சேலம், ஜூலை 28 – சந்திரயான்-3 விண்கலத்தின் இன்ஜின், எரிபொருள் டேங்க் பகுதியை பாதுகாக்கும் கவசமாக சேலம் உருக்காலையில் உற்பத்தி செய்யப்பட்ட இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சேலம் உருக்காலை நிர்வாக இயக் குநருக்கு இஸ்ரோ நிர்வாகம் பாராட்டு சான்றிதழ் அனுப்பியுள் ளது. இஸ்ரோவின் சிறீஹரிகோட்டா மய்யத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம்-3 எம்4 ராக்கெட் மூலம் கடந்த 14ஆம் தேதி மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. வெற்றிகரமாக பூமியின் சுற்று வட்டப்பாதைக்கு சென்றது.
அங்கிருந்து நிலவை நோக்கிய பயணத்திற்காக விண்கலத்தின் அடுத் தடுத்த நகர்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். எல்விஎம்-3 எம்4 ராக்கெட் விண் கலத்தை நிலவை நோக்கி பயணிக்கச் செய்யும் செயல்முறை வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 1 மணி வரை மேற் கொள்ளப்பட இருக்கிறது. அதை தொடர்ந்து குறிப்பிட்ட வட்டப் பாதையில் இருந்து நிலவின் மேற்பரப்பில் ஆகஸ்ட் 23ஆம் தேதி விண்கலம் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த சந்திரயான்-3 விண்கலத்தில் சேலம் உருக்காலையில் தயாரிக்கப் பட்ட இரும்பு பயணிக்கிறது. அந்த இரும்பு சந்திரனில் இறங்கி தனது வெற்றித்தடத்தை பதிக்க இருக்கிறது. சந்திரயான்-3 விண்கல தயாரிப்புக்கு உறுதுணையாக இருந்த நிறுவனங் களுக்கு இஸ்ரோ நன்றி தெரிவித்து, பாராட்டு சான்றுகளை அளித்து வருகிறது. அந்த வகையில், சேலம் உருக்காலை நிர்வாக இயக்குநர் வி.கே.பாண்டேவுக்கு இஸ்ரோவின் பொருட்கள் மற்றும் உற்பத்தி பிரிவு துணை இயக்குநர் மருதாச்சலம் பாராட்டு சான்றிதழை அனுப்பி யுள்ளார்.
அந்த சான்றில், ‘‘சந்திரயான்-3 பணிக்காக எல்விஎம்-3 எம்4 ராக் கெட்டில் சிஇ20 இன்ஜினின் த்ரஸ்ட் சேம்பரில், சேலம் உருக்காலையில் உற்பத்தி செய்து வழங்கப்பட்ட 2.3 மி.மீ., கொண்ட அய்சிஎஸ்எஸ்-1218-321 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வெற்றி கரமாக பொருத்தப்பட்டு சென்றிருக் கிறது. சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்து தொழில் நுட்ப ஆதரவை வழங்கியதை இந்தச் சந்தர்ப்பத்தில் மகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறேன். இப்பொருட்களை தயாரிப்பதில் உள்ள நிபுணத்துவம் மற்றும் தேவையான தர நெறி முறையுடன் விரைவாக வழங்கிய தற்காக சேலம் உருக்காலை குழுவினரை அங்கீகரித்து பாராட்டு கிறோம்,’’ என குறிப்பிட்டுள்ளார்.
சேலம் உருக்காலை அதிகாரி களிடம் கேட்டபோது, கடந்தமுறை சந்திரயான்-2 விண்கலம் ஏவப்பட்ட போது சேலம் உருக்காலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டுச் செல்லப் பட்டு, அந்த விண்கலத்தின் கிரை யோஜெனிக் இன்ஜினில் பொருத்தப் பட்டது. அதுபோலவே தற்போதும் சந்திரயான்-3 விண்கலத்தில் இன்ஜின் மற்றும் எரிபொருள் டேங்க் பாதுகாப்பிற்கு கவசமாக சேலம் உருக்காலையின் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிக வெப்பத்தை தாக்கும் திறன் கொண்ட நம்பர்-1 உற்பத்தி பொருளாக இந்த ஸ்டீல் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கியிருக்கிறோம். சந்திரனில் விண்கலம் இறங்கும் போது, அதில் சேலம் உருக்காலையும் கால் பதிக் கிறது என்பதில் பெருமையளிக்கிறது,’’ என்றனர்.