மதுரை,நவ.16- பொதுப்பணித்துறை யிடம் இருந்து ஆறுகள், அணைகளை தவிர மற்ற நீர்நிலைகளை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க, தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருவதாக கூறப் படுகிறது. பொதுப்பணித்துறையில், நீர்நிலைகளை பராமரிக்க நிரந்தர நிதி ஆதாரம் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகளிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்க இந்த நடவடிக்கை பரிசீலனையில் இருப்பதாக கூறப் படுகிறது.
நீர் நிலைகளை பாதுகாத்தல், பராமரித்தல், நீர் மேலாண்மை, வெள்ள நீரை திருப்பிவிட்டு, நீர் நிலைகளின் கொள்ளளவை அதிகப் படுத்தி, பாசனம், குடிநீர் மற்றும் இதர தேவைகளை நிறைவேற்றுவது போன்ற பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொள்கிறது. ஆனால், பொதுப் பணித்துறையில் நீர்நிலைகளை பராமரிக்க போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததால் கண்மாய்கள், குளங்களை தூர்வாரும் பணிகள், நீர் வரத்து கால்வாய்கள், நீர் வெளியேறும் உபரி நீர் கால்வாய்கள் மற்றும் மழைநீர் கால்வாய்கள் பராமரிக்கும் பணிகள் தேக்கமடைந்துள்ளது. கண்மாய்கள், குளங்களை ஆழப்படுத்தி தூர்வாரப் படாததால், தற்போது வடகிழக்கு பருவமழை காலங்களில் அவை நிரம்பாமலே மறுகால் பாய்ந்து ஓடுகின்றன.
உபரிநீர் செல்லும் கால்வாய்கள்
நீர்வரத்து, உபரி நீர் செல்லும் கால்வாய்கள், மழைநீர் கால் வாய்கள் நீண்ட நாட்களாக தூர்வாரப் படாததால், ஒரே நேரத்தில் அதிகளவு தண்ணீர் வரும்போது வழித்தடம் மாறி குடியிருப்புகளில் புகுந்து விடுகிறது. சமீபத்தில், அப்படித்தான் மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு செல்லூர் கண்மாய் தண்ணீர், அதன் உபரி நீர் கால்வாய் வழியாக செல்ல முடியாமல் செல்லூர் பகுதிக்குள் புகுந்தது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். ஆட்சியர் சங்கீதா, மாநரகாட்சி ஆணையாளர் தினேஷ்குமார் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சென்று, தண்ணீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டு மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
இந்த பாதிப்புக்கு, செல்லூர் கண்மாய் உபரி நீர் செல்லும் பந்தல் குடி கால்வாய் தூர்வாரப்படாமலும், ஆக்கிரமிப்புகள் நிறைந்து காணப் படுவதும் முக்கிய காரணம் எனக் கூறப்பட்டது. அதனால், உடனடியாக பந்தல் குடி கால்வாய் ஆக்கிர மிப்புகள் அகற்றும் பணிகள் தொடங்கின. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டு பந்தல் குடி கால்வாய் அகலப்படுத்தி தூர்வாரும் பணிகள் நடக்கிறது.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில்
இதுபோல், மதுரை மாநகராட்சியில் தூர்வாரப்படாத கிருதுமால் கால்வாய், பனகல் ரோடு கால்வாய், பந்தல் குடி கால்வாய், அவனியாபுரம் கால்வாய், சிந்தாமணி கால்வாய், அனுப்பானடி கால்வாய் உள்ளிட்ட 17 மழைநீர் கால்வாய்கள் உள்ளன. இந்த கால்வாய்கள் அனைத்தும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கால்வாய்கள், மாநகராட்சி பகுதியில் 69 கி.மீ., செல்கின்றன. இந்த மழைநீர் கால் வாய்களை இணைக்கும் வகையில் மாநகராட்சிப் பகுதியில் 80க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்களும் உள்ளன.
இந்தக் கால்வாய்களை பொதுப் பணித்துறை தூர்வாரி பராமரிக்க வேண்டும். ஆனால், பொதுப் பணித் துறையில் நிதி ஒதுக்கீடும், நிரந்தர வருவாயும் இல்லாததால், அவர்கள் மாநகராட்சியை தூர்வார கூறிவிட்டு பொறுப்பை தட்டிக்கழிக்கின்றனர். மாநகராட்சியிடம், குடிநீர், சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவே போது மான நிதி ஆதாரம் இல்லாமல் தடுமாகிறது. ஆனாலும், மக்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, தற்போது மழைநீர் கால்வாய்களை தூர்வாரி வருகிறது. கண்மாய்களை ஆழப்படுத்தி தூர்வார பொதுப்பணித்துறையிடமும் நிதி இல்லாததால், நீர்நிலைகள் ஆழமில்லாமல் மழை பெய்தாலும் அதனை தேக்கி வைக்க முடியவில்லை.
நிரந்தர வருவாய் இல்லை
இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “உள்ளாட்சி அமைப்புகளை போல், பொதுப்பணித்துறையிடம் நிரந்தர வருவாய் இல்லை. நிதி ஒதுக்கீடுளை கொண்டே அவர்கள் நீர்நிலைகளையும், அதன் கால் வாய்களையும் பராமரிக்க வேண்டும். மழைநீர் கால்வாய்களையும், உபரிநீர் கால்வாய்களையும் ஆண்டுதோறும் பராமரிக்க வேண்டும். ஆனால், நிதி ஆதாரம் இல்லாததால் அவர்களால் பராமரிக்க முடியவில்லை.
எனவே, தமிழ்நாடு முழுவதுமே ஆறுகள், நீரோடைகள், அணைகள் தவிர கண்மாய்கள், குளங்கள் போன்ற நீர்நிலைகளையும், அதன் கால் வாய்களையும் அந்தந்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் வசம் ஒப்படைக்கலாமா? என தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருகிறது,” என்றார்.