சென்னை, நவ. 17- ‘இணைய’ மோசடி வலையில் சிக்கி சென் னையை சேர்ந்ததொழில் அதிபர் ரூ.2.25 கோடியை
இழந்துள்ளார். இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ‘இணைய’ மோசடி வலையில் சிக்கி ரூ.2 கோடியே 22 லட்சத்து 20 ஆயிரத்து 400 பணத்தை இழந்துள்ளார். அவருக்கு கடந்த ஜூலை மாதம் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தன்னை பிரபல வர்த்தக நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் என்று அறிமுகம் செய்துள்ளார்.
தங்கள் நிறுவனம் ‘செபி’யால் அங்கீகரிக்கப்பட்டது. பிரபல தொழில் அதிபர்கள் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்து உள்ளனர். குறைந்த முதலீட்டில் நிறைய லாபம். இதுதான் எங்கள் நிறுவனத்தின் லட்சியம் என்று தொடர்ந்து பேசி, தொழில் அதிபரை மூளைச்சலவை செய்துள்ளார்.
அந்த நபர் தனக்கு மோசடி வலை விரிக்கிறார் என்பதை அறியாமல் தொழில் அதிபரும் கூடுதல் பணத்துக்கு ஆசைப்பட்டுள்ளார். எனவே முகம் தெரியாத நபர் சொன்ன வாக்குறுதியை நம்பி, அவர் சொன்ன வங்கி கணக்குகளில் பல பரிவர்த்தனைகளில் ரூ.2 கோடியே 22 லட்சத்து 20 ஆயிரத்து 400 பணத்தை முதலீடு செய்துள்ளார். திரைப்பட பாணியில் அவருக்கு தொடர்ந்து ஆசை வார்த்தைகள் கூறி மோசடி நபர் பணத்தை கறந்துள்ளார்.
இவ்வளவு பணத்தை முதலீடு செய்தும் லாபம் கிடைக்காத விரக்தியில் இருந்த தொழில் அதிபரிடம், மீண்டும் ரூ.50 லட்சம் பணம் முதலீடு செய்யுமாறு மோசடி நபர் கூறி இருக்கிறார். அப்போது தான் தொழில் அதிபருக்கு காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் என்ற சிந்தனை உதித்துள்ளது.
சென்னை ‘சைபர் கிரைம்’ காவல்துறை இணைய தள பக்கத்தில், தான் பணத்தை இழந்த சோக கதையை விவரித்து புகார் மனுவை பதிவு செய்தார்.
அதன்பேரில் ‘சைபர் கிரைம்’ காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உடனடி விசாரணையில் இறங்கினார்கள். ‘சைபர் கிரைம்’ காவல்துறையினரின் புலன் விசாரணையில் தொழில் அதிபரிடம் பண மோசடியில் ஈடுபட்டது கேரளாவை சேர்ந்த உபயத்துல்லா என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ‘சைபர் கிரைம்’ காவல்துறையினர் கேரளாவுக்கு சென்று உபயத்துல் லாவை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர், சென்னை அழைத்து வரப்பட்டார். விசாரணைக்கு பின்னர், நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.