சென்னை, நவ. 11- குழந்தைக ளுக்கு தடுப்பூசி தவணைகளை தவறவிடாமல் முறையாக செலுத்து வதை உறுதி செய்ய சுகாதார மாவட்டங்கள்தோறும் சிறப்புக் கண்காணிப்பு நடவடிக்கையை பொது சுகாதாரத் துறை மேற் கொண்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தடுப்பூசி செயல்பாட்டுக்கு மதிப்பீடு வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் கண்காணிப்பு மேற் கொள்ளப்படுகிறது.
தமிழ்நாட்டில் தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு வழங்கப் படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 9.40 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப் படுகிறது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 11,000 இடங்களில் தடுப் பூசிகள் அளிக்கப்படுகின்றன. இந்நிலையில், முதல் தவணைக்குப் பிறகு அடுத்த தவணையை சில குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் பெற்றோர் செலுத்துவதில்லை எனத் தெரிகிறது.
இதன் காரணமாக 100 சதவீத தடுப்பூசி இலக்கு அனைத்து இடங்களிலும் எட்டப்படுவதில்லை. இதையடுத்து, இதைக் கண்காணிக்க சிறப்பு நடவடிக்கையை பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சுகாதார மாவட்டங்களில் 90 முதல் 95 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டால் 5 மதிப் பெண் அதற்கு வழங்கப்படும்.
95 சதவீதத்துக்கு மேல் செயல்பாடு விகிதம் இருந்தால் 10 மதிப்பெண்கள் அளிக்கப்படும். ஒருவேளை 90 சதவீதத்துக்கும் குறைவாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால் அந்த மாவட்டத்துக்கு பூஜ்ஜியம் மதிப்பெண்களே வழங்கப்படும். அவ்வாறு எந்த சுகாதார மாவட்டம் தடுப்பூசி செயல்பாட்டில் பின்தங்கியுள்ளது என்பதைக் கண்டறிந்து, அதை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.