சென்னை, நவ.15- தமிழ்நாட்டுக்கு 4 நாள்கள் பயணமாக, 16-ஆவது நிதி ஆணையம் வரவுள்ளது. நவ.17 முதல் 20-ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆலோசனைகளையும் களஆய்வுப் பணிகளையும் நிதி ஆணையம் மேற்கொள்கிறது.
முன்னதாக, நிதி ஆணையத்தைச் சோ்ந்தவா்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த வுள்ளனா்.
இந்தியாவின் வரி வசூலிக்கும் கட்டமைப்பில், பெருமளவிலான வரியை ஒன்றிய அரசு பெறுகிறது; ஆனால், அதிக அளவிலான செலவுப் பொறுப்புகளை மாநில அரசுகள்தான் செய்தாக வேண் டிய நிலை உள்ளது. மொத்த வரி வருவாயை எந்த அளவுக்கு ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் பகிா்ந்துகொள்வது என்பதை முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. மேலும், மாநிலங்களுக்கென ஒதுக்கப்படும் நிதியில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நிதியை ஒதுக்க வேண்டும் என்பதையும் கணக்கிட வேண்டும். இந்தப் பணிகளுக்காகவும், இதற்கான பரிந்துரைகளை வழங்கவும் நிதி ஆணையம் என்ற அமைப்பு உருவாக் கப்பட்டது. இதற்கு அரசமைப் புச் சட்டத் தகுதி இருக்கிறது.
இதுவரை 15 நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்ட நிறைவடைந்த நிலையில், 16-ஆவது நிதி ஆணையம் அரவிந்த் பனகாரியா தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் உறுப்பினா்களாக அஜய் நாராயண் ஜா, ஆனி ஜாா்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சவும்யாகாந்தி கோஷ் ஆகியோா் உள்ளனா். இவா்கள் அனைவரும் வரும் 17-ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ளனா். அவா்களுடன் நிதி ஆணையத்தின் செயலா் ரித்விக் பாண்டே, இணைச் செயலா் ராகுல் ஜெயின் உள்ளிட்ட ஏழு அதிகாரிகள் வருகின்றனா்.
முதலமைச்சருடன் ஆலோசனை
டில்லியில் இருந்து தனி விமானத்தில் நவ.17-ஆம் தேதி சென்னை வரும் நிதி ஆணையத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் தனியாா் விடுதியில் தங்குகின்றனா். சிறிது ஓய்வுக்குப் பிறகு, சென்னையில் உள்ள பொருளாதார நிபுணரான சி.ரங்கராஜனின் இல்லத்துக்குச் சென்று ஆலோசிக்கவுள்ளனா். அதன் பிறகு, நிதி ஆணையத்தின் தலைவா் மற்றும் உறுப்பினா்களுக்கு தனியாா் விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு விருந்து அளிக்கிறாா்.
வரும் 18-ஆம் தேதி தலை மைச் செயலகத்தில் முதல்வா், அமைச்சா்கள், மூத்த அதிகாரி களுடன் நிதி ஆணையத்தினா் ஆலோ சனை நடத்தவுள்ளனா். அப்போது, தமிழ்நாடு அரசின் சாா்பிலான கோரிக்கைக் கடிதம் அளிக்கப்பட உள்ளது. நிதி ஆணையத்திடம் கோரிக் கைகளை வலியுறுத்தி முதல மைச்சர் மு.க.ஸ்டாலினும் உரை யாற்றவுள்ளாா்.
அரசியல் கட்சிப் பிரதிநிதிகள்
நவ.18-ஆம் தேதி பிற்பகல் தமிழ்நாட்டைச் சோ்ந்த பல்வேறு பிரிவினருடன் நிதி ஆணையத்தினா் ஆலோசனை நடத்த உள்ளனா். குறிப்பாக, தொழில் மற்றும் வா்த்தக சங்கப் பிரதிநிதிகள், நகா்ப்புற, ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்துகளை நிதி ஆணையத்தினா் கோரவுள்ளனா். இதைத் தொடா்ந்து மாலையில் பத்திரிகையாளா் சந்திப்பு நடைபெறவுள்ளது.
கள ஆய்வுப் பணிகள்
தலைமைச் செயலகத்தில் ஆலோசனைகளை முடித்து விட்டு, நவ.19-ஆம் தேதி முதல் களஆய்வுப் பணிகளை நிதி ஆணையத் தலைவரும், உறுப்பினா்களும் மேற்கொள்ள உள்ளனா். சென் னையை அடுத்த நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், சிறீபெரும்புதூரில் அரசின் உதவி யுடன் தொழிலாளா்களுக்கு கட்டித் தரப்பட்டுள்ள வீட்டுவசதித் திட்டம் ஆகியவற்றை நிதி ஆணையத்தினா் பாா்வையிட உள்ளனா்.
இதன்பிறகு, பிற்பகலில் தனி விமானம் மூலமாக மதுரைக்குச் செல்கின்றனா். அங்கிருந்து ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவுள்ளனா். 20-ஆம் தேதி காலையில் ராமநாதபுரம் நக ராட்சி அலுவலகம், கீழடி அகழாய்விடம் ஆகியவற்றையும் பாா்வையிடவுள்ளனா். இதைத் தொடா்ந்து, அன்றைய நாளே மது ரையில் இருந்து டில்லி புறப்பட்டுச் செல்கின்றனா்.