சென்னை, நவ. 11- தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஊரக மகளிர் சுயஉதவிக் குழுக்களின் 39 லட்சம் உறுப்பினர்களுக்கு திட்ட செயலாக்கம் குறித்த ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் ஊரக பகுதிகளில் செயல்படும் அனைத்து சுய உதவிக்குழுக்களுக்கும் திட்ட செயலாக்கம் குறித்த ஒரு நாள் புத்தாக்க பயிற்சி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர்உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி ஊரகப் பகுதிகளில் உள்ள 3.29 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் 39.48 லட்சம்உறுப்பினர்களுக்கு ரூ.30 கோடிமதிப்பீட்டில் நிர்வாகம், நிதிமேலாண்மை மற்றும் தலைமைத்துவம் குறித்த ஒரு நாள் புத்தாக்க பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்தை வாய்ப்புகள்: இந்த பயிற்சியில் ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பண்ணை மற்றும் பண்ணை சாராசெயல்பாடுகள், சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகள், திறன்பயிற்சிகள், வங்கிக் கடன் இணைப்புகள், பாலின விழிப்புணர்வு, சுய தொழில் மேம்பாடு உள்ளிட்டவை குறித்தும், தமிழ்நாடு அரசின் திட்டங்களான மக்களைத் தேடி மருத்துவம், காலை உணவுத் திட்டம் போன்றவற்றில் சுய உதவிக் குழுக்களின் பங்களிப்பு குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இதையொட்டி அந்தந்த ஊராட்சிகளில் 3 குழுக்களுக்கு ஒரு அணி(36 பேர்) என்ற வகையில் 1.09 லட்சம் அணிகளை சேர்ந்த 39.48லட்சம் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த புத்தாக்க பயிற்சியை வரும் 2025 ஜனவரிக்குள் நிறைவு செய்யுமாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அக்டோபர் மழையின் கொடை
7 மாவட்டங்களில்
நிலத்தடி நீர்மட்டம் உயர்வு!
சென்னை, நவ. 11- தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வந்தாலும் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் அக்டோபர் மாதத்தில் 7 மாவட்டங்களில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை, வெப்பச் சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அண்மையில் சென்னை, மதுரையில் ஒருநாளில் ஓரிரு இடங்களில் 10 செ.மீ. வரை மழை பொழிந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை.தமிழ்நாடு நீர்வள ஆதாரத் துறை, மாநிலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கிணறுகள் மூலம் மாதந்தோறும் நிலத்தடி நீர்மட்டத்தை கணக்கிட்டு வருகிறது.
கிருஷ்ணகிரியில் அதிகம்: அதன்படி, கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, கடந்த அக்டோபர் மாதத்தில் கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், நீலகிரி, சிவகங்கை, தேனி, திருநெல்வேலி ஆகிய 7 மாவட்டங்களில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மீதமுள்ள 30 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 0.63மீட்டர் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதேபோல் தமிழ்நாட்டிலேயே தர்மபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 1.35 மீட்டர் குறைந்துள்ளது என்று நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.
பி.எச்.டி. படிக்க நெட் தேர்வா?
சென்னையில் காங்கிரஸ் சார்பில் போராட்டம்
சென்னை, நவ. 11- பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., கடந்த மார்ச் 27ஆம் தேதி, முனைவர் பட்டப்படிப்பான பிஎச்.டி., படிக்க, நெட் தேர்வு எழுத வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு காங்கிரஸ் ஆராய்ச்சி பிரிவு சார்பில், சென்னையில், பட்டினிப் போராட்டம் நடந்தது.
போராட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு காங்., ஆராய்ச்சி பிரிவு தலைவருமான மாணிக்கவாசகம் கூறியதாவது:
ஏற்கெனவே, பல்வேறு தகுதித் தேர்வுகள் இருக்கும் நிலையில், ஒன்றிய அரசு நடத்தும் இந்த தேர்வால், கிராமப்புற மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், பகுதி நேர மாணவர்கள் ஆகியோர், பிஎச்.டி., படிக்கும் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களின் அரசு மற்றும் தனியார் கல்லுாரி ஆசிரியர் கனவு தகர்ந்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள இரு மத்திய பல்கலைகள் உட்பட நாட்டில் உள்ள 45 மத்திய பல்கலைகளில் சேர, ‘க்யூட்’ எனும் நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இதனால், மாநில பாடத்திட்டத்தில் படித்த, தமிழ்நாடு மாணவர்களுக்கு, மத்திய பல்கலைகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.