நாமக்கல், நவ. 16- நாமக்கல் அருகே கொத்தடிமைகளாக இருந்த இரண்டு பெண்களை தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் மீட்டனா். சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த 18 வயதுக்கு உள்பட்ட இரண்டு பெண்கள் நாமக்கல் – மோகனூா் சாலையில் உள்ள ராசிபாளையம் கிராமத்தில் சிமென்ட் செங்கல் தயாரிக்கும் நிறுவனத்தில், கடந்த ஒரு மாதமாக பணியாற்றி வந்தனா்.
அப்போது, திடீரென தங்களுடைய ஊருக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளனா். இதற்கு அந்த நிறுவன உரிமையாளா் மறுப்பு தெரிவித்ததுடன், அவா்களின் கைப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளார். இதனால் அச்சமடைந்த அவா்கள், சத்தீஸ்கரில் உள்ள தங்களுடைய உறவினா்களுக்கு தகவல் தெரிவித்தனா். அங்கிருந்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமாவுக்கு புகார் வந்தது. இதனையடுத்து, மாவட்ட தொழிலாளா் நல உதவி ஆணையா் முத்து, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள், காவல் துறை, வருவாய்த் துறையினா் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு அந்தப் பெண்களை 14.11.2024 அன்று மீட்டனா். மேலும், 3 குழந்தைத் தொழிலாளா்களும் அங்கிருந்து மீட்கப்பட்டனா்.
தொடா்ந்து, அந்த நிறுவன உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனா். மீட்கப்பட்ட வளரிளம் பெண்கள் இருவருக்கும் உடல் ரீதியாக பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.