திருத்தணி, நவ.12– திருத்தணி அருகே மத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் வயது வந்தோருக்கு நடைபெற்ற அடிப்படை எழுத்து தோ்வை ஒன்றிய அரசு மனிதவளமேம்பாட்டுத் துறை முதுநிலை ஆலோசகா் குல்தீப் குமாா் 10.11.2024 அன்று ஆய்வு செய்தாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில், வயது வந்தோருக்கு அடிப்படை எழுத்துகள் மற்றும் படிப்பதற்கு, பள்ளிச்சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்ககம் மூலம், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2023-2024 ஆண்டின் கீழ் பாடங்கள் கற்பிக்கப்பட்டன.
மாவட்டத்தில் மொத்தம், 17,500 பேருக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. இவா்களுக்கு பாரத எழுத்தறிவுத் திட்டம் மூலம், அடிப்படை எழுத்தறிவுத் தோ்வினை மாவட்டத்தில், 1,042 மய்யங்களில், 17,400 போ் பங்கேற்று தோ்வு எழுதினா்.
இதில், திருத்தணி ஒன்றியத்தில், புச்சி ரெட்டிப்பள்ளி, மத்தூா், தரணிவராகபுரம் உள்பட, 27 ஊராட்சிகளில் இயங்கி வரும் ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில், மொத்தம் 78 தோ்வு மய்யங்களில், தோ்வு நடந்தது. இதில், 1,060 வயது வந்தோா் பங்கேற்று தோ்வு எழுதினா்.
மத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த தோ்வு மய்யத்தில், மனிதவளமேம்பாட்டுத் துறை முதுநிலை ஆலோசகா் குல்தீப் குமாா், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை மாநில ஒருங்கிணைப்பாளா் மாயழகு ஆகியோா் ஆய்வு செய்தனா்.
ஆய்வின் போது, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் பாலமுருகன், திருத்தணி வட்டார கல்வி அலுவலா் சலபதி, வட்டார மேற்பாா்வையாளா் சிவகுமாா், ஆசிரியா் பயிற்றுநா்கள் சுடலை ராஜன், செந்தில் குமாா், பள்ளி தலைமை ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவா்கள் உடனிருந்தனா்.
இந்தத் தோ்வில் தோ்ச்சி பெறும் முதியோருக்கு, சான்றுகள் வழங்கப்பட்டது.