மரணப்படுக்கையில் இருந்த தோழர் க.பார்வதி அவர்களுடன் ‘கடவுள் எனும் கருத்து’ பற்றி ஒரு உரையாடல்!
தந்தை பெரியாரின் முதன்மைக் கொள்கைகள் என்பது ஜாதி ஒழிப்பும், பெண்ணடிமைத்தன ஒழிப்பும் தான் என்றாலும், இந்தப் போரில் அவராகவே வரித்துக் கொண்ட அடுத்த எதிரி கடவுள். இதன் மூலம் தன்னுடைய மூலக் கொள்கையை அடைவதற்கான வேகத்தை விரைவு படுத்திக் கொண்டார். இதனாலேயே வரலாற்றில் ”ஜாதி ஒழிப்புப் போராளி” என்று அடையாளப்பட்டிருக்க வேண்டிய பெரியார், ”கடவுள் மறுப்பாளர்” என்று இன எதிரிகளால் சுருக்கப்பட்டார். அதுவே இன எதிரிகளை கருக்கிவிட்டது என்பதும் ஒரு சுவையான வரலாறு! காரணம், ஹிந்து மதத்தின் ஆணி வேரே ஜாதிதான். அந்த ஜாதியின் ஆணி வேர் கடவுள். அதனால்தான் பெரியார் அதன் மீது கை வைத்தார்.
பொதுவாக நம்பிக்கையாளர்கள் பெரியார் தொண்டர் களின் அறிவியல் பார்வையிலான கேள்விகளுக்கு பதிலளிக்கத் திராணியின்றி, ‘சாகிற காலத்தில் சங்கரா சங்கரா என்று தான் சாவீர்கள்’ என்று நமக்குச் சாபமிட்டுவிட்டு அவர்கள் அற்ப சாந்தி கொள்வார்கள்.
இதுவாவது உண்மையா?
பெரியார் தொண்டர்கள் உள்பட எல்லாரும்தான் சாகிறார்கள். ஆனால், இரு தரப்புக்கும் அடிப்படையிலேயே ஒரு வேறுபாடு உண்டு!
ஹிந்து மதத்திற்கு நேர் எதிரான “ஒரு மாற்று வாழ்க்கை” (An alternative life) தான் தந்தை பெரியார் நமக்குக் கொடுத்துச் சென்ற கொடைகளுள் மிக முக்கியமானது! பெரியாரியத்தை நன்கு உள்வாங்கியவர்களின் ஒரே தேர்வு இதுதான்! முத்தமிழறிஞர் கலைஞர் தன்னுடைய இறுதிக்காலத்தில் இருந்தபோது, “சாகப்போற நேரத்தில் நீங்கள் கடவுளை நம்புகிறீர்கள் என்று வெளியில் பேசிக்கொள்கிறார்கள், அப்படியாப்பா?” என்று அவரின் காதில் கலைஞரின் மகள் கவிஞர் கனிமொழி கேட்டார். தான் அப்படி இல்லை என்பதைக்காட்ட, உடனடியாக தலையை இடம், வலமாக வேகமாக அசைத்துக்காட்டி மறுத்தார். இறுதி வரையிலும் அவர் கடவுள் மறுப்பாளராகத்தான் இருந்து காலமானார்.
பேராசிரியர் மா.நன்னன், திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களை வீட்டிற்கே அழைத்து, சாகப்போகின்ற நேரத்திலும் மரண சாசனமாகவே, ”நான் பெரியாரின் பெருநெறி பிடித்தொழுகும் தொண்டன் தான்” என்பதைப் பெருமையுடன் சொல்லி, அதையும் காணொலியாகவே பதிவு செய்து கொண்டார். இதுவும் பெரியார் பிறந்தநாள் மலரில், “பேராசிரியர் மா.நன்னன் அவர்களின் மரண சாசனம்” என்ற தலைப்பிலேயே பதிவாகியிருக்கிறது.
மரணத்தைக் கண்டு பெரியாரின் தொண்டர்கள் அஞ்சியதில்லை. சுயமரியாதைச் சுடரொளி க.பார்வதியும் தன்னை அந்த வரிசையில் வெகு இயல்பாக இணைத்துக் கொண்டிருக்கிறார்.
2022 அக்டோபர் 7 ஆம் தேதி சென்னை அரசு மருத்துவ மனையில் அவர் உடல் நலம் குன்றி உள்நோயாளியாக இருந்தபோது கழகத்தின் பரப்புரைச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, தோழர் க.பார்வதி அவர் களுடன் ’கடவுள்’ எனும் கருத்து பற்றி உரையாடி அதைக் காணொலியில் பதிவு செய்திருந்தார். அதன் எழுத்து வடிவம் இது.
அருள்மொழி: மற்றவர்கள் கடைசி காலத்தில் பக்தி, பஜனை, பிரார்த்தனை எல்லாம் செய்கிறார்கள். அந்த மாதிரி உங்களுக்கு எதுவும் தோன்றவில்லையா?
க.பார்வதி: (சிரித்துக் கொண்டே) அந்த மாதிரி ஒரு விநாடி கூட தோன்றவில்லை. காரணம் என்னன்னா? நம்ம மேல நம்பிக்கை வைக்கணும். நம்மைப் பார்க்கிறவர்கள் மேல நம்பிக்கை வைக்கணும். இல்லாதவங்க மேல எதற்கு நம்பிக்கை வைக்கணும்?
அருள்மொழி: பார்க்கிறவங்க என்று மருத்துவரைச் சொல்கிறீர்களா?
க.பார்வதி: ஆமாப்பா… டாக்டர் இருக்காருப்பா! கடவுள் இருக்குதா? இல்லை! அதனால், இருக்கிறதை நான் நம்பறேன். இல்லாததை நம்பல.
அருள்மொழி: இல்லே, கொஞ்சம் பிரார்த்தனை எல்லாம் செஞ்சா இன்னும் கொஞ்சம் நாள் இருக்கலாமேன்னு உங்களுக்குத் தோணலையா?
க.பார்வதி: நான் என்னுடைய முதல் பிரசவத்தில் வலி தாங்காமல் அம்மா, அம்மா என்றுதான் கத்தினேன். சிஸ்டர் வந்து, எல்லாரும் கடவுளே, கடவுளேன்னு கத்துவார்கள். நீங்க என்ன அம்மா, அம்மான்னு கத்துறீங்க’ என்று கேட்டார். நான், ”இல்லாதது தேவையில்லைப்பா” என்றேன். எனக்கு நீங்க இருக்கீங்கப்பா… (எதிரில் அமர்ந்திருக்கும் வழக்குரைஞர் அ.அருள்மொழியைச் சொல்கிறார்) நான் உங்க கிட்ட பேசறேன். நீங்க எனக்கு பதில் சொல்றீங்க. இல்லாதவங்ககிட்ட எப்படிப் பேசறது?
அருள்மொழி: சரிதான், ஏதோவொரு சக்தி இருந்து இன்னும் ஒரு பத்து ஆண்டு நம்மள காப்பாத்துமா என்ற நினைப்பு வரலையா?
க.பார்வதி: பத்து ஆண்டு இருக்கிறது உங்கையிலா இருக்கு? ஏங்கையிலா இருக்கு? இருக்கிற வரைக்கும் நம்ம உடல் நலத்தை பார்த்துக்கணும். இதைத்தான் நம்ம தலைவர்கள் நமக்குச் சொல்லியிருக்காங்க. இப்ப நான் மருத்துவமனையில் படுக்கையில் படுத்திருக்கிறது கூட என்னுடைய தவறு. வாயைக் கட்டுகிற சூழ்நிலை அந்நேரத்தில் இல்லாம போயிருச்சு.
அருள்மொழி: ஏன், என்ன பண்ணீங்க?
க.பார்வதி: சாப்பிடக் கூடாததை சாப்பிட்டேன். அதனால் இப்படி படுத்திருக்கிறேன். இப்போது அதையும் நன்மையாக நினைக்கிறேன். அப்படி வந்ததனால் வயிற்றில் இருக்கும் மற்ற பிரச்சனையெல்லாம் இப்போ வெளியில் வருது. இது என்றைக்கிருந்தாலும் வரும். இப்போது முன்கூட்டியே வந்துவிட்டது. இது நல்லதுதானே?
அருள்மொழி: இப்போ உங்க வயசு என்னங்கம்மா?
க.பார்வதி: 76
அருள்மொழி: ஆங்… சரி, சரி 36, 56இல பேசுன மாதிரியே இப்போதும் பேசறீங்க! (தோழர் க.பார்வதி வாய் மலர்ந்து சிரித்துவிட்டு தொடர்ந்து பேசுகிறார்) இந்த நாட்டில் பெண்கள் திருந்தணும். பெண்கள் திருந்தினால் பிள்ளைகள் திருந்துவார்கள். பிள்ளைகள் திருந்தினால் இந்த நாடு திருந்தும். இல்லாததை கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இங்கே புதன்கிழமை ஆயுத பூஜை. எல்லோரும் ஊருக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த போது, நேற்று என்னை கவனித்துக்கொள்ளும் செவிலியர் என்னிடம், “அம்மா மனசு பூரா உங்க மேல இருக்கு. நான் ஊருக்குப் போகவா? வேண்டாமா? என்று கேட்டார். நானும், ’போயிட்டு வாம்மா என் பேத்தி இருக்கா’ என்றேன். முடிஞ்சபிறகு வந்த அவங்க, “எங்க மனசு பூரா இங்கதாம்மா இருந்துச்சு. பூஜையை சரியாகவே முடிக்கலே” அப்பிடின்னாங்க. ”தீவிரமாக அதை நம்பியும் ஏன் உங்களால முழுசா செய்ய முடியல? இதுல வேற ஏழு மண்டலங்கள்! ஏழு பூஜைகள்? தேவையா இது? கடவுளை நம்புற உங்களால நிம்மதியாகக் கூட இருக்க முடியலே. நீங்க ஏமாறுகிறீங்களா? அது ஏமாத்துதா? நீங்கதான் முட்டிக்கிறீங்க மோதிக்கிறீங்க” அப்பிடின்னு சொன்னேன், சிரிச்சாங்க”.
”இதைவிட புரட்டாசி மாசத்தில பெண்கள் சாப்பிட மாட்டாங்களாம். ஆனால் சமைப்பாங்களாம். புருசன், பிள்ளைகளெல்லாம் சாப்பிடுவாங்க. எனக்குத் தெரிஞ்சே இங்க இரண்டு மூணு குடும்பம் இருக்கு. நாட்டில நிறைய இருக்காங்க. நான் கேட்டேன். பொண்டாட்டி சாப்பிடல. இருக்கட்டும். நீங்க ஏம்மா சாப்பிடலன்னு” கேட்டேன். “நம்பிக்கைம்மா” அப்பிடின்னாங்க. நம்பிக்கை இருக்கும். நமக்கு ஒருத்தர் மேல அன்பு இருந்தா, பாசம் இருந்தா சரி, இவங்களால இந்தக் காரியம் நடக்கும் அப்பிடின்னு நினைக்கலாம். இருக்கிறவங்க மேல நம்பிக்கை வந்தா சரி, இல்லாதது மேல வந்தா அது சரியில்லை.
உருவம் வாடி, வதங்கி தசைகள் தளர்ந்து போயிருந்தும் தோழர் க.பார்வதி அவர்களின் சிந்தனை மட்டும் புத்துணர்ச்சி யுடனேயே இருந்தது. அப்படி சிகிச்சை எடுத்து வந்த அவர் தன்னுடைய 77 ஆம் வயதில், அதாவது, 2023 நவம்பர் 8 ஆம் நாளில் தொடர்ந்து இருந்துவந்த உடல் நலக்குறைவால் நலிவடைந்து காலமாகி விட்டார். அப்போதும் இதே மனநிலையில் தான் இருந்தார். அவரது எண்ணப்படியே அவரது உடல் மருத்துவமனைக்கு உடல் கொடை செய்யப் பட்டது.
அரை நூற்றாண்டுக்கு முன்பே தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் அலைந்து திரிந்து பெரியாரின் சிந்தனைகளை பரப்புரை செய்தவர் தோழர் க.பார்வதி. இந்தப் பேட்டியை எடுத்த திராவிடர் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, அவர்கள் சிறுமியாக இருந்தபோது உடன் அழைத்துச் சென்று, அவர்களைப் போன்றவர்களை கழகத்தின் களப் பணிக்குப் பழக்கியதிலும், மகளிர் அணிக்கென்று தமிழ்நாடு முழுவதிலுமாக ஒரு அடித்தளத்தைப் போட்டுக்கொடுத்ததிலும் தோழர்
க.பார்வதி அவர்களின் உழைப்பும், பங்கும் அளப்பரியது. அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவு நாளான 8.11.2024 அன்று அவரது கொள்கை உறுதியை வெளிப்படுத்துவது மிகவும் பொருத்தமானது.
வாழ்க தோழர் க. பார்வதி அவர்களின் புகழ்!
நேர்காணல்: வழக்குரைஞர் அ.அருள்மொழி,
பிரச்சாரச் செயலாளர் – திராவிடர் கழகம்
தொகுப்பு: உடுமலை வடிவேல்