திருவள்ளுவருக்குத் தனி விழா எடுக்கும் முதலமைச்சரின் திட்டம் வரவேற்கத்தக்கது – குமரிமுனையில் கூடுவோம் வாரீர்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
திருக்குறள். குமரிமுனையில் முத்தமிழறிஞரால் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டதன் அடிப்படையில், வெள்ளி விழாவை ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சரால் சிறப்புடன் கொண்டாடப்பட இருப்பது மகிழ்ச்சிக்குரியது – வரவேற்கத்தக்கது – குமரிமுனையில் மக்கள் கடல் சங்கமிக்கட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
திராவிட இயக்கமும், அதன் ஆட்சியான ‘திராவிட மாடல்’ ஆட்சியும் வெறும் அரசியல் பதவிகளையே குறி வைத்துத் தொடங்கப்பட்ட கட்சியோ, ஆட்சியோ அல்ல; மாறாக, இயக்கமாகவே இயங்கி, பகுத்தறிவு, பண்பாடு, கலை, நாகரிகத்தில் தனித்ததோர் உயர்நிலையைப் பெற்று, மக்களிடையே முளைத்து, இன்று பரந்து விரிந்து வரும் ஒரு பண்பாட்டுப் பாதுகாப்புக்கான பாசறை ஆகும்.
திராவிடம் என்பது என்ன?
‘திராவிடம்’ என்பதை இன்று யானையை வருணித்த ‘அந்த அய்ந்து பேரின்’ பரிதாப வருணணை, கீதை போன்று புரிதல், குழப்பமாகவே சிலருக்கு இருந்து வருவதனால், அதன் மாண்பும், விழுமியமும் ஒருபோதும் மாறாது; குறையாது; குன்றாது!
உளறுபவர்களின் அரைவேக்காட்டுத்தனத்தைக் கண்டு அகிலம் – அறிவுலகம் கைகொட்டிச் சிரிக்கும்!
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ – சமத்துவம் – இது திராவிடம் – இத்திராவிடத் தத்துவத்தின் பரப்புரை மானிடப் பரப்பு முழுவதற்குமே!
ஆரியம் பிறப்பினால் பேதம் – ஹிந்து மதமும், கடவுள்களும் வேதம் தொடங்கி மனுஸ்ருமிதி, கீதை முதலியன கூறும் எல்லாமே – வருணாஸ்ரமமே மக்களை ஆளவேண்டும்; அதன் எல்லை – ஹிந்து மத எல்லை மட்டுமே!
‘அனைவருக்கும் அனைத்தும்’
‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’
‘எல்லாருக்கும் எல்லாமும்‘
இந்த சமூக நீதிதான் சம வாய்ப்புதான் திராவிடம்!
இரு வேறு எதிர்மறை தத்துவங்களும், நடை முறைகளும் ஆணும் – பெண்ணும் சம உரிமை உள்ள மானுடத்தின் ஒரே கூறுதான் – இது திராவிடம்.
பெண்கள் ‘நமோ சூத்திரர்கள்’ – மனுஸ்மிருதி, வேதம் அவர்களை சம தகுதியானவர்கள் இல்லை என்று சொல்பவை – எனவே, எந்த உரிமையும் பெறத் தகுதியற்றவர்கள் அவர்கள்.
இப்படிப் பலப் பல!
ஆரியப் பண்பாட்டை
எதிர்க்கத் தோன்றியதே திருக்குறள்!
ஆரியப் பண்பாட்டை 2500 ஆண்டுகளுக்குமுன்பே – அது நுழைவதைக் கண்டறிந்து எச்சரிக்கும் வகையில், கண்டிக்கவே திருக்குறளை திருவள்ளுவர் எழுதினார்.
ஆனால், எந்த மதச் சாயத்தையும் அவர் கொள்ளவே இல்லை!
வள்ளுவரின் பார்வையோ – உலக மானுடப் பார்வை!
இதனை அதிகமாக விளம்பரப்படுத்தாமலே, இருட்டில் வைக்கப்பட்டிருந்தபோது, அதற்குரிய வெளிச்சத்தைப் பாய்ச்சிய அடிநாள் சுயமரியாதை இயக்கமும் திராவிடர் இயக்கமுமாகும்!
திருவள்ளுவருக்குரிய பெருமை, திருக்குறளின் அருமையை சென்னையில் தனி மாநாடே 1949 இல் கூட்டி உலகத்தை ஈர்த்தது திராவிடர் கழகம்!
திருவள்ளுவருக்குத் தனி விழா எடுக்கும்
‘திராவிட மாடல்’ அரசு
திராவிடர் கழகம் – தந்தை பெரியார், அண்ணா, கலைஞர், நாவலர் என்ற வரிசையில் இன்று நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள், குமரியில் வள்ளுவருக்குத் தனி விழா எடுப்பதுபற்றி விடுத்துள்ள அறிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது.
காலத்தின் தேவையறிந்த செயற்பாட்டினை அறி விக்கும் ஒரு பண்பாட்டுப் பாதுகாப்பு ஏவுகணையாகும்!
திருவள்ளுவருக்குக் ‘காவிச் சாயம்’ பூசி, அதை ஒரு ஹிந்து மத நூல் என்று நிறுவிட ஆரியம் தனது அதிகாரச் சூழலைப் பயன்படுத்திச் செய்திட துடிக்கிறது.
அந்த நிலையில், திருக்குறள் மதங்களுக்கு அப்பாற்பட்ட – மனிதர் அனைவருக்கும் உரிய உறவும், உரிமையும் கொண்டுள்ள நூல் என்பதை உலகுக்கு உணர்த்திட நல் வாய்ப்பு!
‘திராவிட மாடல்’ முதலமைச்சர் அழைக்கிறார், ‘‘திக்கெட்டும் உள்ள திருக்குறள் நெறியினரே, திரண்டு வாருங்கள் – குமரிமுனையில் ஒரு புது வெள்ளம் பாயட்டும்!’’
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் எண்ணற்ற தன்மான, தமிழ் மானப் பெரும்புலவர்கள் அனைவரது உழைப்புக்கும், விளைச்ச லாக பண்பாடு, மான மீட்புப் பணியாக அவ்விழா அமையட்டும்!
அனைவரும் வாரீர்!! வாரீர்!!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
13.11.2024