடிபெயர்கின்றனர்.
அந்த வகையில் 2022ஆம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த 5.6 லட்சம் பேர், ஓஇசிடி நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்த ஓஇசிடி நாடுகளுக்கு குடிபெயரும் நாடுகள் வரிசையில் இந்தியர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டை காட்டிலும் 2022ஆம் ஆண்டில் 35 சதவீதம் கூடுதலாக இந்தியர்கள் ஓஇசிடி நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ள தகவல் கிடைத்துள்ளது. இந்தியர்களுக்கு அடுத்தபடியாக ஓஇசிடி நாடுகளுக்கு சீனர்கள் அதிக அளவாக குடிபெயர்ந்துள்ளனர். 2022இல் 3.2 லட்சம் சீனர்கள் ஓஇசிடி நாடுகளில் குடியேறியுள்ளனர். சீனாவுக்கு அடுத்த இடத்தில் 2.6 நபர்களுடன் ரஷ்யா உள்ளது என்று தி இன்டர்நேஷனல் மைக்ரேஷன் அவுட்லுக் அமைப்பு அறிக்கையை பிரான்சு தலைநகர் பிரான்சில் வெளியிட்டுள்ளது. 2022இல் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்த 5.6 லட்சம் இந்தியர்களில் 1.12 லட்சம் பேர் பிரிட்டனுக்குச் சென்றுள்ளனர். அமெரிக்காவுக்கு 1.25 லட்சம் பேரும், கனடாவுக்கு 1.18 லட்சம் பேரும் இடம்பெயர்ந்துள்ளனர். அதேநேரத்தில் ரஷ்யா, ரொமேனியா நாடுகளில் இருந்து தலா 2.7 லட்சம் மக்கள் ஓஇசிடி நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். ரஷ்யாவிலிருந்து துருக்கி, இஸ்ரேல், ஜெர்மனி நாடுகளுக்கு அதிக மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அதேபோல் ரொமேனியா நாட்டிலிருந்து ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளுக்கு அதிக மக்கள் குடிபெயர்ந்துள்ளனர் என்று தி இன்டர்நேஷனல் மைக்ரேஷன் அவுட்லுக் அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.
அயலக தமிழர்களுக்கான வேர்களைத் தேடித் திட்டத்தின் மூன்றாவது கட்ட பயணம்
டிசம்பரில் தொடங்குகிறது தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, நவ.17- அயலகத் தமிழர்களுக்கான வேர்களைத் தேடி திட்டம் அடுத்த மாதம் 29ஆம் தேதி தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தகவல் வருமாறு,
வேர்களைத் தேடி திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள், இளம் மாணவர்கள், தாய் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணம், ஆண்டுக்கு 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவிற்கு அழைத்துவர ஏற்பாடுசெய்யப்படும்’ என்று கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி அறிவித்தார். அதன் அடிப்படையில், பண்பாட்டு சுற்றுலா திட்டம் வேர்களைத் தேடி’ என்ற பெயரில் அயலகத் தமிழர் நலத்துறையினால் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 2 கட்ட பயணங்களில் 157 அயலகத் தமிழ் இளைஞர்கள் இந்த பயணத்தில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் அனைவரும், தமிழ்நாட்டின் முக்கிய வரலாற்று மற்றும் பண்பாட்டு சிறப்புமிக்க இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு தமிழ்மொழி, தமிழர் பண் பாடு, தமிழர் வாழ்வியல் மற்றும் கட்டடக்கலை குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது.
3ஆவது கட்ட பயணம்
இந்த நிலையில், வேர்களைத் தேடி 3ஆவது கட்ட பயணம் அடுத்த மாதம் (டிசம்பர்) 29ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி வரை 15 நாட்கள் செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கலாச்சார சுற்றுலாவில் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த கல்லணை அணை, திருவள்ளுவர் சிலை, வ.உ.சி நினைவிடம், கீழடி, பாம்பன் பாலம், சித்தன்னவாசல், கானாடுகாத்தான் அரண்மனை, சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், தாராசுரம் கோவில் மற்றும் மாமல்லபுரம் கோவில் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
சென்னையில் தொடங்கும் இந்த பயணம் திருச்சி, மதுரை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, காரைக்குடி, தஞ்சாவூர் உள்பட 15 மாவட்டங்களை உள்ளடக்கியதாக அமையும். இந்த பயணத்தில் கலந்து கொள்ள விரும்பும் அயலகத் தமிழ் இளைஞர்கள், https://nrtamils.tn.gov.in/portal/ ryr என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.