சென்னை, நவ. 16- ‘உயர்கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு உதவும் வகையில், உதவி மற்றும் குறை தீர்வு மய்யங்கள் அமைக்க வேண்டும்’ என, உயர் கல்வித்துறை செயலர் கோபால் உத்தரவிட்டு உள்ளார்.
தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் கீழ், 13 பல்கலைகள், 10 அரசு பொறியியல் கல்லுாரிகள், 52 அரசு பாலிடெக்னிக்குகள், சிறப்பு கல்வியகங்கள், 164 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள், ஏழு கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன.
மேலும், அரசு உதவி பெறும் கலை அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளும் உள்ளன.
அவற்றில் கல்வி திட்டங்கள், சேர்க்கை குறித்த தகவல்களை பெறுவதற்கும், மாணவர்களுக்கான குறைகளை தெரிவிக்கவும், போதிய வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இதுகுறித்து, உயர் கல்வித்துறை செயலர் கோபால் கூறியதாவது:
அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்பட உதவி மய்யங்கள் அமைக்க வேண்டும். அவை மாணவர், பெற்றோர், பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும். அந்த மய்யம், கல்வி வளாகத்தின் முதன்மையான இடத்தில் அமைக்கப்பட வேண்டும். ‘உதவி மய்யம்’ என்ற பெயர் பலகையும் இருக்க வேண்டும்.
சரியான நபர்களிடம் இருந்து, சரியான தகவல்களை பெற்று, உரியவருக்கு விளக்கம் அளிக்கவும், மாணவர்களின் குறைகளுக்கு தீர்வளிக்கவும், அனைத்து துறைகள் உடனான, ‘இன்டர்காம்’ வசதியுடன் இருக்க வேண்டும்.
வேலை நேரம் முழுவதும் திறந்திருக்க வேண்டும். இணைய வழி ‘ஆன்லைன்’ வாயிலாக தொடர்பு கொள்ள எளிதாக இருக்க வேண்டும். இவற்றை உடனே அமைத்து, மாநில உயர் கல்வி மன்றத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
இதுகுறித்து, அனைத்து பல்கலை. பதிவாளர்கள், கல்லுாரி கல்வி இயக்குநரக ஆணையர், தொழில்நுட்பக்கல்வி ஆணையர், உயர்கல்வி மன்ற துணைத்தலைவர் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளேன். இவ்வாறு கூறினார்.
அதிர்ச்சித் தகவல்
அங்கீகாரத்திற்கு ஏங்கும் 63 சதவீத இந்திய ஊழியர்கள்: பன்னாட்டு நிறுவனம் ஆய்வறிக்கை!
புதுடில்லி, நவ. 16- இந்திய ஊழியர்களில் 63 சதவீதம் பேர் அங்கீகாரத்துக்காக ஏங்குகின்றனர் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு வேலைவாய்ப்பு இணையதளமான ‘இன்’டீட்’ இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளம் இந்தியாவின் பணிச்சூழல் குறித்து கருத்துக் கணிப்பு நடத்தி விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
இந்தியா முழுவதும் பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் கருத்துகளை கேட்டறிந்தோம். 30 சதவீத உரிமையாளர்கள், 70 சதவீத ஊழியர்கள் என்ற வகையில் கருத்துக் கணிப்பை நடத்தினோம். எங்களது கருத்துக் கணிப்பின்படி இந்திய ஊழியர்களில் 63 சதவீதம் பேர் அங்கீகாரத்துக்காக ஏங்குகின்றனர். குறிப்பாக, மூத்த அதிகாரிகள் தங்களது திறமையை அங்கீகரிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
சுமார் 48 சதவீத இந்திய ஊழியர்கள் தங்கள் நிறுவனம் குறித்து பெருமிதம் கொள்கின்றனர். மீதமுள்ளோர் நிறுவனத்தின் மீது ஏதோ ஒரு வகையில் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். பணியிடத்தில் சுமார் 12 சதவீத பெண் ஊழியர்கள் பாலின வேறுபாட்டை எதிர்கொள்வதாக புகார் தெரிவித்து உள்ளனர். ஆண் ஊழியர்களை பொறுத்தவரை இது 9 சதவீதமாக உள்ளது. ஊழியர்களை போன்று நிறுவன உரிமையாளர்களிடமும் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
சுமார் 47 சதவீத உரிமையாளர்கள், தங்கள் ஊழியர்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர். சுமார் 36 சதவீத உரிமையாளர்கள், தங்கள் ஊழியர்கள் மீது சில விவகாரங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் சில கருத்துகளை முன்வைக்கிறோம். பணியிடங்களில் ஊழியர்களுக்கு உகந்த சூழலை உரிமையாளர்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ஊழியர்களை மதிக்க வேண்டும். அவர்கள் தங்கள் முழுத்திறனை வெளிப்படுத்த ஊக்கம் அளிக்க வேண்டும். ஊழியர்கள், உரிமையாளர்கள் இடையே இடைவெளி இருக்கக்கூடாது. இருதரப்புக்கும் இடையே வலுவான பிணைப்பு இருக்க வேண்டும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.