உலக மொழி வரலாற்றில் இது போல் பார்த்ததுண்டா?
தமிழுக்காக குழந்தைகளுடன் சிறைபுகுந்த பெண்கள் [14.11.1938]
1938ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கட்டாய ஹிந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. அதற்கு முன்பாகவே அங்கொன்றும் இங்கொன்றுமாக போராட்டங்கள் நடந்து வந்தாலும் 1938ஆம் ஆண்டுதான் தமிழ்நாடு முழுவதும் தமிழ் மொழி உரிமைக்கான போராட்டம் வீரியமாக எழுந்தது.
1938ஆம் ஆண்டில் தொடர் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், சிறைநிரப்பும் போராட்டங்கள் என மாதர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டு ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றது.
1938ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பெண்கள் மாநாட்டுக்கு தனித்தமிழ் இயக்கம், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் திராவிட அமைப்புகளை கூட்டாக இணைத்து ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது
1938-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயம் என்று அரசாணை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து ஏற்கெனவே கனன்று கொண்டிருந்த தமிழ் உரிமை போருக்கான தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
தமிழ்நாட்டில் முதல் முறையாக தியாகராய நகர் மாதர் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தொடங்கி ‘முன்னேற்ற கழகம்’ என்ற பதத்தை தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்திய டாக்டர் தருமாம்பாள் அம்மையார் முன்னெடுப்பில் முதல் பெண்கள் மாநாட்டிற்கான அறைகூவல் விடுக்கப்பட்டது. இதே மாநாட்டில் தான் பெரியாருக்கு ‘பெரியார்’ என்ற பட்டத்தை வழங்கினார் தருமாம்பாள் அம்மையார்.
13.11.1938ஆம் ஆண்டு நாள்குறிக்கப்பட்டு மாநாட்டின் தலைவராக மறைமலையடிகளின் மகள் மற்றும் தனித்தமிழ் இயக்கத்தின் செயற்பாட்டளாரான நீலாம்பிகை அம்மையார் அறிவிக்கப்பட்டார்.
‘நிலம், நாடு, மொழி, கலை, செல்வம் ஆகிய அய்ந் தினையும் நிலமகள், தாய்நாடு, தாய்மொழி, கலைமகள், திருமகள் என மகளிர் பெயரால் அழைக்கப் பெறுவது தமிழ் வழக்கமாதலால் மொழிக்கு வரும் கேட்டினை, ஆடவரினும் பெண் பாலரே முன்னின்று நீக்குதற்குரிய பணிகளைச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறார்கள். எனவே இன்றைய நிலையில் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு இன்றியமையாது வேண்டப்படுவதாகும். தமிழ் வளர்ச்சி கருதும் ஒவ்வொரு ஆண்மகனாரும் தங்கள் தங்கள் இல்லத்திலுள்ள பெண் மக்களை மாநாட்டிற்கு அனுப்பிவைப்பார்களாக’ என்று பெண்கள் மாநாட்டின் இரண்டாம் விளம்பர அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மொழியை காப்பதில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் பொறுப்புள்ளதை நிறுவும் வண்ணமே இந்த மாநாடு நடைபெற்றது. பெண்கள் மாநாடாக இது கூட்டப்பட்டிருந்தாலும், மகளிர் உரிமையை மட்டும் வலியுறுத்தாமல் இந்த மாநாட்டில் போடப்பட்ட தீர்மானங்கள் பலவும் மொழி உரிமைக்கானவையாகவே இருந்தன.
தங்களை ஒத்த பெரும்பான்மையான பெண்கள் கல்வி கற்கக்கூட அனுமதிக்கப்படாமல் இருந்த காலத் தில், அவர்களையும் ஹிந்தி எதிர்ப்பு போராட்ட களத்தில் குதிக்க வைத்ததே தந்தை பெரியாரின் சாதனை.
முதல் பெண்கள் மாநாட்டில் பேசிய டாக்டர் தருமாம்பாள் முதல் தாமரைக்கண்ணி அம்மையார் வரை தங்களது முழு உரையிலும் தமிழ் உரிமையை மையப்படுத்தியே பேசினர். குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் 3 கோடி மக்களில் 95% பேர் இன்னமும் எழுதப்படிக்க தெரியாமல் இருக்கும் நிலையில், இதில் மூன்றாவது மொழி ஹிந்தியை திணிப்பது நியாயமா என்று தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
பெண்கள் மாநாட்டின் மூலம் உறக்கத்தில் இருக்கும் தமிழர்களை தட்டியெழுப்புவதே இலக்கு என்று அறைகூவல் விடுத்த தாமரைக்கண்ணி அம்மையார், ஹிந்தி நுழைவால் தமிழ்நாட்டில் வடநாட்டவரின் வருகை அதிகரிக்கும் என்று 85 ஆண்டுகளுக்கு முன்பே அந்த மேடையில் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘ஹிந்தி அதற்குரிய இடத்திலிருந்தால் அதைப்பற்றி நாம் கவலைப்படப் போவதில்லை. நமது தாய்மொழிக்குரிய இடத்தில் அது வலுக்கட்டாயமாக வந்து புகுவதால்தான் நாம் அதை வெறுக்கிறோம். தமிழ்நாட்டில் விருப்பமுள்ளவர்கள் அதைப் படிப்பதில் எனக்கொன்றும் தடையில்லை. இதுதான் என் கருத்து’ என்று அன்றே ஹிந்தி எதிர்ப்பு குறித்த அரசியல் புரிதலை வெளிப்படுத்தியுள்ளார்.
பெண்கள் சிறைபுகும் போராட்டம்
மாநாடுகள், பேரணிகள், கூட்டங்கள் நடத்துவதோடு மட்டுமன்றி ஆண்களைப் போலவே பெண்களும் சிறைபுகும் போராட்டம் நடத்த வேண்டும் என்பதே இந்த மாநாட்டின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. மாநாட்டில் தந்தை பெரியாரின் உரைவீச்சால் உணர்வூட்டம் பெற்ற பெண்கள் மாநாடு முடிந்த இரண்டு நாட்களில் சென்னை இந்து தியாலஜிக்கல் பள்ளி முன்பு ஹிந்தி திணிப்புக்கு எதிராக மறியல் செய்ய முயன்றனர். அதில், டாக்டர் எஸ். தருமாம்பாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், மலர்முகத்தம்மையார், சீதம்மாள்(தருமாம்பாள் அவர்களின் மருமகள் தனது மூன்று வயது, ஒரு வயதுடைய மங்கையர்க்கரசி, நச்சினார்க்கினியன் ஆகிய இரு குழந்தைகளுடன்) பட்டு அம்மாள் (திருவாரூர் பாவலர் பாலசுந்தரம் மனைவி) , பழனியப்பா, பிஸ்மல்லா சாகிப் ஆகிய இரு ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போதிலும் நீதிமன்றத்தையே பிரச்சார மேடையாக மாற்றி இறுதி வரை தான் செய்தது தவறு என்று ஒப்புக்கொள்ளாமல், சிறை சென்றனர் இந்த பெண்கள். முதல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மட்டும் 73 பெண்கள் மற்றும் அவர்களுடன் 32 குழந்தைகளும் சிறைக்கு சென்றுள்ளனர். இவர்களோடு 1164 ஆண்களும் சிறைக்கு சென்றுள்ளனர்.
மேலும் காவல்துறை சித்ரவதைக்கு ஆளாகி நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள் பலர். அப்படி இறந்தவர்களில் முக்கியமானவர்கள் தான் பத்மாவதி மற்றும் தனலட்சுமி.
தமிழ் வாழ்க என்ற வாசகத்துடன் சேலை கட்டியதற்காக நிகழ்த்தப்பட்ட கொடுமை
1938இல் ஹிந்தி எதிர்ப்பில் தனித்தமிழ்நாடு கேட்டு தமிழ்வாழ்க சேலை கட்டியதற்காக கைது செய்யப்பட்ட பத்மாவதி காவல்துறையினரால் துன்புறத்தப்பட்டு உயிர் துறந்ததாக மூலக்கொத்தளம் சுடுகாட்டில் உள்ள அவரது கல்லறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது படத்தை அப்போதைய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான என்.வி. நடராசன் அவர்கள் திறந்து வைத்துள்ளார்.
காவல்துறையினரின் கொடுமைகளால் கருச்சிதைவு ஏற்பட்டு நோயுற்று அதே காரணத்தால் உயிர் துறந்தார் என அவரது கல்லறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது கல்லறையை தொழிலாளர் நலத் துறை அமைச்சரான கா. இராசாராம் திறந்து வைக்க, அவரது படத்தை மணியம்மையார் திறந்து வைத்துள்ளார்.
1967ஆம் ஆண்டு அமைந்த அண்ணாவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த முதல் தாழ்த்தப்பட்ட சமூக பெண் அமைச்சரும், ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முன்னின்றவருமான அன்னை சத்யவாணி முத்துவின் கல்லறையும் இதே மூலக்கொத்தளம் சுடுகாட்டில் தான் உள்ளது. மேலும் சில ஆண் போராளிகளும் இங்குதான் நல்லடக்கம் செய்யபட்டுள்ளனர். இதற்கு காரணம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ராயபுரம் பகுதியும் முக்கிய பங்கு வகித்துள்ளது. மாதர் முற்போக்கு மன்றத்தின் பல பொதுக்கூட்டங்கள் இந்தப் பகுதியை சுற்றி நடந்துள்ளதை விடுதலை உள்ளிட்ட நாளிதழ்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.
தந்தை பெரியாரின் வழிகாட்டுதலின் படி
“படித்த பெண்கள், நடுத்தர வர்க்க பெண்கள், படிக்காத பெண்கள், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பெண்கள் என எல்லா தரப்பை சேர்ந்தவர்களும் இந்த மொழிப்போரில் கலந்துக் கொண்டனர். அதை அவர்கள் ஏதோ சாதாரணமாக நடத்தவில்லை. தந்தை பெரியாரின் வழிகாட்டுதலின் படி மிகவும் முறைப்படுத்தப்பட்ட வழியில், பெண்களை ஒருங்கிணைத்து சிறப்பான அமைப்பை நடத்தினர்.
பெண்கள் மீது அப்போது வைக்கப்பட்ட விமர்சனங்கள் மிக மோசமானவை. ராஜகோபாலாச் சாரியாரே குழந்தைகளுக்கு பால் வாங்க காசில்லாமல் இந்த பெண்கள் போராட்டம் செய்து குழந்தைகளோடு சிறைக்கு வருகின்றனர் என விமர்சித்தார். ஆனால் அதையெல்லாம் கண்டித்துவிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.”