மதத்தின் பெயரால் நாட்டு மக்களிடையே பா.ஜ.க., பிரிவினையை உருவாக்குகிறது. ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு வாக்காளர்கள் ஒற்றுமையாக இருந்து, ஜார்க்கண்டில், ‘இந்தியா’ கூட்டணியை மீண்டும் வெற்றி பெற வைக்க வேண்டும். பா.ஜ.க.,வை விரட்டியடிக்க வேண்டும்.
– தேஜஸ்வி
தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
“யாதும் ஊரே, யாவரும் கேளிர்”
அய்.நா சபையில் ஒலித்த தமிழர் குரல்
திருச்சி சிவா எம்.பி. பதிவு
நியூயார்க், நவ.12 அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அய்.நா. சபையின் 79ஆவது கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா சார்பில் மாநிலங்களவை திமுக குழுத்தலைவர் திருச்சி சிவா உள்பட 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய திருச்சி சிவா, இந்தியாவில் வறுமையை ஒழிப்பதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், பெண்களுக்கான அதிகாரம், இளைஞர்கள் குறித்து நான் கவனம் செலுத்தி பேசுகிறேன் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றும், நாங்கள் நிலையான வளர்ச்சியை பெற்று எங்கள் அனுபவங்களை நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
அதோடு இறுதியாக “யாதும் ஊரே, யாவரும் கேளிர். உலகமே ஒரே குடும்பம்தான். அதன் காரணமாக உலகில் உள்ள அனைவரும் நம் சொந்தங்கள்தான்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். அவரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க
உச்சநீதிமன்றம் மறுப்பு
புதுடில்லி, நவ.12 வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி கடந்த 2018-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தபோராட்டத்தில் 100-ஆவது நாள் ஏற்பட்ட வன்முறை காரணமாக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்து 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். எனவே ஸ்டெர்லைட் ஆலையை பூட்டி தமிழ்நாடு அரசு சீல் வைத்தது.
ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு தொடர்பான இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் அப்போ தைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.
வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் (29.02.2024) தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி வேதாந்தா குழுமத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா குழு மத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. ஏற்ெகனவே வழங்கப்பட்ட தீர்ப்பை சீராய்வு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி வேதாந்தா குழுமத்தின் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பு
வரலாறு காணாத வீழ்ச்சி
மும்பை, நவ.12 அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளது. நேற்று (11.11.2024) ஒரு டாலருக்கு மதிப்பானது இந்திய ரூபாயில் 84.385 பைசாவாக சரிந்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றது இந்தியாவிற்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்த நிலையில், மாறாக இந்திய பங்குசந்தையானது கடும் சரிவை சந்தித்து வருகிறது.
இந்திய பங்குசந்தையின் நேற்றைய நிலவரப்படி நிஃப்டி 24087.25 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை தொடங்கிய நிலையில், 24141 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. அதே போல் சென்செக்ஸ் 79,298 புள்ளிகளில் தொடங்கிய வர்த்தகமானது 79496 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் ரூ1.14 லட்சம் கோடி மதிப்பிலான இந்தியப் பங்குகளை விற்ற வெளிநாட்டு நிதிநிறுவனங்கள், இந்த மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் 20,000 கோடி மதிப்பிலான இந்திய பங்குகள் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய பங்குசந்தையானது சரிவை கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ரிசர்வ் வங்கி தனது வெளிநாட்டுச் செலவாணி கையிருப்பில் இருந்து அதிக அளவு டாலரை விற்றுள்ளதால் வெளி நாட்டுச் செலாவணி கையிருப்பு வெகுவாக குறைந்துள்ளது. நவம்பர் 1ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 267.5 மில்லியன் டாலர்கள் மற்றும் முந்தைய வாரத்தில் 346.3 மில்லியன் டாலர்கள் வசூலில் சரிவு சந்தித்துள்ளது.